Archive for December 9, 2010

வித்தை காட்டும் மோடி!

December 9, 2010

குஜராத் முதல்வ்ர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தார். அரசு முறைப்படி வரவேற்கவில்லை. தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார் மோடி. அறை கூட்டத்தால் நிரம்பியது. மற்றோர் அறையில் அவர் பேச்சை டிவியில் ஒளிபரப்பினர். அந்த அறையும் நிரம்பியது. அத்தனை பேரும் தொழிலதிபர்கள், தொழிற்கூட்டமைப்பு அதிகாரிகள். பேச்சினூடே மன்மோகன் சிங் முதல ஓபாமா வரை அனைவரையும் மோடி கலாய்த்தார்.

2011ஆம் ஆண்டு குஜராத்தை பல துறைகளில் நாட்டில் முதலாவதாக ஆக்க Vibrant Gujarat 2011 என்ற திட்டத்தை முன்வைத்து தொழிலதிபர்களை குஜராத்தில் முதலீடு செய்ய அழைத்தார். கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டுக்கு 9.6% விவசாயத்துறை வளர்ச்சி, 12% தொழில் வளர்ச்சி,  24/7 தடையற்ற மின்சார வசதி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 16% பங்கு என்ற சாதனைகளை முன்வைத்து  குஜராத்துக்கு தெழில் தொடங்க வாரீர் என்று அழைத்தார்.

ஆர்வம் காட்டிய தொழிலதிபர்களிடம் திட்டம் சிறப்பாக இருந்தால் அன்று மாலை 4 மணிக்குள் நடவடிக்கை என்று உறுதியளித்தார். “farm to fibre to fabric to fashion to foreign” என்ற கோஷத்தை முன்வைத்து ஜவுளித் தொழிலதிபர்களை குஜராத்துக்கு அழைத்தார். தான் தமிழகத்திலிருந்து முதலீடுகளை கவர்ந்து போக வரவில்லை என்றும் அடுத்தடுத்த முதலீடுகளை குஜராத்தில் செய்யுமாறும் சொன்னார்.

நிற்க. இது நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறதே! இப்போது என்ன அதற்கு என்று கேட்பது நியாயம். தொழிற்துறை வட்டாரங்களில் அடிபடும் பேச்சு என்னவென்றால் ஹூண்டாய், ஃபோர்ட் மற்றும் சில கம்பெனிகள் கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்துக்குப் போகலாமா என்று யோசிக்கிறார்களாம். என்ன காரணங்கள் சொல்கிறார்கள் என்று பார்த்தால் மோசமான சாலைகள், சட்டம் ஒழுங்கு சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சினைகள், லஞ்சம், ஆமை வேகத்தில் நடக்கும் அரசு வேலை என்று அடுக்குகிறார்கள்.

மேற்சொன்ன காரணங்கள் குஜராத்தில் இல்லையா? சாலைகள் மட்டும்  மோசம். அதையும் இப்போது சீர் செய்கிறார்களாம். மற்ற பிரச்சினைகள் அறவே இல்லை. எப்படி நம்புவது. உதாரணம் டாடா நேனோ.

டாடா நிறுவனம் உலகின் விலை மிகக் குறைந்த மகிழுந்து தயாரித்த போது அதை மேற்கு வங்கத்தில் தொழிற்சாலை அமைத்துத் தயாரித்துத் தர முடிவு செய்தார்கள். புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ஞானம் பிறந்துவிட்டது, மே.வங்கம் தொழில் முன்னேற்றத்தின் ராஜபாட்டையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்றெல்லாம் எழுதப்பட்டது. மமதா பானர்ஜி காரியத்தைக் கெடுத்தார். டாடாவை கப்பர்சிங் (ஷோலே வில்லன்) போலச் சித்தரித்து போராட்டங்களை நடத்தினார். அந்த விவரத்துக்குள் இப்போது போக வேண்டாம்.

வங்கத்தைக் காலிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் டாடாவை கூவி அழைத்தது இரு மாநிலங்கள்.  மகாராஷ்டிரம் ஒன்று. குஜராத் மற்றொன்று. டாடா குஜராத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் குஜராத்தில் வேலைகள் வேகமாக நடைபெற்றன. மோடி தொழில்துறைக்கு பிரத்தியேக சலுகைகள் அளிப்பதை எதிர்ப்பவர் என்றபோதும், நேனோவுக்கு பிரத்தியேகச் சலுகைகளை அளித்தார். காரணம், வாகனத்துறையில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் மட்டுமே அதுவரை குஜராத்தில் பெருமளவில் செயல்பட்டன. பெருந்தொழில் ஒன்று வருவது அதுவே முதல் முறை. எப்படியாவது நேனோ குஜராத்துக்கு வரவேண்டும் என்ற முனைப்பு.

1000 ஏக்கர் நிலம் தயாராக வைத்துக் கொள்ளப்பட்டது. விழா முடிந்ததும் வேலை எப்போது துவக்குகிறீர்கள் என்றனர் குஜராத் அதிகாரிகள். விழா நடாத்தி கல்வெட்டு திறந்து வைத்து, ஆயிரக்கணக்கானோர் வேலை பெற்றதாகப் பேசிவிட்டு, அப்பறம்…நிலம் எங்கன பாக்குறீக என்று அடிப்படையைத் துவக்குவதும், யாருக்கு எம்புட்டு என்ற பேரத்தில் இறங்குவதும் நடக்கவில்லை.

அறிவிப்புக்கு வெகுநாட்கள் முன்பே குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தின் 2200 ஏக்கர் நிலத்தில் 1000 ஏக்கர் அரசுக்கு மாற்றப்பட்டது. திங்கட்கிழமை டாடா அதிகாரிகள் பார்த்து ஓகே செய்த நிலம் செவ்வாய்க்கிழமை டாடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. தொழில் துவக்க அனுமதி போன்ற நிர்வாக விவகாரங்கள்  இரண்டே நாட்களில் முடித்துத் தரப்பட்டது. ஆனால் எந்தப் பதிலுபகாரமும் இல்லாமல் வாரிக் கொடுத்துவிடவில்லை.

டாடா நிறுவனம் ஒரு வாகனப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தை குஜராத்தில் அமைக்கும். விவசாய ஆராய்ச்சி மையம் ஒன்றும் கடல் உயிரியல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் டாடா நிறுவனம் அமைக்கும். வேலை வாய்ப்பில் குஜராத்திகளுக்கு முன்னுரிமை தரப்படும்.  10000 கூடுதல் வேலைக்கான ஆட்கள் தேடும் பணி தொடங்கிவிட்டது. வாகன உதிரி பாகங்கள், இன்னபிற சிறு மற்றும் குறு தொழில்கள் டாடா நேனோவுக்குத் தேவையான மூலப் பொருட்கள், பாகங்களை சப்ளை செய்யும். நேனோ குஜராத்துக்கு வந்ததால் அது சார்ந்த சிறு மற்றும் குறு தொழில்கள் 16% அதிக லாபம் ஈட்ட முடியும்.

இப்படிப் பல சிறப்புகளை கையில் வைத்துக் கொண்டு குஜராத்துக்கு வாருங்கள் என்று மோடி அழைத்தது பற்றி 176000 கோடி புகழ் திமுக கண்டுகொள்ளவில்லை. காங்கிரசுக்காரர்களுக்கோ பொறுக்கவில்லை. காங்கிரசு எம்பி K.S.அழகிரி மத்திய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்துத் தொழில்களை மோடி குஜாராத்துக்குக் கவர்ந்து செல்வதாக அவர் குமுறியிருக்கிறார்.

என் கேள்வி இதுதான். மோடி கவர்கிறார் என்று எம்பி எம்பிக் குதிக்கும் அந்த  எம்பி மோடி குஜராத்தில் செய்த வசதிகளை, வாய்ப்புகளை, நிர்வாகச் சிறப்பைத் தமிழகத்தில் தரவில்லையே என்று கூட்டணிக் கட்சியான திமுக தலைமையிலான மாநில அரசை ஏன் கேட்கவில்லை? தமிழக முதல்வரோ அமைச்சர்களோ கடந்த 5 ஆண்டுகளில் பிற மாநிலங்களுக்குச் சென்று தமிழகத்தில் தொழில் தொடங்க வாரீர் என்று அழைத்ததுண்டா?

க்டந்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், மணல் அள்ளல் தவிர வேறு தொழில் தமிழகத்தில் வளர்ந்த வரலாறு இருக்கிறதா? சிறு மற்றும் குறு தொழில்கள் தமிழகத்தில் நசிந்தது தானே 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனை? இதைத் தட்டிக் கேட்காமல் மோடி இங்கே வந்து மஸ்தான் வித்தை காட்டுகிறார் என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

Advertisements

மாளட்டும் முஜாகிதீன் மூடமனம்

December 9, 2010

புண்ணியத் தலமாம் காசியம் பதியிலே

புனிதத் தாயாம் கங்கையின் மடியிலே

பக்தியோடு வழிபட்ட மாலைப் பொழுதிலே

பக்தரைக் காலன் கைக்கொண்டு போயினன்

குண்டுகள் வெடித்து குலமக்கள் மாண்டனர்

குற்றுயிர் தாங்கியோர் சிகிச்சைக்குப் போயினர்

கதறும் மக்களின் கண்ணீர் ஓடையில்

கங்கையும் சற்றே பெருகியே ஓடினாள்

உளவுக் கென்றொரு பிரிவினர் உண்டு

உள்ளம் எண்ணும் எண்ணம் அறியும்

தனியோர் திறமும் அவருக்கு  அதிகம்

தனிப்பெரும் அப்படை சொன்னது என்ன?

முஜாகிதீன் என்றொரு மூடக் குழுவினர்

முற்றிலும் மூளையைத் களைந்து நிற்பவர்

மாற்றான் பேச்சுக்கும் காசுக்கும் மயங்கினர்

மாநிலம் போற்றும் பாரதம் எரிக்கவே

சொன்னது கேட்டும் சும்மா யிருந்தால்

சொப்பன வாழ்வில் சுகமா யிருந்தால்

ஆவன செய்து நாட்டை நடாத்தும்

ஆள்வோர் ஆற்றும் கடமையும் என்ன?

கடுமையாய்க் கண்டித்தார் தலைவர் பெருமக்கள்

கடுஞ்சொல் பேசினார் அமைச்சர் திருமகனார்

கொடுமைக்கு நிறம்பூசும் சிதம்பரத் தமிழ்மகனார்

கொடுந்தொழிலர் வேறறுக்கப் பச்சைக்கொடி காட்டுவரோ!

கல்வி கேள்வியில் இடம் பெறவேண்டிய

கனவுகள் பலவும் கருகிய நிலையில்

இரண்டே வயதான குழந்தை ஒன்று

இறந்தவர் பட்டியலில் முதலிடம் கண்டது

காசியம் பதியிலே மாண்டால் புண்ணியமாம்

காணாமல் போகுமாம் கடுமையான பாவமும்

கபடத்தொழில் செய்யும் முஜாகிதீன் மூடத்தனம்

கங்கையொடு போகட்டும் மக்கள்நலம் வாழட்டும்!


%d bloggers like this: