Archive for December 15, 2010

ஏலேலோ ஐலசா! ஏலகிரி ஐலசா!!

December 15, 2010

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று ஒரு படம். விக்ரமன் இயக்கியது. கார்த்திக், ரோஜா மற்றும் பலர் நடித்தது.  அதில் ஒரு காமெடி காட்சி வரும். கார்த்திக்கும் ரமேஷ்கண்ணாவும் பணக்கார வீட்டில் நற்பெயர் பெற்று  கிட்டத்தட்ட முக்கிய விருந்தினர் போலத் தங்கியிருப்பர். இரவு 11 மணிக்கு ACஐ 20 டிகிரியில் வைத்துக் கொண்டு, வீட்டுச் சமையல்காரனிடம் ஐஸ்க்ரீம் கேட்பர். குளிர் தாங்காது கம்பளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும் இருவரும் ஐஸ்க்ரீம் கொண்டு வந்த சமையல்காரனிடம் ஏசியை இன்னும் 2 டிகிரி குறைக்கச் சொல்வர். சமையல்காரன் போனதும் “நாம ஓவரா போறோமோ?” என்று கேட்டுக் கொள்வர்.

இந்தக் காட்சியை நான் நினைத்துக் கொண்டத்ற்கும் தமிழக முதல்வர் மார்கழி பிறக்க மூன்று நாட்கள் இருக்கையிலே, பாதித் தமிழகம் வெள்ளத்தில் மிதக்கையிலே ஏலகிரிக்கு ஓய்வெடுக்கச் சென்றதற்குதத சம்பந்தம் இருப்பதாக யாரேனு்ம் எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. ஏலகிரிக்குப் போன முதல்வரே பொறுப்பு!

1956 ஆம் ஆண்டு திராவிட நாடு இதழில்  அறிஞர் அண்ணா எழுதிய கடிதங்கள் சில படித்தேன்.  அவற்றிலிருந்து சில வரிகளை இங்கே தருவேன். ஏலகிரிப் பயணத்தை இது இடித்துரைப்பதாக யாரேனு்ம் எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. ஏலகிரிக்குப் போன முதல்வரே பொறுப்பு!

வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, “ஊட்டி’ செல்வர். இங்கு மேடையில் “கோடை இடி’ யெனக் காங்கிரசார் முழக்கமிடுவர், “கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம் பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக் காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!! – என்று வெளுத்து வாங்கினார்கள்.

கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்; இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க ஏற்பாடாகி வருகிறது.

பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான் பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை! என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக் கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்கு வதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான் வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது.

குமரி மாவட்டம்  கடலோடு சங்கமித்துச் சற்றொப்ப ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் கீழ்வரும்  அண்ணாவின் வரிகளுக்கும்,  இளைஞன் படவிழாவில் அவர்தம் அருமைத் தம்பி கலந்து கொண்டு இன்புற்றதற்கும் சம்பந்தம் இருப்பதாக யாரேனு்ம் எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. இளைஞன் படவிழாவில் இன்புற்ற முதல்வரே பொறுப்பு!

ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று உறுதி அளிக்கக் காணோம் – அதற்கான திட்டம் தீட்டுவதாகவும் தெரியவில்லை – அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம்.

அதுமட்டுமல்லாமல் ’59ல் திமுக வினர் கோஷமிட்ட சில வசனங்கள் இதோ:

“குடல் எரியுது; கும்பி கருகுது; குளு குளு ஊட்டி ஒரு கேடா?”

“ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?”

ஆறுதலாக ஓரிரு சொற்கள்:

இடுக்கண் வருங்கால் நகவேண்டுமென்ற வள்ளுவன் வாக்கு காற்றோடு போகலாமா தமிழா?

தீதும்  நன்றும் பிறர்தர வாராயெனும் பொன்மொழியே நம் செம்மொழியாம்…. இந்தப் பாடலைக் கேள். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இன்ப வெள்ளம் தேனாகப் பாய்கிறதே!

மறுபடியும் வெள்ளமா!!!

(கடைசி இரு சொற்களை வடிவேலு ஸ்டைலில் யாரேனும் படித்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல, அப்படிப் பேசிப் பழக்கிவிட்ட வடிவேலுவே பொறுப்பு!)