Archive for November 2010

பிகார் வெற்றி யார் தந்தது?

November 30, 2010

நான் இராகுல் காந்தியின் பிகார் பிரச்சாரம் பிசுபிசுத்ததை நக்கலடித்துப் போட்டிருந்த பதிவுக்கு திரு.அருள் தன் பதிவைப் பின்னூட்டமாகத் தந்திருந்தார். (நல்லாருக்கே! பதிவை இப்படியும் பிரபலப்படுத்தலாமோ!!).

அதில் அவர் எழுதியிருப்பதன் சாராம்சம்: பிகாரில் சாதி தான் வென்றது. புத்திசாலித்தனமாக அதை மறைக்க பத்திரிக்கைகள் வளர்ச்சி, நிர்வாகம் என்று சிறுகற்களை(ஜல்லிக்கு நானறிந்த தமிழ்) அடிக்கின்றன. நிதிஷ் தாழ்த்தப்பட்ட ஜாதியையும், சுஷில் உயர்ஜாதியையும் அண்டக்கட்டிக் கொண்டார்கள்.அதனால் தான் வென்றார்கள்.

இது (வாழப்பாடி ராமமூர்த்தி ஸ்டைலில் சொன்னால்) தார்பாயில் வடிகட்டிய புளுகு. இந்த அபத்தத்திற்கு சாடப்பட்ட பத்திரிகைகளையே துணைக்கு வைத்திருக்கிறார்.ஊகங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. இப்படி நடந்தால், இது இருந்தால், இவர்கள் சேர்ந்தால், இவர்கள் பிரிந்தல் இன்னது நடக்கும் என்பதுதான் ஊடகங்கள் தரும் அலசல்கள்.

இப்படியும் இருக்கலாம் என்று பத்திரிகையில்  வந்த  ஒரு கருத்தைக் கொண்டு இப்படித்தான் நடந்தது என்று முழங்குவது முழுமையான அலசல் ஆகாது. நிதீஷுக்கு பிகாரில் சாதிப் பின்னணி பெரிதாகக் கிடையாது. அவரது குர்மி சாதியினர் பிகாரில் 15%   உள்ளனர். ஆனால் 2005ல் முதல்வரான போது அவர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு நிதிஷுக்கு இல்லை. இப்போது சற்றே உயர்ந்திருக்கிறது என்றால், அது அவரது நல்லாட்சி காரணமாகத் தான்.

சுஷில் குமார் மோடி ஏதோ உயர்ஜாதி ஓட்டுக்களை ஐந்தாண்டுகளாகப் பாக்கெட்டில் வைத்திருந்து இந்தத் தேர்தலில் பெட்டிக்குள் போட்டுவிட்டார் என்பது போலப் பேசுவது விவரங்களின் விவரமான அலசல் அல்ல.

மோடியும் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்தான். தவிரவும் சுஷில் மோடியின் மனைவி ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதால் சாதிப்பற்று மிகுந்த பிகார்  உயர்சாதி மக்கள் லேசி்ல்  ஏற்க மாட்டார்கள். 2005ல் துணை முதல்வராக பாஜக அவரை அறிவித்த போது எதிர்ப்பு எழுந்தது. முதல்வர், துணை முதல்வர் இருவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தால் உயர் சாதியினர்  வாக்கு கிடைக்காது என்றும் சொன்னார்கள் இரு கட்சியினரும். நிலைமை அப்படி இருக்க ஏதோ இருவரும் சாதிகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வென்றது போலப் பேசுவது அபத்தம்.

ரோடுகளைப் பார்த்துப் பல்லாண்டுகளான பிகாரில் தேஜகூ ஆட்சியில் ரோடுகள் போடப்பட்டன. சட்டம் ஒழுங்கு சீராக்கப்பட்டது. கடத்தல்கள் குறைந்தன. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தனர். நிதிநிர்வாகம் சீரானது. நீதிநிர்வாகம் செம்மைப் படுத்தப்பட்டது. வாரந்தோறும் மாவட்ட நீதிபதிகளுடன் திறனாய்வு நடத்தப்பட்டு குற்றவியல் வழக்குகள் விரைந்து தீர்க்கப்பட்டன.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவசமாக மிதிவண்டி  தரப்பட்டது.  சீருடையும் பாடப்புத்தகங்களும் வாங்க ஆண்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தரப்பட்டது. பெற்றோர் மலிவு விலையில் துணிவாங்கித் தைத்துவிட்டு மீதிப் பணத்தை சொந்தச் செலவுக்கு வைத்துக் கொள்வர், பழைய புத்தகங்கள் வாங்கிவிட்டு புதியனவற்றின் விலைக்குக் கணக்குச் சொல்வர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால் 87% பெற்றோர் சரியான மு்றையிலேயே பணத்தைச் செலவு செய்தனர்.

நல்லாட்சி செய்யாவிடில் ஓட்டுக் கிடைக்காது என்ற நிலைதான் நிதிஷ்-சுஷில் கூட்டணியின் இந்த நல்லாட்சிக்குக் காரணம். நல்லது செய்தாலும் செய்யாவிடிலும் ஓட்டு உறுதி என்று இருந்திருந்தால் லாலு போல ஆலூ சமோசா சாப்பிட்டுக் கொண்டும், பான்பீடா துப்பிக்கொண்டும் காலத்தை ஓட்டியிருப்பார்கள்.

இந்த வெற்றி தரக்குறைவானது என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று துடிப்பது, சுய வளர்ச்சி தவிர வேறு வளர்ச்சிகளை  அறியாத தன்னலக் கும்பலும் அவற்றின் அடியொற்றல் தவிர வேறு அரசியல் நிலைப்பாடு அறியாத அப்பாவிகளுமே என்பது உண்மைகளைத் தெளிவாக அலசினால்  புலனாகிறது.

காளமேகத்தைத் துணைக்கழைத்து  இந்த அரைகுறை மேதாவிகளின் போக்கு பற்றி ஒரு கவிதை:

தேர்தல் செருப்புக்கு கட்சிகளின்

வாக்குக் கணக்குப் பார்க்கையிலே

தேஜகூ பெருவெற்றி சிறுத்துரைக்கத்

தாமேங்கும் காரணத்தை யாமறிய

எடுத்து ரைப்பீர் விளக்குமாறே!

Advertisements

ஐயனுக்கோர் ஐயம்!

November 25, 2010

நாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=133004

இந்த எட்டடி, பதினாறடி உவமைக்கும் 176000 கோடி ரூபாய் கையாடலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

பீகார் தேர்தல் தரும் பாடம் – பெண்கள் காரியவாதிகள்

November 25, 2010

Times of India பத்திரிக்கை ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது:

ராகுல் காந்தி ஒரு மன்மதக் குஞ்சு. பாட்னா கல்லூரி மாணவிகள் அவரது சிரிப்பில் கிறங்கி ‘ஆங்! அப்படிப் சிரிக்காதீங்க! எனக்கு வெக்கமா இருக்கு’ என்று மயங்கிச் சரிந்து விட்டனர் என்ற ரீதியில் எழுதியுள்ளனர்.

“ஏய்! ராகுல் ரொம்ப அழகுடி!!” என்று ஒரு மாணவி ஜொள்ளுவிட்டாராம். இன்னொரு மாணவி இரவெல்லாம் ராகுலைப் பற்றி கூகிளில் தேடித்தேடிப் படித்துவிட்டு, மறுநாள் நடக்கப் போகும் சந்திப்பை எண்ணியபடி படுக்கையில் தூக்கம் வாராமல் உருண்டு புரண்டு கொண்டிருந்தாராம்.

Rahul’s ‘deadly smile’ floors fair brigade at Patna College என்று தலைப்பு வேறு.

http://timesofindia.indiatimes.com/city/patna/Rahuls-deadly-smile-floors-fair-brigade-at-Patna-College/articleshow/5529578.cms#ixzz16DxMJe7p

பீகாரில் வாக்கெடுப்பு முடிந்தபின் கணக்குப் பார்த்ததில் பெண்கள் 54.8% வாக்களித்திருந்தனர். சரி மேற்குறிப்பிட்ட செய்தியின்படி ஆணழகன் ராகுல்காந்தி கல்லூரிப் பெண்களை வசீகரித்து வாக்களிக்க வைத்துவிட்டாரோ என்று யோசித்தால், இல்லை என்பதே பதில்.

ஆக, ஆணழகன் ராகுல் இருந்தும் அவருடைய அழகில் பெண்கள் மயங்கியும், 54.8% பேர் ஓட்டளித்தும்  பீகாரில் காங்கிரஸ் கவ்விய மண் பாலாற்றில் அள்ளப்படுவதைவிட அதிகம்.

பெண்கள் அழகை ரசிக்கிறார்கள், “அழகுக் குட்டிச் செல்லம்” என்று கொஞ்சுகிறார்கள், ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை என்று வந்துவிட்டால் அழகுணர்ச்சியைத் தூக்கி ஓரமாய்ப் போட்டு விடுகிறார்கள். என்னே பெண்ணினத்தின் வஞசனை!! எத்தைச் செய்தால் காங்கிரஸ் வெல்லும்?

Spectrum Gate:திறக்குமா நீதியின் கதவுகள்?

November 21, 2010

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய்கள் அரசுக்கு வர வேண்டிய பணம் வரவில்லை. ஏன்? எங்கே போனது? மந்திரி எடுத்துக் கொண்டார் என்கிறார்கள், அவரைச் சார்ந்தோர் பிரித்துக் கொண்டார் என்கிறார்கள், மந்திரியார் மதிகெட்டுப் போய்க் குறைந்த விலைக்கு உரிமங்களை விற்றதனால் 176000 கோடி இழப்பு என்கிறார்கள்.

முதலில் இந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது என்ன? 2G என்பது தகவல் தொடர்பு முறையில் ஒரு வகை. FDMA, CDMA, TDMA ஆகிய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும். ஒலி, தகவல், மற்றும் படங்க்களை ஒரு கருவியிலிருந்து மற்றென்றுக்கு மாற்றித்தரும் செயல்பாடு. ராணுவம், உளவு உள்ளிட்ட அமைப்புகள் இந்தத் அலைவரிசையைப் பயன் படுத்தும். அதனால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சரக்கு கு்றைவு. தவறு நேர்ந்தால் தேசப் பாதுகாப்பு அமைப்புகள் முஷ்டியை மடக்கிக் கொண்டு சண்டைக்கு வரும். ஆனால் இதற்கு கிராக்கி அதிகம். ஆகவே அரசு இதை முறைப்படுத்தி உரிமம் வழங்கும்.

இந்த உரிமம் ஏலத்தில் விடப்படும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் 2007ல் அறிவித்தது.  ஆனால் திடீரென்று ஒரு நாள் மந்திரி ராசா ஏலம் கிடையாது. முந்திவந்து குறிப்பிட்ட நாளுக்குள் கேட்பவர்களுக்கு உரிமம் தருவோம் என்றார்.

உழவர் சந்தையில் காய்கறி விற்பவரைக் கேட்டால் சொல்லுவார் கிராக்கி அதிகமானால் விலையும் அதிகமாகத் தானே செய்யும் என்று. அப்படிப்பட்ட கிராக்கி உள்ள உரிமத்தை ஏலத்தில் விடுவது லாபகரமான செயல். கேட்ட விலைக்குக் கொடுத்தால் நல்ல விலை தேறாது என்பது உண்மை. ஆனால் வக்கீலுக்குப் படித்த ஆ.ராசாவுக்கு இது புரியவில்லை போலும். சினிமாக் கொட்டகையில் டிக்கெட் விற்பது போல முந்தி வந்தவருக்கே லைசென்சு என்று கொடுத்து முடித்து விட்டார்.

இந்த உரிமம் கிடைக்காத S-Tel என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதை மிரட்டி வாபஸ் வாங்க வைத்தாராம் அமைச்சர்.  சம்பந்தப் பட்ட நிறுவனமே அமைச்சரின் மிரட்டலால் வழக்கை வாபஸ் வாங்கினோம் என்று சொன்னது. எதற்காக இந்தக் பஞ்சாயத்து  என்று பார்த்தால் அந்த நிறுவனம் 6000 கோடி ரூபாய்க்குக் கேட்ட ஒரு லைசென்சு 1600 கோடிக்கு வேறு ஒருவருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் S-Tel  வேறு யாராவது 6000 கோடிக்கு மேலே கேட்டால் நாங்கள் விலையை மேலும் உயர்த்தித் தருகிறோம் என்று சொல்லியிருந்ததாம்.

அப்புறம் ஏனய்யா வலிய வந்த மகாலட்சுமியை வாசலோடேயே திருப்பி அனுப்பினார்கள் என்று பார்த்தால், உள்ளே ஊரை அடித்து உள்பாக்கெட்டில் போடும் வேலை நடந்திருக்கிறது. 1600 கோடிக்கு லைசென்சு வாங்கிய கம்பெனி அதில் கால்வாசியை 900 கோடிக்கு விற்றதாம்.

இது ஒரு உரிமத்துக்கு. இது போல நாடு முழுவதும் பல  பகுதிகளுக்குப் பல உரிமங்கள் தரப்பட்டிருக்கின்றன. மத்திய அரசாங்கத்தின் கணக்குப்பிள்ளையான CAG கணக்கு வழக்கெல்லாம் பார்த்துவிட்டு 176000 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்குக் காட்டுகிறார்.

இப்படி சல்லிசு ரேட்டில் வாங்கி அடுத்தவனுக்கு அதிக விலையில் விற்றவர்கள் டெலிபோன் கம்பெனிகளே கிடையாதாம். ரியல் எஸ்டேட் நிறுவனங்களாம். கட்டடம் கட்டும் கம்பெனிக்கு செல்போன் டெக்னாலஜி வேலையை எப்படிக் கொடுக்கலாம்? அதற்கு என்ன முன்அனுபவம் இருக்கிறது? தொலைத் தொடர்புத் தொழில் தெரிந்த யாராவது நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்களா? இந்தக் அத்தியாவசியக்  கேள்விகள் கேட்கப்படவே இல்லை. நம் கஜானாவுக்கு வரவேண்டிய பணம் இந்தக் கட்டிடக் காண்டிராக்டர்கள் பாக்கெட்டுக்குப் போய்விட்டது.

அந்த அதிக விலைக்கு அரசே விற்றிருந்தால் நாட்டுக் கடனில் பாதியை அதைக் கொண்டே அடைத்திருக்கலாம். அடுத்த நாட்டுக்காரன் திருடினால் வேற்று நாட்டுக்காரன், நம் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டான் அவனுக்கு நம் நாட்டின் மேல் அக்கரை கிடையாது என்று நியாயம் சொல்லலாம். சொந்த வீட்டுக்கே கன்னம் வைக்கும் இந்தக் கயமைக்கு யார் பொறுப்பு? திருடியது தெரிந்த பிறகும் திருட்டா, அப்படியா, எங்கே யார் திருடியது என்று கேட்டுச் சிரித்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது என்ன விதமான  அரசியல் நேர்மை?

சரி, பாராளுமன்றக் கூட்டுக் குழுவைக் (JPC) கூட்டுங்கள் இது  பற்றி விசாரிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. பிரபல வக்கீலும், பொருளாதார நிபுணருமான(!) உள்துறை அமைச்சர் சிதம்பரம் பொதுக் கணக்குக் குழு (PAC) விசாரிப்பதால் JPC தேவையில்லை என்கிறார். இதில் லாஜிக் வேறு சொல்கிறார். JPC வைத்தால் ஆளுங்கட்சிக்காரர்  தான் தலைவராக இருப்பார், ஆனால் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் எதிர்க்கட்சிக்காரர், அதனால் அதுதான் நல்லது என்கிறார். தவிர CBI, PAC, உச்சநீதிமன்றம் ஆகியவை விசாரிக்கிற போது JPC தேவையில்லை என்கிறார்.

இதற்கு முன் ஹர்ஷத் மேத்தா செய்த பங்குமார்க்கெட் ஊழல், கேதன் பரேக் செய்த பங்குமார்க்கெட் ஊழல் ஆகிய ஆயிரம் கோடி ஊழல்களிலேயே JPC விசாரணை நடந்தது. கூடவே CBI விசாரணையும் நடைபெற்றது. சீனாதானா சொல்வதில் இன்னொரு உள்குத்து என்னவென்று பார்த்தால் தாமதிக்கும் தந்திரம். பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC) முந்தைய ஆண்டுகளின் கணக்கைத்தான் விசாரிக்கும். அதுவும் CAG தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் செய்வார்கள். 2010ல் அவர்கள் 2004-05ஆம் ஆண்டின் கணக்கைத் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

2010ஆம் ஆண்டுக் கணக்கை அவர்கள் விசாரிக்க வரும் போது 2016-17 ஆகிவிடும். அதற்குள் ராசாவும் அவரது கூட்டாளிக் குடிபடைகளும் தப்பி விடுவார்கள். இன்னும் 7 ஆண்டுகள் என்றால்  வேறு பல பிரச்சினைகள் வந்திருக்கும், அதற்குள் இந்த ஊழல் சற்றே(?) மறக்கப்படும்.

இல்லை சிறப்பு அனுமதி கொடுத்து மற்ற வேலைகளை நிறுத்துவிட்டு இப்போதே பொதுக் கணக்குக் குழுவை விசாரிக்கச் சொல்லலாம் என்றால் அதற்கு JPCயே  விசாரணை செய்யலாம். இரண்டும் ஒன்றே!

இதில் இன்னொரு நெருடலான விஷயம் பிரதமரின் மௌனம். கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதியும் அசைவின்றி இருந்திருக்கிறார். இரண்டு முழு ஆண்டுகள். சுப்பிரமணியன் சுவாமி, ராஜீவ் சந்திரசேகர் (BPL நிறுவனத்தின் முன்னாள் தலைவர், ராஜ்ய சபா உறுப்பினர்) ஆகியோர் 2007-08ல் பல கடிதங்கள் எழுதி முறைகேட்டை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். “கடிதம் கிடைத்தது, நன்றி” என்று மட்டும் பதில் வரப் பெற்றதாக இருவருமே சொல்கின்றனர்.

“எங்கள் தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை, தாங்கள் ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று மூலக்கரைப்பட்டியிலிருந்து முனுசாமி எழுதினால் jurisdiction காரணமாக சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கோ அல்லது அமைச்சருக்கோ அனுப்பிவைப்பதும், வழக்கமான பதிலைத தருவதும் பழக்கம்.

முக்கியமான துறையில் ஊழல் என்று ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும், தொழிதுறை வல்லுனரும் சொல்கிறார்கள். பிரதமர் மௌனம் காப்பது யாரைக் காப்பதற்கு என்ற கேள்வி எழுகிறது. 1996ல் ஆண்டின் நேர்மையான மனிதர் விருது வழங்கப்பட்ட போது, மூச்சு விடுவதற்கெல்லாம் விருது தருவார்கள் போலிருக்கிறதே என்று சொன்னவர் தான் நமது பிரதமர். அப்படி நேர்மையையும் நாணயத்தையும் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படுபவர் இப்படி தேசப் பொருளாதாரத்தின் உயிர்நாடியை நிறுத்திப்பார்க்கும் ஊழலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

குற்றம் நடந்ததற்கு ஆதாரங்கள் அடுக்கடுக்காய் அணிவகுக்கும் போது “தவறு நடந்திருந்தால், அது நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாய் நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலிப்பேன்” என்று சொல்வது எந்த ஊர் நியாயமோ தெரியவில்லை.

இந்த 176000 கோடி இருந்திருந்தால், நாட்டில் எத்தனையோ  சாலைகள் போட்டிருக்கலாம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்திருக்கலாம். அது எதுவுமே இல்லை  என்றாலும் இன்று சீனா பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆடும் கெட்ட ஆட்டத்துக்கு பதிலடியாக தரமான போர்த் தளவாடங்கள் வாங்கி தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கலாம். இது எதுவுமே இல்லாமல் யாரோ துபாயில் தொழில் செய்யும் கீழக்கரை பாயின் கைலியில் முடிந்து வைப்பதில் யாருக்கு என்ன பலன்? விசாரித்தால் தான் தெரியும்.

இதில் கடும் நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதே நம் பிரதமர் இத்தனை நாள் கஷ்டப்பட்டுக் கட்டிக்காத்த நியாயஸ்தர் என்ற நற்பெயர் விளங்கி நிலைக்க உதவும்.

இந்தக் கூத்தி்ல் இன்னொரு காமெடி டிராக்கை தமிழக முதல்வர் ஓட்டுகிறார். “ஆ.ராசா தலித் என்பதால் அவர் மீது ஆதிக்க சக்திகள் வரிந்து கட்டிக் கொண்டு குற்றம் சொல்கின்றன” என்பது அவரது வாதம். இது புதிதல்ல. இவர் மீதோ இவருக்கு வேண்டப்பட்டவர் மீதோ புகார் வந்தால் இவருக்கு உடனே தன் சாதியும் தன்னைச் சார்ந்தவர்களின் சாதியும் நினைவுக்கு வந்துவிடும்.

எந்த ஊழல் குற்றச் சாட்டுக்குமே இவர் நீதிமன்றம் சென்று நிரபராதி என்று நிரூபித்ததாக வரலாறு இல்லை. தவறிச் செய்ததாக எதையும் ஒப்புக் கொண்டதும் கிடையாது.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

கலைஞர் உரை:குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

குற்றம் செய்தவரின் சாதி பேசிச் சிந்து பாடித் தப்பிக்க விடுவது நாட்டுக்கு நல்லதல்ல.

மன்மோகன் சிங் படித்தவர், நியாயஸ்தர். சற்றே சறுக்கினாலும் சுதாரித்துக் கொண்டு நீதிக்கு வழி செய்வார் என்று நம்பலாம். செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் நலன் நாடும் அரசு அமைய ஓட்டுப் போடுவோம். வாழிய பாரத மணித்திரு நாடு.

சூர சம்ஹாரம்!

November 12, 2010

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. – திருமுருகாற்றுப்படை.

நேற்று சூர சம்ஹாரம். முருகன் சூரபதுமனை வென்ற பொன்னாள். அசுரரை வென்று தேவரைக் காத்த நன்னாள். எம்பெருமான் வேலவனின் அவதார நோக்கம் நிறைவேறிய திருநாள்.

சரி! இதனால் அறியப்படும் தத்துவம் யாதோ? வாகாய் வசமிருக்கும் வலையிலே தேடினேன். தகவல்கள் கந்தனருள் போல அள்ள அள்ளக் குறையாதிருந்தன. இட்டு வைத்த அன்பர் பெருமக்கட்க்கு எம்மாலியன்ற பதிலுதவி எமது மனமார்ந்த நன்றியும், கந்தனருளுக்கான பிரார்த்தனைகளும். உணர்ந்து தெளிந்து எழுதுவது ஆன்றோர் செயல். நான் படித்ததில் புரிந்ததைப் பகிர்வேன்.

சூர் என்றால் துன்பம். துன்பத்தின் உருவம் சூரன். அவன் ஆணவம், பேய்க்காமம் முதலிய துன்பியல் குணங்களைத் தன்னகத்தே கொண்டு அது குறித்துப் பெருமையும் கொண்டவன். தீயன குறித்துப் பெருமை கொள்வது மூடத்தனம். மொத்ததில் அறியாமையின் உருவமாய் இருந்தவன். ஆனால் அறிந்தது போல் காட்டிக்கொண்டு அறிந்து தெளிந்த அறவோரைத் துன்புறுத்தி துக்கம் தந்த துஷ்டன்.கூத்து மிகவாடிய குறைகுடம் அவன். கூற்றுக்கு இறையாக்கத்தக்க குணங்களின் குவியல் அவன். நிற்க.

துன்பத்தைத் தீர்க்க வல்லது அறிவு. அறிவு வேல் வடிவில் கூர்மையாகவும், அகன்றும், ஆழ்ந்தும் இருந்தால் அது ஞானம் என்றறியப்படுகிறது. உள்ளொளி தரும் அறிவு ஞானம். ஞானம் அறியாமை இருளினின்றும் ஞானியை மட்டுமல்லாது அண்டினோரையும் அறிஞராக்கும் வல்லமை கொண்டது. ஞானியரின் அண்மை மூடனையும் மதியூகியாக்கும். அப்படியிருக்க ஞானத்திருவுருவாம் கந்தனின் அருள் எத்தகைய ஒளி தரும்? அவன் ஞானம் படைப்பின் மூத்தோன் பிரம்மனையே முற்றுகையிட்டுச் சிறை செய்த மேன்மை கொண்டது.அதன் பெருமை பேசற்கரியது.

“ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி “என்கிறார் நக்கீரனார். அதாவது எல்லை என்று ஏதுமற்று நீக்கமற எங்கும் நிறைந்து ஒளிர்கின்ற  கதிரவனை விஞ்சிய ஒளி. காலத்தின் ஓட்டமோ ஞாலத்தின் தூரமோ கட்டுப்படுத்த இயலாத நெடுந்தொலைவுக்கு வீசிவரும் ஞானப் பேரொளி. அத்தகு பெருமை கொண்ட முருகனின் திருக்கைவேல் கடுந்துன்பங்களை எல்லாம் எளிதில் தீர்க்கும்.

ஆக அந்த ஞானத்திருவொளி மூட இருளை முற்றிலும் அழித்து அறிவுச்சுடர் பிரகாசிக்க வழிசெய்த அருந்தகமையைக் கொண்டாடுவது சூர சம்ஹார விழா.

அகம் புறம் முதற்கொண்டு அனைத்தும் போற்றும் தமிழ்த் தெய்வம் கந்தன் ஞானியர் பெருமக்களின் வாட்டம் போக்கிய நிகழ்வுகளில் ஒன்று மனதுக்குத் தெம்புதரும்.

இறையனாரின் அம்சமாய்ப் போற்றப்படும் ஆதிசங்கர பகவத் பாதர் ஷண்மதங்களை நிறுவிச் சநாதன தர்மம் ஓங்கச்செய்தது கண்டு அவர் மீது கோபமும்,  அவருக்கு ஏற்பட்ட நற்புகழின் பரவல் கண்டு பொறாமையும் கொண்டான் அவருடன் வாதுபுரிந்து தோற்ற அபிநவகுப்தன் எனும் சமணன். வாதினால் இயலாததை  சூதினால் செய்யத் துணிந்து அவருக்குக் காசம், குட்டம், காக்கைவலி, கடுங்காய்ச்சல் முதலியவற்றோடு அவர்தம் அறிவு நலியப் பிசாசங்களையும் ஏவித் தாக்கினான். சங்கரர் துன்புற்றிருக்கையில் “சீரலைவாய் சென்று சிவக்குமரனை வழிபட்டால் சீக்கிரம் தீரும் சீக்கு” என்று அசரீரி ஒலித்தது.

அங்கே விரைந்த சங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றிக் கந்தனை வேண்டினார். ஆதிமதம் தழைக்க அயராது உழைக்கும் தமக்கு வந்த அல்லல்களை நீக்கி அருள்புரியப் பிரார்த்தித்தார். 33 சுலோகங்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கத்தைப் பாடிவர 25ஆவது சுலோகத்தினைப் பாடியதும் பிடித்த பிணிகளும் பீடித்த பிசாசப் பீடைகளும் நீங்கி நலம் பெற்றார்.

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே

இந்தச் சுலோகத்தைப்ப் படிக்கும் யாருக்கும் இது போன்ற பிணிகளோ பீடைளோ அண்டாது என்பது பகவத் பாதர் வாக்கு. அறியாமை மிகுந்த மனத்தின் தீச்செயல்களால் விளையும் அல்லல்களை அகற்றுவான் கந்தன் என்பதற்கு இந்நிகழ்வு சாட்சி.

இதே போலப் பிணி பீடைகள் அண்டாது சிறக்க அழகு தமிழில் தேவராயக் கவி பாடிவைத்த கந்த சஷ்டி கவசம் தனிப்பெயர் பெற்று பெரும் பேறு தருவது.

பேசாத குருபரரைப் பேச வைத்துப் பைந்தமிழ்ப் புலவராக்கிப், பின் அவரைப் பன்மொழி வித்தகராக்கி அழகு பார்த்தவன் சீரலைவாய்க் கந்தபிரான். அறியாமையின் ஒரு பிரிவாம் கோபம் கொண்டு அவர் தந்தை ஒரு சான்றோரை அவமதிக்க, அதுவொற்றி மகர்க்கு வந்த பேசாப்பிணியை நீக்கியதோடு நில்லாமல் காசி நகர்ப்புலவரால் இயலாத பெருஞ்செயல்கள் புரிய வைத்தான். குருவுக்கெல்லாம் குருவான சிவனுக்கே உரைத்த நல்லாசான் உயர்வன்றி வேறென்ன தருவான்?

எனவே, தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் live show  பார்த்தோமா, நடுநடுவே 20 விநாடிகளில் பாத்திரப் பிசுக்கு போவதை தேவயானி சொல்லக் கேட்டோமா, பாப்கார்ன் அடைந்த வாயாலே “முழுகா” என்று ஒற்றைக் கையால் கன்னத்தில் போட்டுக் கொண்டோமா என்றில்லாது, உள்ளம் ஒன்றிக் கந்தனை வேண்டி ஒருசில நிமிடங்கள் பிரார்த்திப்போம்.அறியாமை நீங்கி அகம் தெளிந்தோர் ஆவோம்.

சான்றோன்!

November 10, 2010

சான்றோன் என்பவன் யார்? எந்த விஷயத்திலும் சிந்தித்து, நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சிறப்பின் பாற்பட்டுச் செயல்படுபவனே சான்றோன்.  சான்றோன் பெருமை பெரும் பேச்சு பேசப்பட்டது. அவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும் உறுதிகூறுவர் பெரியோர்.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

பெற்ற பொழுதினைக் காட்டிலும் தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்வதைக் கேட்கின்ற தருணத்தில் தாய் பெரிதும் மகிழ்வார்.

சான்றோன் எப்படி உருவாகிறான்? யார் அவனை உருவாக்குவது?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

ஆக, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடமை. அப்படியானால் ஈன்று புறந்தருதலோடு தாயின் பணி முடிவுற்றதா?  இல்லை. ஈன்று புறந்தருதல் என்பதை நம் மக்கள் கருவினின்றும் வெளித் தருவது என்று பொருள் கொள்கின்றனர். அது தவறு. 5 வயது வரை குழந்தை தாயிடம் அதிக ஒட்டுதலோடு இருக்கும். அந்த 5 வயதுக்குள் அதன் மனதில் என்ன விதைக்கப்படுகிறதோ அதுவே அதன் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் ஆதாரம்.

அடிப்படையை உறுதியாகப் போட்டு  அதன் மீது கட்டப்பட்டு பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் கோவில் போல,  அடிப்படை அறிவை அறத்தோடு ஊட்டி சான்றாண்மைக்கு வித்திடுவது தாய்க்குக் கடன். பொதுவாக அந்தக் காலத்தில் 5 வயதுக்கு மேல் தான் பள்ளிக்கு அனுப்புவர் குழந்தைகளை. (இப்போது உள்ளது போல் “சமாளிக்கவே முடியலை,  PreKG சேர்த்துவிட்டேன்” என்ற சால்ஜாப்புகள் அப்போது கிடையாது)

5 வயது வரை வீட்டில் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி, மற்றேனைய உறவுகளுடன் வளரும் குழந்தை, நீதிக் கதைகள், இதிகாச புராணங்கள், எண்-எழுத்து, ஆகியன கற்று வளரும். வீட்டுக்கு வெளியே கல்விச்சாலைக்குப் படிக்கச் செல்கையில் மேலே படிக்க ஏதுவாக அடிப்படை தப்பாது கற்றுத் தருவதும், பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், அன்பு பரிமாற்றங்கள், உறவுகள், நட்பு இதெல்லாம் கற்றுத் தருவதும் தாயின் கடமை.

5 வயதில் கல்விச் சாலையில் சேரும் குழந்தைக்கு பால பாடங்களாக சுலோகங்கள், சமய இலக்கியப் பதிகங்கள், ஆகியன கற்றுத் தரப்படும். இந்த அடிப்படைகள் 12 வயதில் முடிந்தபின் தர்க்கம்,  நீதி, நிர்வாகம் முதலியவற்றின் அடிப்படை கற்பிக்கப் படும். இங்கேதான் தந்தைக்கு வேலை வருகிறது. தெளிவாகச் சிந்திக்கக் கற்றுத்தருவது இந்த வயதில் தான் தேவை. பல விஷயங்களை அறிந்து தவறுகளின் பால் ஈர்க்கப்படுவதும் அந்த வயதில் தான்.

எனக்கு 5 வயதில் இராமயணமும் மகாபாரதமும் மனப்பாடம். பாடல்கள் தெரியாது, கீதை தெரியாது. ஆனால், கதையும் அதனால் அறியப்படும் நீதியும் மனப்பாடமானது. 10 வயதில் சக்ரவர்த்தித் திருமகனும் வியாசர் விருந்தும் படித்தேன்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் 10ஆம் வகுப்பு படிக்கிறபோது, நம் நாட்டுத் தங்கத்தை அடகு வைத்து நாம் கிட்டத்தட்ட போண்டி என்று பிரதமர் சந்திரசேகர் அறிவித்தார். பிறகு மன்மோகன் சிங் நிதியமைச்சராகி நம் ரூபாயின் மதிப்பை பாதாளத்துக்குக் குறைத்தார். அப்போது மிக புத்திசாலியாக யோசித்து என் தந்தையிடம் கேட்டேன். “இப்போ அமெரிக்காகிட்ட கடன் வாங்கினா நமக்கு நிறையப் பணம் கிடைக்கும். அதை வெச்சு நிறைய செலவு பண்ணலாம். இல்லையாப்பா”?

“மடத்தனமா யோசிக்காதே” என்றார். “ஏன்?” என்றேன். “இப்போ கடன் வாங்கினா நிறையப் பணம் கிடைக்கும் சரி, திருப்பிக் கட்டும் போதும் அதிகமாக் கட்டணுமே அப்போ என்ன செய்வே? வட்டி வேற சேருமே?” என்று கேட்டார். பதில் தெரியவில்லை. “கடன் வாங்கினா ஒண்ணுக்கு நாலு ரூபாயா கிடைக்கும் தெரியுமா!” என்று நண்பர்களிடம் சொல்ல, “அட ஆமாண்டா!” என்று அவர்கள் ஆச்சரியப்பட்ட போது தலைக்குப் பின்னே தோன்றிய ஒளிவட்டம் இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

“அப்படின்னா ரூபாய் மதிப்பு குறைச்சது தப்பா?” என்று கேட்டேன். “இல்லை, இந்த நேரத்தில் ஏற்றுமதி அதிகமானா நமக்கான வருமானமே அதிகமா வரும். அதைச் செலவழிச்சா ஒரு பய கேக்க முடியாது”, என்றார். ஏற்றுமதி, இறக்குமதி, கடன் ஆகியவை குறித்து சுருக்கமாகச் சொன்னார்.

வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்தால் பெருந்தொல்லை என்று கடனாளிகள் பலரை உதாரணம் காட்டிச் சொன்னார். கடன் வாங்கிச் செலவழித்தல் தவறு என்ற அடிப்படை புரிந்தது. நாம் சம்பாதிப்பதையே நாம் செலவு செய்ய வேண்டும், பிறரிடம் வாங்கிச் செலவழிக்கக் கூடாது என்பதும் புரிந்தது. +1ல் வணிகப் பாடமும் பொருளாதாரமும் படித்த போது “இது அதுல்ல!” என்று தோன்றியது.

ஆக, மனிதனைச் சான்றோனாக்கும் அடிப்படை வித்தை சரியான முறையில் சிந்திக்கக் கற்றுத் தருவதுதான் என்பது இப்போது யோசித்ததில் புரிகிறது.

எம் வலைப் பதிவம்

November 9, 2010

உலகோர்க்கு வணக்கம். வாழிய நலம். இஃதெமது வலைப்பதிவம். எமது அரசியல் கருத்துக்கள், சமூகப் பார்வைகள், எமது பொருளாதாரச் சிந்தனைகள், (வணிக, பொது) நிர்வாகம் குறித்த எமது  எண்ணங்கள், யாம் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் ஆகியன இங்கே காணக் கிடைக்கும். கைதட்டினாலோ, கல்லெறிந்தாலோ பரிசீலித்து ஏற்பது/விடுப்பது எமது கொள்கை.  வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழரும், பாரத மணித்திருநாடும். தாய் மண்ணே வணக்கம்!


%d bloggers like this: