புள்ளிவிவரப் புளுகு!

பிகாரில் தே.ஜ.கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 243ல் 206 தொகுதிகளில் வென்றுள்ளது. சமோசாவில் ஆலூ (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பிகாரில் லாலு ஆட்சியில் இருப்பான் என்று மார்தட்டிய லாலுபிரசாத் யாதவும் அவருடன் கூட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் ராம்விலாஸ் பாஸ்வானும் இன்று படுதோல்வி கண்டிருக்கிறார்கள். ராகுல் மன்மத பாணம் தொடுத்து மகளிரணியைக் கவர்ந்துவிட்டார் என்று மார்தட்டிய காங்கிரஸ் தேர்தலில் கவ்விய மண்ணைக் கக்கவைத்தால் தார் பாலைவனத்தின் மாதிரியை பிகாரில் உருவாக்கலாம்.

இது பலரும் ஆவென்று வாய்பிளந்து  அண்ணாந்து நோக்கும் வெற்றி என்பது வருகிற விமரிசனங்களில் தெரிகிறது. ஆச்சரியம் சற்றே அடங்கியதும் காங்கிரசு சார்ந்து, இடதுபக்கம் சாய்ந்து வளர்ந்து கெட்ட அறிவுஜீவிகள் “எம் கடன் இந்த வெற்றியைச் சிறுமைப்படுத்திக் கதைப்பதே” என்ற நெ(வெ)றியோடு சிலபல அலசல்களைச் செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். பிகாரில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி வென்றது பெரிய சாதனையில்லை. பாரீர் புள்ளிவிவரத்தை என்று அடுக்குகிறார்கள். அந்த அடுக்கல் இறுதியாக இந்தத் தேர்தல் முறையே தவறு என்பதில் முடிகிறது.

Centre for the Study of Developing Societies என்ற அமைப்பு செய்த அலசல் ஆராய்ச்சிகளின்படி தே.ஜ.கூ. பெற்ற வாக்கு சதவிகிதமும் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் முரணான விகிதத்தில் உள்ளன. தே.ஜ.கூ. 39% வாக்குகள் பெற்று 206 இடங்களில் வென்றது. லாலு-பாஸ்வான் கூட்டணி 26% வாக்குகளைப் பெற்று 25 இடங்களில் வென்றது. காங்கிரசு 8% வாக்குகள் பெற்று 4 இடங்களில் வென்றது. வலது கம்யூனிஸ்ட் 1.69% வாக்குகள் பெற்று 1 இடத்தில் வென்றது. 0.71 % வாக்குகளை வென்ற இடது கம்யூனிஸ்ட் ஒரு இடம் கூடப் பெறவில்லை.

லாலு-பாஸ்வான்-காங்கிரஸ் ஓட்டுக்களை மொத்தமாகச் சேர்த்தால் 34% தான் வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டுகளையும் சேர்த்துக் கொண்டால் 37% வருகிறது. அப்படியும் தே.ஜ.கூட்டணிக்கு 2% குறைவுதான்.

சேர்ந்தால், பிரிந்தால், வென்றால் என்ற ஊகங்களை விட்டுவிட்டு நடந்ததைப் பார்ப்போம். தே.ஜ.கூட்டணி 39% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. லாலு-பாஸ்வான் கூட்டணி 26% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பிரதான எதிரியைவிட 50% வித்தியாசத்தில் தே.ஜ.கூட்டணி வென்றிருக்கிறது.

இதில் இன்னொரு வாதம் வைக்கப்படுகிறது. காங்கிரசு 243 தொகுதிகளிலும் போட்டி போட்டு 8% வாக்குகள் பெற்று 4 தொகுதிகளில் வென்றது. மற்ற கட்சிகள் தொகுதிகளைப் பி்ரித்துக் கொண்டு வலுவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டன. அதனால் தான் வாக்கு சதவிகிதம் அதிகம் பெற்றன. அப்படிப் பங்கு பிரித்துப் போட்டியிட்டும் லாலு-பாஸ்வான் கூட்டணியின் சாதிவாதம் எடுபடவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி.

இன்னொரு புத்திசாலி புதிதாகக் கண்டுபிடிக்கிறார் ஒரு கணக்கை. (http://arulgreen.blogspot.com/)பதிவான வாக்குகள் 53% தான், அந்தக் கணக்குப்படி பார்த்தால் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைத்த உண்மையான வாக்கு விகிதம் 20% தான். ஆகவே அவர்கள் வெற்றி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குகிறது என்கிறார். இந்த 39%, 26% எல்லாமே 53% வாக்குப் பதிவில் பிரிந்தது தானே? பிறகென்ன கணக்கில் 53% வாக்குப்பதிவு என்பதால் பெற்ற ஓட்டும் பாதியாகக் குறையும் என்கிறாராம்? இந்தக் கேள்விக்கு அவரிடம் பதிலே இல்லை.

புள்ளிவிவரங்களை அடுக்கி வைத்துத் திரித்துப் புளுகி நல்லாட்சி, செம்மையான நிர்வாகம் இவற்றைச் சிறுமைப்படுத்தப் பார்க்கும் சில்மிஷக்காரர்களுக்கு இதோ சில தெளிவான புள்ளிவிவரங்கள். வளர்ச்சியும் சீரான நிர்வாகமுமே வெற்றிக்குக் காரணம் என்பதற்கு இவை சான்றுரைக்கும்.

1980களில் விவசாயமல்லாத துறைகளில் பிகரின் வளர்ச்சி ஆண்டுக்கு 6.62%, இந்தக் காலகட்டத்தில் மொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு 6.61% தான்.  அதே காலத்தில் (1980கள்) பிகாரின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 2.45% உயர்ந்தது, மொத்த இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 3.32% உயர்ந்தது.

1990களில் சாதி அரசியல் (தற்போதய jargonல் சொன்னால் Mandal Politics) மூலமாக லாலு தலையெடுத்துக் கோலோச்சத் துவங்கியபின் விவசாயமல்லாத துறைகளில் பிகரின் வளர்ச்சி ஆண்டுக்கு 3.19%, அதே காலத்தில் மொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு 7.25%. 1990களில் பிகாரின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 0.12% உயர்ந்தது, மொத்த இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 4.08% உயர்ந்தது.

பிகார் விவசாயத்துறையின் வளர்ச்சி 1980களில் 2.21%, இந்தக் காலகட்டத்தில் மொத்த இந்திய தேசத்தின் விவசாயத்துறை வளர்ச்சி ஆண்டுக்கு 3.38%.  1990களில் பிகாரில் 2.35%,  மொத்த தேசத்திலும் 3.14%. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க WTOவை கடுமையாக எதிர்த்து வந்த லாலு ஆட்சியிலும் கூட பிகார் விவ்சாயத்துறை சொல்லிக் கொள்ளும் படியாக வளரவில்லை.

இதே தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் நடந்ததைப் புள்ளிவிவரத்தோடு  பார்க்கலாம்.

2004–05 முதல் 2008–09 வரிஅயிலான நிதியாண்டில் பிகாரின் மாநில ஒட்டுமொத்த‌ உற்பத்தி (GSDP) 11.03% வளர்ந்தது, இது பிகாரை நாட்டிலேயே இரண்டாவது விரைந்து வளரும் மாநிலமாக ஆக்கியுள்ளது. (முதலாவது குஜராத் 11.05%).

5,750 மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.23,350 கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சாலைகள் போடுவதற்காக பிகார் அரசு 2007-08ல் 2,222.08 கோடி ரூபாய் செலவு செய்து ஏறக்குறைய 7500 கிலோ மீட்டருக்கு ரோடு போட்டார்கள். 2003-04ல் 51.2 கோடி தான் செலவு செய்யப்பட்டது. ஆனாலும் 2005 வரை சாலைகள் நடந்து போகக்கூட லாயக்கற்றவைகளாக இருந்தன. நிறைமாத கர்ப்பிணியை வண்டியில் வைத்துக் கொண்டு போனால் பத்தடி  தூரத்தில் பிரசவமாகிவிடும் என்று குண்டும் குழியுமான சாலைகள் பற்றி ஊரு நாட்டில் சொல்வார்கள். அதை விட மோசமான சாலைகள் தான் லாலு ஆட்சியில் இருந்தன.

2004ல் 411 ஆள் கடத்தல்கள் நடந்தன. 2009ல் அது 66ஆகக் குறைந்தது. வழிப்பறி 2004ல் 3000, 2009ல் 1500. வங்கிக் கொள்ளைகள் 2004ல் 27, 2009ல் 7. ஓய்வு பெற்ற மத்திய காவல்படை அதிகாரிகள் கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்டனர். 5000 குற்றவழக்குகள் ஓராண்டில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். ஓராண்டில் அரசு அதிகாரிகள் மீது 75 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டு 35 பேர் சிறைத் தண்டனை பெற்றனர்.

2,36,000 ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை நியமிக்கத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தகுதியான ஆசிரியர்கள் இல்லையெனில் இருப்போரை வைத்துச் சமாளி என்று ஒப்பேற்றாமல்  தகுதியான ஆசிரியர்களை நாடு முழுவதுமிருந்தும் அழைக்கிறது பிகார் அரசு.

உலகப் பொருளாதார மந்த நிலையிலும் பிகாரில் வாகன விற்பனை 45% அதிகரித்துள்ளது. 2008ல் மட்டுமே 13,500 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. வரிவசூல் லாலு ஆட்சியை விட 265% அதிகம். 114,000 பேர்உக்கு வேலையளிப்பதற்காக 23 சர்க்கரை ஆலைகள் திறப்பது உட்பட 600 கோடி ரூபாய் செலவில் 2009ல் தொடங்கி பணிகள் நடை பெற்றுவருகின்றன.

இன்னும் விட்டுப்போன புள்ளிவிவரங்கள் ஏராளம். இவ்வளவு வளர்ச்சிப் பணிகள் இருந்தும் சாதி ஓட்டு, மத ஓட்டு, சதவிகிதம் குறைவு அதனால் ஜனநாயகம் கேலிக்கூத்து என்றால் அத்தகைய வாதங்களை சிந்தனைக்கு வந்த பக்கவாதம் எனலாம். சிந்தை  இடது புறமாய் இழுத்துக் கொண்டது எனலாம். தமிழக முதல்வர் பாணியில் சொல்வதானால் பிகாரிகள் ரொட்டியால் அடித்த பிண்டங்கள் எனலாம்.

நல்ல மனம் இருந்தால் வென்றவர்களை வாழ்த்தலாம். தெளிந்த சிந்தை இருந்தால் வாக்களிப்பதற்கு முன் பிகாரைப் போல தமிழகம் எப்போது, எப்படி முன்னேறும் என்று சிந்திக்கலாம்.

Advertisements
Explore posts in the same categories: அரசியல்

3 Comments on “புள்ளிவிவரப் புளுகு!”

 1. Sriram Says:

  Excellent post.. When there is small issue, these media folks and useless people tried to focus more.. Even in the case of win (especially with BJP), they tried to find a fault..


 2. // //இன்னொரு புத்திசாலி புதிதாகக் கண்டுபிடிக்கிறார் ஒரு கணக்கை. (http://arulgreen.blogspot.com/)பதிவான வாக்குகள் 53% தான், அந்தக் கணக்குப்படி பார்த்தால் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைத்த உண்மையான வாக்கு விகிதம் 20% தான். ஆகவே அவர்கள் வெற்றி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குகிறது என்கிறார். இந்த 39%, 26% எல்லாமே 53% வாக்குப் பதிவில் பிரிந்தது தானே? பிறகென்ன கணக்கில் 53% வாக்குப்பதிவு என்பதால் பெற்ற ஓட்டும் பாதியாகக் குறையும் என்கிறாராம்? இந்தக் கேள்விக்கு அவரிடம் பதிலே இல்லை.// //

  கேள்விக்கு பதில் அந்த பதிவிலேயே இருக்கிறது. “”பீகாரில் மொத்தம் பதிவான வாக்குகள் 53 % மட்டுமே. இதையும் கணக்கில் கொண்டால், ஆளும் கூட்டணி உண்மையில் பெற்றுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே. (வாக்களிக்காதவர்கள் வாக்களித்தால் அது இரு அணிக்கும் போகலாம்).”” என்றுதான் கூறப்பட்டுள்ளது. எனவே, 100 % வாக்களிப்பு நடந்தால் கூட ஆளும் கூட்டணிக்கு மொத்தம் 39 % வாக்குகள் விழ் வாய்ப்பு உண்டு என்பதே இதன் பொருள்.

  மேலும் விவரங்களுக்கு: இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!


  • //பீகாரில் மொத்தம் பதிவான வாக்குகள் 53 % மட்டுமே. இதையும் கணக்கில் கொண்டால், ஆளும் கூட்டணி உண்மையில் பெற்றுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே. (வாக்களிக்காதவர்கள் வாக்களித்தால் அது இரு அணிக்கும் போகலாம்).”” என்றுதான் கூறப்பட்டுள்ளது. எனவே, 100 % வாக்களிப்பு நடந்தால் கூட ஆளும் கூட்டணிக்கு மொத்தம் 39 % வாக்குகள் விழ் வாய்ப்பு உண்டு என்பதே இதன் பொருள்.//
   ஆக, இந்தக் கணக்குகள் ஒரு ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவை. நிதர்சனம் இதுவே. 53% வாக்குப் பதிவு நடந்தது. வாக்களித்தவர்களில் 39% தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவு. 26% வாக்குகள் பெற்றது லாலு-பாஸ்வான் கூட்டணி. வெற்றி பெற்ற் அணியின் வாக்கு சதவிகித வித்தியாசம் 50%.
   கற்பனைக் காரணிகளைத் தவிர்த்துப் பார்த்தால் வெற்றிக்கு வித்திட்டது வளர்ச்சி, திறமையான நிர்வாகம் அவ்வளவே!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: