Archive for December 2010

குஷிமிகு குஜராத்!

December 30, 2010

Business India ஜனவரி 9, 2011 தேதியிட்ட இதழைப் படித்துக் கொண்டிருந்த் போது “குஜராத்: வணிகத்தின் கனவு இலக்கு” என்று ஒரு கருத்தாய்வு படித்தேன். (அது பற்றிப் பிறகு சொல்வேன்) நிஜமாகவே தமிழகம் அப்படி வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது.  நரேந்திர மோடி நல்லபடியாக ஆள்கிறார் என்று சொன்னாலே வடிவேலு மாதிரி “அவனா நீயி?” என்று கேட்கும் தமிழக அறிவுஜீவிகள் இதை செரிக்கத் திணறுவார்கள். ஜெயலலிதாவின் 2001-06 ஆட்சி நன்றாக இருந்தது என்று சொன்னாலே சொன்னவரையும் அவரையும் சாதி சொல்லித் திட்டும் பகுத்தறிவுப் பெட்டகங்கள், மோடியை எப்படி ஏற்பார்கள் .

கோடிகளில் கொள்ளை அடித்தவர்களையும் சாதி சொல்லிக் காப்பாற்றத் துணியும் பகுத்தறிவுப் புலிகளையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படி ஒரு முதல்வர் என்பது ஆச்சரியம்தான். இந்தியாவில் இப்படி ஒரு வளர்ச்சிப்பணி ஆற்றும் முதல்வர் என்பது குறித்துப் பெருமைப்பட்டாலும், தமிழகத்தில் இப்படி இல்லை என்பது பொறாமை தருகிறது. (ஜெ.  20011ல் மீண்டு(ம்) வந்து விட்டதைப் பிடிப்பார் என நம்பலாம்!)

24 மணிநேரம் மின்சாரம் இருக்கிறது. (அப்படின்னா?) விவசாயம் செழிக்கிறது. (ஓஹோ?) அது கிடக்கட்டும். கோத்ராவில் மோடி பலரைக் கொன்றார் தெரியுமா என்பர். தீஸ்தா செதல்வாட் போராடுகிறாரே தெரியுமா என்பர். அவர்கள் சில நாட்டு நடப்புகளை வசதியாக மறப்பர் அல்லது மறைப்பர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை கோத்ரா கலவரத்திற்கு நரேந்திர மோடி  காரணமில்லை என்று தெரிவித்திருக்கிறது.  அவர் தமது அரசியல் சாசனக் கடமைகளில் இருந்து வழுவி மக்களைக் காக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு  குற்றத்தில் சிக்கவைக்கும் பொருண்மைகள் போதுமான அளவில் இல்லை என்பது சிறப்பு புலனாய்வுக் குழு கண்டு சொல்கிற உண்மை.

இதை உண்மை என்று எப்படிச் சொல்வாய்? மோடி செய்யவில்லை என்பதை நீ நேரில் பார்த்தாயா என்று கேட்போர் நிற்க.  சிறப்பு புலனாய்வுக் குழு நரேந்திர மோடியை மணிக்கணக்கில்  விசாரித்த பிறகே அறிக்கை அளித்தது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு தீர விசாரித்துச் சொன்ன செய்தியில் பொய் இருக்க வாய்ப்பே இல்லை.

தவிரவும், குஜராத் கலவரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வு நீதிமன்றத்தில் பல கற்பனைப் புனைவுகள் கலவர நிகழ்வுகள்  என வாக்குமூலங்களாக வரிசைகட்டி வருகின்றன. இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் ஜாவேத் என்கிற சமூக சேவகி அம்மையார் மிகவும் தீவிரமாக இறங்கி வேலை செய்கிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனமும் நடத்துகிறார். நன்கொடைகள் தாராளமாக வரிவிலக்கெல்லாம் காட்டி வாங்கிக் கொள்ளவும் செய்கிறார்.

அவர் செய்யும் தொண்டு பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துவோர் பெயரில் இவரே இட்டுக்கட்டிய கொடூரக் கொலைக் கதைகளைக் (cooking up macabre tales of killings) கலவர நிகழ்வுகள் என்று பிரமாண வாக்குமூலமாக சமர்ப்பிப்பது. தொண்டு நிறுவனம் என்பதால் ஏதாவது உதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், “கடையை எரிச்சுப்புட்டங்க, வீட்டைக் கொளூத்திப்புட்டாங்க, உதவி செய்யுங்கம்மா!” என்று வருவோரிடம் பேர் ஊர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு,அவர்களிடம் வெற்றுத் தாட்களில் கையொப்பமும் பெற்று, “துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்” என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார்.
(http://www.dailypioneer.com/281457/%E2%80%98Teesta-drafted-affidavits-didnt-divulge-contents.html)

பலருக்குத் தங்கள் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதே தெரியவில்லை. அப்படிக்  ‘கலவரத்தில் பாதிக்கப்பட்டோரை’ விசாரித்த போது உளறிக் கொட்டி, கடைசியில் வாக்குமூலத்தைப் பற்றி தமக்கேதும் தெரியாது என்றும் ‘அந்தம்மா’ சொன்னதைத் தான் தாங்கள் சொல்வதாகவும் கூறியுள்ளனர். என் பெயரில் எப்படி இல்லாத கதைகளைக் கட்டுவாய் என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சமூக சேவகி அம்மையார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தீஸ்தா அம்மையாரிடம் உதவியாளராய் வேலை பார்த்த ரயிஸ்கான் பதான் என்பவர் தமக்குத் தெரியாமல் தம் பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும், தம் பெயரில் மேற்கூறிய மோசடிகளைச் செய்ததாக சிறப்புப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அறிவு ஜீவிகள் பலர் செதல்வாட் அம்மையாருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை வைத்து “கவலைகொண்ட மக்கள் தீர்ப்பாயம் (Concerned Citizens Tribunal)” ஒன்றை அமைத்து, “சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் சங்பரிவார் அமைப்பினர் குற்றமிழைத்தனர். நரேந்திர மோடி கலவரத்திற்குத் திட்டம் தீட்டி, குற்றவாளிகளுக்குத் தலைமை தாங்கினார்” என்று தீர்ப்பளித்தனர்.

இது அம்மையாரின் தொண்டு நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர்களின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காட்சிப்பிழை என்பதும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்கள் செதல்வாட் அம்மையார் சமைத்துத் தந்தவை என்பது இப்போது தெரிய வருகிறது.

ஆக ஊடகங்கள் பதிவு செய்தவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அறிவுஜீவிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதுவும் புலனாகிறது. Some vested interests are striving so hard to keep the people and truth in dark என்பது ஐயம். தீஸ்தா அம்மையார் கூறும் குற்றச்சாட்டுகள் திரிபற்றவை என்று தெளிவாகும் வரை இந்த ஐயம் தொடரும்.

தற்போது நீதிமன்றத்தில் தீஸ்தா அம்மையாரால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறி, அடிப்படையே அடுக்கப்பட்ட பொய் எனும் போது கிட்டவோ தட்டவோ அவற்றை ஏற்பது இகழ்ச்சி.

(இது குறித்து நான் தமிழ் பேப்பர், தமிழ் ஹிந்து ஆகிய தளங்களிலலிட்ட பின்னுட்டங்களில் தட்டெழுதிய சில வாசகங்கள் அப்படியே இங்கிருக்கும். )

என் கேள்வி:

நரேந்திர மோடி குஜராத்தை 9 ஆண்டுகள் ஆண்டு மாநிலத்தின் பொருளாதார, வாழ்க்கைத்தர வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கிறார். ச்.  மத்திய அரசு எதிர்க்கட்சி, ஊடகங்கள் அவரை நிரந்தரக் குற்றவாளி என்கின்றன. இருப்பினும் மாநில மக்கள் நலன் முன்வைக்கப்பட்டு மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் மோடி.

கருணாநிதிக்கு இந்தத் ‘தகுதி’ எதுவுமே இல்லை. மத்திய் அரசில் 12 ஆண்டுகளாகப் பங்கு வகிக்கிறார். குற்றச்சாட்டுகள் இருக்கின்றன, ஆனால் வழக்கு விசாரணை எல்லாம் மருந்துக்குக் கூடக் கிடையாது.  ஊடகங்கள் அவரை பாசம் நேசம் இவையெல்லாம் மிகுந்து போற்றுகின்றன. 50 ஆண்டுகால அரசியல் அனுப்பவம் வேறு. நிர்வாகத்தில் சூரப்புலி என்று பெயர் பெற்றிருக்கிறார்.

ஆனாலும் தமிழகம் எந்தக் கருத்தாய்விலும் முதலிடம் பெறவில்லையே ஏன்? நமக்கு நாமே திட்டம் தான் இதற்கு ஒத்துவருமோ?

Advertisements

படித்ததில் பிடித்தது!

December 28, 2010

கருப்பும் ஒரு கலர்…

வெள்ளையும் ஒரு கலர்…
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல….
என்ன கொடும சார் இது…….
________________________________________________________

நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்….
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்…
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்… நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்…
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு…….

________________________________________________________

ராமசாமி:தலைவர் நாத்திகரா இருக்கிறது தான் பிரச்சினையே!
குப்புசாமி:ஏன்?
ராமசாமி: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அப்படிங்கிறதால ஏழைகளுக்கு சிரிப்பே வராதபடி விலைவாசியை ஏத்திட்டாரே!!

________________________________________________________

இவை சொந்த சரக்கு அல்ல. ஆகவே காப்பிரைட் உரிமை என்னுடையதல்ல. நான் படித்தவற்றில் பிடித்த சில இவை.

ஆம்வே – வெள்ளையும் சொள்ளையுமா ஒரு கொள்ளை

December 27, 2010

இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆம்வே ஜாக்கிரதை!!
http://thoppithoppi.blogspot.com/2010/12/amway.html

மன்மதன் (இந்துமுன்னணி) அம்பு!

December 27, 2010

சமீபத்தில் வெளியாகி ‘ஓட்டமாய் ஒடிக்கொண்டிருக்கும்’ மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற இந்துக்களின் மத உணர்வினைப் புண்படுத்தும் பாடல் குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருந்த அந்தப் பாடல் குறித்து இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பாளருக்குப் பிரச்சினை வேண்டாம் என்பதால் அந்தப் பாடலை நீக்குவதாக ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மட்டுமே அந்த கொச்சைப் பாடல் இல்லாது படம் வந்துள்ளது, வெளிநாடுகளில் அந்த அபாசப் பாடலுடனேயே படம் வந்துள்ளது என்று வெளிநாட்டில் வாழும் பலர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாடல் சம்பந்தமாக கமல் வெளியிட்டுள்ள கடிதத்தில் நிஜ ஆன்மீக வாதிகளை இது புண்படுத்தாது என்றும், ஆனாலும் இது உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லா மதத்தவரும் படம் பார்க்க வரவேண்டும் என்பதாலும் மட்டுமே இதைத் தாமாகவே முன்வந்து நீக்குவதாகவும் கூறியுள்ளார்.

சென்சார் போர்டு ஓகே சொல்லிவிட்டது. இந்துக்களின் எதிர்ப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் பகுத்தறிவுவாதி என்று மார்தட்டிய கமலஹாசன் திடீரென்று இப்படி பல்டி அடிக்கவேண்டிய அவசியம்  என்ன?

இந்தப் பாடல் பற்றிய ஊடகச் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, ஓரிரு இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள கண்டனத்தைத் தவிர, வேறு பெரிய எதிர்ப்பு ஏதும் தெரியவில்லை. மற்றபடி ஊடகங்களில் இந்தப் பாடல் பற்றி எதிர்மறையான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. கமல் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை என்று கூறி மேடை மேடையாக இந்தப் பாடலைப் பாடிக் காட்டினார்.

படம் எடுக்கும் தயாரிப்பாளர் துணை முதல்வரின் புதல்வர். போராட்டம், எதிர்ப்பு கோஷம் எல்லாம் இவர்களிடம் எந்த அளவு செல்லுபடியாகும் என்பது யாவரும் விடையறிந்த ஒரு கேள்வி! இதுவரை கமலஹாசன் படங்களுக்கு வந்த இந்து மத எதிர்ப்புகளை விட இந்த எதிர்ப்பை ஏன் சக்திவாய்ந்ததாக கமலஹாசன் கருதவேண்டும்?

இது குறித்து தமிழ்ஹிந்து தளத்தில் ஒரு காணொளியுடன் கூடிய பதிவு வந்தது. அதில் இந்து முன்னணியினர் பாடலை நீக்க என்ன செய்தனர் என்பது தெளிவாக இருக்கிறது.

20.12.2010 அன்று கமலஹாசனின் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம் அறிவித்தனர். அறிவிப்பின்படி சுமார் 150 பேர் கமலஹாசனுடையஅலுவலக வாசலில் கூடினர். போராட்டம் துவங்க இருந்த நிலையில், கமலஹாசன் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்கிறது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆபாசமான பாடலைத் தாமாகவே முன்வந்து தயாரிப்பாளருக்கு வரும் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக படத்தில் இருந்து நீக்குவதாக கமலஹாசன் கடிதம் வெளியிட்டார்.

இந்துமுன்னணியினர் படம் ஓடினாலும் ஓடவில்லை என்றாலும் எதிர்பார்த்த இலாபம் வராது என்று கூறியுள்ளனர். தொழில்நுட்பம் கொண்டு படத்தை எதிர்ப்போம் என்றும் எச்சரித்துள்ளனர். அப்படியானால் அழுத்தம் எங்கே தரப்பட்டுள்ளது என்று பார்ர்கும் போது வணிகம் சார்ந்த அழுத்தம் அது என்பது புரிகிறது.

இந்தச் சூழலில் தான் உதயநிதி படத்தின் விநியோக உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு விற்றுள்ளார். விற்றதற்கு அரசியல் காரணங்கள் பல இருப்பினும் தன் நிறுவனமான சிவப்பு அரக்கனுக்கு (Red Giant) பாதிப்பில்லாமல் போனது என்று அவர் போய்விட்டார்.

ஒரு 150 பேர் கொண்ட கூட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவு கூட அரசியல் செல்வாக்கு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லாமலா போய்விட்டது? சண்டியருக்கு 2003ல் சிக்கல் வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் முறையிட்ட கமலஹாசன், தற்போதைய முதல்வர் பகுத்தறிவுச் சிங்கம் கருணாநிதியிடம் ஏன் போகவில்லை?

மற்றவர் பாதிக்கப்படக் கூடாது. என் படம் என்றால் நடப்பதே வேறு என்று கமலஹாசன் பேசுவதும் வாய்ச்சொல் வீரமே என்பது சண்டியர் விருமாண்டியான கதையில் சந்தி சிரித்தது. அன்றைய முதல்வர் ஜெயலைதாவைச் சந்தித்து முறையிட்டு அவர் பாதுகாப்புக் கொடுத்தும் அடித்துப் போட்டுவிட்டால் என்ன செய்ய என்று அஞ்சிச் சண்டியரை விருமாண்டியாக மாற்றினார் இந்தப் பகுத்தறிவு வியாபாரி.

இந்த காணொளி அவர் எப்படியெல்லாம் பல்டி அடித்துப் பணிந்தார் என்பதை விளக்குகிறது.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது, விற்பனை பாதிக்கும் என்றால் அந்தச் சரக்கைத் தூக்கி எறிய கமல் தயங்க மாட்டார். அவருக்கு முக்கியம் படம் வியாபாரம்  ஆக வேண்டும், அவ்வளவே! தமது உயிரினும் மேலான கொள்கையைச் சந்தையையும் அதைப் பீடிக்கும் காரணிகளையும் பொறுத்து மாற்றிக் கொள்ளத் தயங்கமாட்டார் கமலஹாசன் என்பதே இதன் மூலம் நமக்குத் தெரியும் செய்தி.

ஈழத்தின் அவதியும் தமிழகத்தின் அசதியும் – I

December 26, 2010

ஈழத்திற்கு தமிழகம் தேவைப்பட்ட வேளையில் உதவவில்லை என்ற குமுறல் ஈழத்து மக்களிட்மும், வருத்தம் தமிழக மக்களிடமும் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களின் எண்ணவோட்டம் குறித்து அறிய முயல்வதை 176000 கோடியோடு விட்டுவிடுவது மனநலத்துக்கு நன்மை பயக்கும் என்று நடத்தைசார் ஆய்வு (Behavioral Research) முடிவுகள் சொன்னதால்  சற்று நிறுத்தியிருந்தேன். மீண்டும் ஆட்சியாளரை விடுத்து சற்றே பிரச்சினையை அலசுவோம்.

ஈழப் போராட்டம் ஏதோ 1983ல் துவங்கியதாக ஒரு பரவலான, தவறான நம்பிக்கை இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்றோரே ஈழத்தமிழர் என்பது பெருந்திரிபு. ஈழப் பிரச்சினை ஒரு நெடும்பகை. தமிழகத்து மூவேந்தர் காலம் தொட்டு இருந்து வரும் சிக்கல். நாம் அவர்களை வென்று ஆள்வதும், அவர்கள் நம்மை வெல்வதும் மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இருக்கும் தொடர்பு காலங்காலமாக இருந்துவரும் உறவு.

சிங்களரும் தமிழரும் பொதுவில் எதிரும் புதிருமாய் ஆனது சிங்கள பேரினவாதம் தொடங்கிய போது. 1970களில் பேரினவாதம் வலுப்பெற்று 1983ல் தமிழர்கள் அகதிகளாய் வெளியேறியதில் இனப்போராட்டமாக வெடித்தது. காந்தியத்தைச் சிலர் தத்தெடுத்துக் கொண்டபோதும் பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் புலைகளின் உணர்ச்சி கலந்த ஆயுதப் போராட்டம் பலரது ஆதரவைப் பெற்றது. எம்ஜிஆர் முதல் பல தமிழகத் தலைவர்கள் புலிகளை ஆதரித்தனர், உதவிகள் செய்தனர். மைய அரசு ஒரு காலம் வரை இதற்கு ஆதரவாக இருந்து பின் பல்வேறு காரணிகளினால் மாறியது.

இராஜீவ் காந்தி தெற்காசியாவில் பலமான தலைவனாக உருவாகும் நோக்கத்தில் அண்டை நாடுகளில் அமைதியை நாட்டுவோம் என்று அமைதிப் படையை அனுப்பினார். ஆனால், யார் எதிரி என்பது சரியாகத் அறிவுறுத்தப்படாமல் “திருப்பதி மலையில் மொட்டைத் தாத்தனைத் தேடிப்பிடி” என்ற வகையில் “இலங்கையில் அமைதியை நிலைநாட்டுக” என்று கட்டளையிடப்பட்ட படை பல உத்திசார் தவறுகள் செய்தது. அதற்கான காரணிகளை ஆராயப்போந்தால் அன்றைய பாரதத்தின் பல தவறான வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளை அலச வேண்டும். (இப்போது நேரமில்லை!)

பிரச்சினையின் ஆணிவேரைப் புரிந்து கொள்ளாத அரசியல் தலைவராக இருந்தார் இராஜீவ்காந்தி. ஆனால் அவரது நோக்கம் சரியானது. ஈழப் பிரச்சினையின் அடிப்படையை அவருக்குப் பேசிப் புரிய வைக்க முடிந்த தலைவர்கள் ஒரு சிலரில் பலர் அரசியல் காரணங்களால் ஓரங்கட்டப்பட்டார்கள். சிலர் அரசியல் காரணங்களால் வாளாவிருந்தார்கள். இராஜீவின் அண்மையும் நம்பிக்கையும் பெற்றிருந்த எம்ஜிஆர் உடல் நலமின்மையால் செயல் குன்றிப் போனார்.

அதே நேரம் புலிகள் ஆயுதப் போராட்டம் நெறிப்படுத்தலின்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்கிற்று. அகதிகளாய் வந்தோரில் சிலர் உறவின் உரிமையைச் மிகையாக மீறியதும் சர்வதேச அரங்கில் பாரத அரசுக்கு நெருக்கடி தந்தது. இராஜீவ், பிரபாகரன் இருவருமே இந்தக் கால கட்டத்தில் தவறான வழிகாட்டுதலால் தவறிழைத்தனர். தமிழினத்தின் விடுதலைக்குப் பேர் வாங்குவது யார் என்ற போட்டியில் தமிழகத் தலைவர்கள் கருணாநிதி, வீரமணி உள்ளிட்ட சிலர் தமிழினத் தலைமை என்ற பட்டத்தின் பின் சென்று பட்டத்திற்குக் காரணமான தமிழினத்தை மறந்தனர்.

ஈழத்தைச் சொல்லியே பலர் சொந்தக் கணக்கில் பணம் பார்த்தனர். இலக்கில் தெளிவின்றி அனுப்பப்பட்ட அமைதிப்படை பாரதம் திரும்பியது. படை போன போது தமிழினத்தின் கதி பற்றிக் கடிதத்திலும் கட்டுரையிலும் மட்டுமே கவலைப்பட்ட கருணாநிதி, மத்தியில் சிநேகமான ஆட்சி என்பதால் திரும்பிய படையை வரவேற்க மறுத்தார்.

உட்கார்ந்து பேசிப் புரிய வைத்தால் உதவக்கூடியவர் என்ற நிலையில் இருந்த இராஜீவ்காந்தி 1991ல் கொலையானது புலிகளின் மீதான வெறுப்பை வேரூன்றச் செய்தது. புலிகள் இராஜீவைக் கொலை செய்ய வலுவானதொரு காரணம் அமைதிப்படையாக மட்டும் இருக்க முடியாது. பொன்மயமான அமைதிக் கோட்பாட்டால் (Golden Silence) வெளிச்சத்துக்கு வரவியலாத காரணங்கள் பல புதைந்து போயின. பணம் முதல் KGB வரை பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மை இன்று வரை தெளிவாகத்  தெரியவில்லை.

நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தபின் லேவாதேவியில் போன தங்கத்தை மீட்டெடுக்கவே சிண்டைப் பிய்த்துக் கொண்ட பாரதம் சில ஆண்டுகள் சுற்றுப்புறத்தில் பஞ்சாயத்துப் பேசுவதை நிறுத்தி வைத்தது.  பொருளாதாரம் சார்ந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் தலைக்கு மேலே இருந்தன. தமிழகத்தில் முதல்வரான ஜெயலலிதா முற்று முச்சூடும் புலிகளைப் புறக்கணித்தார். காரணம் இராஜீவ் கொலையும் அதனால் தமிழக மக்களின் புலிகள் மீதான வெறுப்பும்.

1990களில் துவங்கி புலிகள் தமக்கு நண்பர்களை விட எதிரிகளையே அதிகமாக்கிக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் புலிகள் செய்த தவறுகள், குற்றங்கள் அதிகரித்தன. சர்வதேச அரங்கில் புலிகள் மக்கள் சார்ந்த போராளிகள், இன விடுதலைக்குப் போராடும் குழு என்றிருந்த பிம்பம் புலிகளால் பாதியும், அவர்களை ஆதரித்த சிலரால் பாதியுமாகச் சிதறடிக்கப்பட்டன. சந்திரிகாவின் வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் சவப்பெட்டியின் மீது  நச்சென்று ஆணிகளை அடித்து வைத்தார்.

இருந்த சில உருப்படியான நண்பர்களையும் புலிகள் பகைத்துக் கொண்டனர். புலிகள் சர்வதேச அளவில் ஆயுதம் மட்டுமல்லாது பழம்பொருட்கள் உள்பட பலதும் கடத்தி ஈழப் போராட்டத்துக்குப் பணம் சேர்தனர். ஆனால் சர்வதேச ஆதரவு என்பதைப் பற்றிக் அவர்கள் கவலையேபடாது செய்த பல செயல்கள், புலிகள் பயங்கரவாதிகள், மனித விரோத சக்திகள்  என்ற வாதத்துக்கு வலு சேர்த்தது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழமக்களின் எதிர்காலத்தை நாசமாக்கியது.

புலிகளுக்கு இராஜ தந்திர உதவிகள் செய்தோரைவிட, இராஜ தந்திரமாய் அவர்களைப் பயன்படுத்தியோரே அதிகம். பிரபாகரன் பெயரைச் சொல்லி தமிழகத்தில் பெரிய மனிதரானோர் அதிகம். ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு அவர்கள் செய்தது என்னவென்று இன்று பார்த்தால் போட்ட பணம் நிலைக்கட்டும் சச்சாமி என்று இராஜபக்சேவின் சேவடி பணிந்தது தான்.

சற்றே உட்கார்ந்து யோசித்தால் ஈழத்தமிழ் இனப் போராட்டத்தை சர்வதேச இராஜதந்திர அரங்கில் (International Diplomatic Platform) எடுத்துச் செல்ல புலிகள் தேர்வு செய்த களமும் நம்பிய மனிதர்களும் தவறோ என்று தோன்றுகிறது. பாரதத்தின் மைய அரசுக்கு இலங்கை அரசின் Ethnic cleansing வேலைகள் பற்றி சரியாக எடுத்துரைத்து திருத்தமான முறையில் அழுத்தம் கொடுக்கப்படவில்லை.சர்வதேச சமுதாயத்தை சந்திரிகா அணடக்கட்டிக் கொண்டது போல, தமிழர்கள் செய்யவில்லை.

ஈழத்தை வைத்து யார் பெயரெடுப்பது என்ற போட்டியில் ‘தமிழினத்தலைவர்கள்’ இருந்துவிட, செயல்படும்  தலைவர்கள் சரியான ஆலோசனையின்றி சொதப்பிவிட, இடையிலே சில தரகர்கள் சம்பாதிக்க என்று ஆளாளுக்கு அவரவர் வேலை நடந்துவிட, நாடு, வீடு , மக்கள், உறவு இவற்றை இழந்து, எதிர்காலம் எப்படியென்று தெரியாமல் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இழையோட வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருப்பது ஈழத்திலும் திருவாளர் பொதுஜனம் தான். யார் வீடு கட்டி அடித்தாலும் அடிவங்குவது என்னவோ எங்குமே பொதுஜனம்தானே. ஈழம் மட்டும் விதிவிலக்காகுமா என்ன?

ஈழத்துக்கு இருப்படியாக என்னென்ன செய்திருக்கலாம்? இப்போதும் என்ன செய்ய முடியும்?  என் எண்ணத்தை விரைவில் சொல்வேன்.

மத்தியில் மூன்றாவது அணி?

December 26, 2010

ஹைடெக் நாயுடு என்று ஆந்திரவாடுக்களால் போற்றப்பட்ட சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவ்வேளையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சரியாக வழங்கவில்லை என்பதால் உண்ணாவிரதம் இருந்தார். உடல் நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இந்நிலையில் ஜெயலலித்தா சந்திரபாபு நாயுடுவுக்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் சாராம்சம் இங்கே:

ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் போது, எதிர்க்கட்சி தலைவர்கள் அதை எதிர்த்து கடுமையாக போராடி மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக திறமை வாய்ந்ததாக இருந்த காந்திய முறையிலான போராட்டங்கள், காந்தியின் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மத்தியிலும், ஆந்திராவிலும் மதிப்பை இழந்துள்ளன. உங்களது உயிர் மதிப்பு வாய்ந்தது. மத்திய, மாநில அளவில் பல்வேறு பொதுப் பிரச்னைகளில் போராட, நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். எனது தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

இதில் காங்கிரசை இடித்துரைத்து காந்தியத்தை மதிக்காத கட்சி என்றும் கூறியுள்ளார் ஜெயலலிதா. அறப் போராட்டங்களை மதிக்காத கட்சி என்று காங்கிரசை அவர் சாடியுள்ளதால் காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக நம்ப இடமில்லை. இராகுல் காந்தி வேறு தமிழகம் வந்தும் மாநிலக் கட்சித் தலைவர்கள் யாரையுமே சந்திக்கவில்லை. அறிவு ஜீவிகள் காங்கிரசுக்கு வேண்டும் என்று சொல்லி வெற்றிடம் எங்கே என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டுப் போய்விட்டார் இராகுல் காந்தி.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராகப் போராட்டம் என்று கிளம்பியிருப்பவர் 2G ஊழலில் திமுகவுடன் ஊறிய காங்கிரசுடன் கூட்டு வைத்தால் மக்கள் தேர்தலில் தாளித்துவிடும் அபாயமும் இருக்கிறது. காங்கிரசு வழக்கம் போல வாங்க சுருட்டலாம் என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முதல் கஞ்சிக்குக் கடித்துக் கொள்ளும் வெங்காயம் வரை காசு பார்க்கிறது. அது பற்றிக் கொஞ்சமும் கூச்சநாச்சமே இல்லாமல் அதன் தலைவர்கள் சிரித்தபடி பவனி வருகிறார்கள்.

இரண்டொரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா 18 பா.ம.உ.க்களின் (MP) ஆதரவைத் தருவதாகச் சொன்ன பிறகே காங்கிரசுக்கட்சி 2G அலைக்கற்றை ஊழலில் நடழ்வடிக்கைக்கு முனைந்தது. பாஜக போராடியது என்றாலும் கவிழ்ந்தால் கவிழ்ந்து போ என்ற நோக்கில் அது போராடியது. 2G ஊழலுக்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் கவிழாமல் நான் தாங்குவேன் என்றார் ஜெயலலிதா.

அதற்கு அவர் தந்த காரணம் ஒத்த கருத்துடைய தலைவர்கள் ( Like minded leaders). ஆனால் அந்தத் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. காரணம் காங்கிரஸ்-திமுக இடையே 2Gல் 1000 இருந்திருக்கலாம். அவர்கள் ஆளுக்கு 500 எடுத்துக் கொண்டிருக்கலாம். போட்டுக் கொடுப்பதக திமுக மிரட்டியிருக்கலாம். அதனால் Dealஆ No Dealஆ என்று ஜெயலலிதா கேட்ட போது No Deal என்று காங்கிரசுக்கட்சி சொல்லியிருக்கலாம்.

ஆக இப்போது மாநிலம் மட்டுமல்லாது மத்தியிலும் ஒரு கலக்கு கலக்குவதற்கு கலம் கனிந்திருப்பதாக அவர் கருதுகிறார். தேசப் பாதுகாப்பு குறித்த கவலை தமக்கிருப்பதாக Times Now பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அதற்காக பாஜகவுடன் கூட்டணி என்றால் இப்போது தான் சற்றே நெருங்கி வந்த கிறிஸ்தவர்கள் விலகிவிடுவார்கள்.

எனவே ஒத்த கருத்துடைய தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறாரோ என்று காற்றோடு வந்து காதில் விழுந்த தகவல் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதியது மூலம் உண்மையாகலாம் என்று தோன்றுகிறது. ஆனால், ஜெயலலிதா 6ஆம் நம்பர்காரர். அதனால் அவருக்கு 3ஆம் நம்பர் ஒத்துவராது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது அனுபவம் தரும் பாடம். ஆகவே இந்த 3ஆவது அணி வெறும் வதந்தியா உண்மையா என்பது விரைவில் தெரியும்.

கவிஞர் வாஜ்பாய்

December 26, 2010

வெற்றி என்ன தோல்வி என்ன

சிறிதும் அச்சம் எனக்கு இல்லை

கடமையின் வழியில் கடுகிச் செல்கையில்

இதுவோ அதுவோ எதுவும் சரிதான்

வரங்கள் எதுவும் நான் கேட்பதில்லை!

ஒரு போதும் தோல்வியை ஏற்பதில்லை

புதுப் பாதை வகுக்கத் தயக்கமில்லை

உச்சியில் எழுதிய எழுத்தினை மாற்றவே

தோல்வியை வீழ்த்தி நிமிர்ந்து நின்றிட

புதுக் கவிதை பாடி மகிழ்கின்றேன்!!

[1998 விடுதலைத் திருநாளன்று அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தேச மக்களுக்கு உரையாற்றுகையில் மேற்கோள் காட்டிய Geeth Naya Gaathaa Hoon என்ற கவிதையின் (நானறிந்த) தமிழாக்கம். ]

வாஜ்பாய் பிறநத நாளில் அவரது பெருமைக்கு மெருகு சேர்க்க ஏதாவது செய்ய எண்ணினேன். அதற்காகத்தான் இந்தக் கவிதை  மொழிபெயர்ப்பு முயற்சி.


%d bloggers like this: