ஈழத்தின் அவதியும் தமிழகத்தின் அசதியும் – I

ஈழத்திற்கு தமிழகம் தேவைப்பட்ட வேளையில் உதவவில்லை என்ற குமுறல் ஈழத்து மக்களிட்மும், வருத்தம் தமிழக மக்களிடமும் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களின் எண்ணவோட்டம் குறித்து அறிய முயல்வதை 176000 கோடியோடு விட்டுவிடுவது மனநலத்துக்கு நன்மை பயக்கும் என்று நடத்தைசார் ஆய்வு (Behavioral Research) முடிவுகள் சொன்னதால்  சற்று நிறுத்தியிருந்தேன். மீண்டும் ஆட்சியாளரை விடுத்து சற்றே பிரச்சினையை அலசுவோம்.

ஈழப் போராட்டம் ஏதோ 1983ல் துவங்கியதாக ஒரு பரவலான, தவறான நம்பிக்கை இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்றோரே ஈழத்தமிழர் என்பது பெருந்திரிபு. ஈழப் பிரச்சினை ஒரு நெடும்பகை. தமிழகத்து மூவேந்தர் காலம் தொட்டு இருந்து வரும் சிக்கல். நாம் அவர்களை வென்று ஆள்வதும், அவர்கள் நம்மை வெல்வதும் மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இருக்கும் தொடர்பு காலங்காலமாக இருந்துவரும் உறவு.

சிங்களரும் தமிழரும் பொதுவில் எதிரும் புதிருமாய் ஆனது சிங்கள பேரினவாதம் தொடங்கிய போது. 1970களில் பேரினவாதம் வலுப்பெற்று 1983ல் தமிழர்கள் அகதிகளாய் வெளியேறியதில் இனப்போராட்டமாக வெடித்தது. காந்தியத்தைச் சிலர் தத்தெடுத்துக் கொண்டபோதும் பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் புலைகளின் உணர்ச்சி கலந்த ஆயுதப் போராட்டம் பலரது ஆதரவைப் பெற்றது. எம்ஜிஆர் முதல் பல தமிழகத் தலைவர்கள் புலிகளை ஆதரித்தனர், உதவிகள் செய்தனர். மைய அரசு ஒரு காலம் வரை இதற்கு ஆதரவாக இருந்து பின் பல்வேறு காரணிகளினால் மாறியது.

இராஜீவ் காந்தி தெற்காசியாவில் பலமான தலைவனாக உருவாகும் நோக்கத்தில் அண்டை நாடுகளில் அமைதியை நாட்டுவோம் என்று அமைதிப் படையை அனுப்பினார். ஆனால், யார் எதிரி என்பது சரியாகத் அறிவுறுத்தப்படாமல் “திருப்பதி மலையில் மொட்டைத் தாத்தனைத் தேடிப்பிடி” என்ற வகையில் “இலங்கையில் அமைதியை நிலைநாட்டுக” என்று கட்டளையிடப்பட்ட படை பல உத்திசார் தவறுகள் செய்தது. அதற்கான காரணிகளை ஆராயப்போந்தால் அன்றைய பாரதத்தின் பல தவறான வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளை அலச வேண்டும். (இப்போது நேரமில்லை!)

பிரச்சினையின் ஆணிவேரைப் புரிந்து கொள்ளாத அரசியல் தலைவராக இருந்தார் இராஜீவ்காந்தி. ஆனால் அவரது நோக்கம் சரியானது. ஈழப் பிரச்சினையின் அடிப்படையை அவருக்குப் பேசிப் புரிய வைக்க முடிந்த தலைவர்கள் ஒரு சிலரில் பலர் அரசியல் காரணங்களால் ஓரங்கட்டப்பட்டார்கள். சிலர் அரசியல் காரணங்களால் வாளாவிருந்தார்கள். இராஜீவின் அண்மையும் நம்பிக்கையும் பெற்றிருந்த எம்ஜிஆர் உடல் நலமின்மையால் செயல் குன்றிப் போனார்.

அதே நேரம் புலிகள் ஆயுதப் போராட்டம் நெறிப்படுத்தலின்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்கிற்று. அகதிகளாய் வந்தோரில் சிலர் உறவின் உரிமையைச் மிகையாக மீறியதும் சர்வதேச அரங்கில் பாரத அரசுக்கு நெருக்கடி தந்தது. இராஜீவ், பிரபாகரன் இருவருமே இந்தக் கால கட்டத்தில் தவறான வழிகாட்டுதலால் தவறிழைத்தனர். தமிழினத்தின் விடுதலைக்குப் பேர் வாங்குவது யார் என்ற போட்டியில் தமிழகத் தலைவர்கள் கருணாநிதி, வீரமணி உள்ளிட்ட சிலர் தமிழினத் தலைமை என்ற பட்டத்தின் பின் சென்று பட்டத்திற்குக் காரணமான தமிழினத்தை மறந்தனர்.

ஈழத்தைச் சொல்லியே பலர் சொந்தக் கணக்கில் பணம் பார்த்தனர். இலக்கில் தெளிவின்றி அனுப்பப்பட்ட அமைதிப்படை பாரதம் திரும்பியது. படை போன போது தமிழினத்தின் கதி பற்றிக் கடிதத்திலும் கட்டுரையிலும் மட்டுமே கவலைப்பட்ட கருணாநிதி, மத்தியில் சிநேகமான ஆட்சி என்பதால் திரும்பிய படையை வரவேற்க மறுத்தார்.

உட்கார்ந்து பேசிப் புரிய வைத்தால் உதவக்கூடியவர் என்ற நிலையில் இருந்த இராஜீவ்காந்தி 1991ல் கொலையானது புலிகளின் மீதான வெறுப்பை வேரூன்றச் செய்தது. புலிகள் இராஜீவைக் கொலை செய்ய வலுவானதொரு காரணம் அமைதிப்படையாக மட்டும் இருக்க முடியாது. பொன்மயமான அமைதிக் கோட்பாட்டால் (Golden Silence) வெளிச்சத்துக்கு வரவியலாத காரணங்கள் பல புதைந்து போயின. பணம் முதல் KGB வரை பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மை இன்று வரை தெளிவாகத்  தெரியவில்லை.

நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தபின் லேவாதேவியில் போன தங்கத்தை மீட்டெடுக்கவே சிண்டைப் பிய்த்துக் கொண்ட பாரதம் சில ஆண்டுகள் சுற்றுப்புறத்தில் பஞ்சாயத்துப் பேசுவதை நிறுத்தி வைத்தது.  பொருளாதாரம் சார்ந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் தலைக்கு மேலே இருந்தன. தமிழகத்தில் முதல்வரான ஜெயலலிதா முற்று முச்சூடும் புலிகளைப் புறக்கணித்தார். காரணம் இராஜீவ் கொலையும் அதனால் தமிழக மக்களின் புலிகள் மீதான வெறுப்பும்.

1990களில் துவங்கி புலிகள் தமக்கு நண்பர்களை விட எதிரிகளையே அதிகமாக்கிக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் புலிகள் செய்த தவறுகள், குற்றங்கள் அதிகரித்தன. சர்வதேச அரங்கில் புலிகள் மக்கள் சார்ந்த போராளிகள், இன விடுதலைக்குப் போராடும் குழு என்றிருந்த பிம்பம் புலிகளால் பாதியும், அவர்களை ஆதரித்த சிலரால் பாதியுமாகச் சிதறடிக்கப்பட்டன. சந்திரிகாவின் வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் சவப்பெட்டியின் மீது  நச்சென்று ஆணிகளை அடித்து வைத்தார்.

இருந்த சில உருப்படியான நண்பர்களையும் புலிகள் பகைத்துக் கொண்டனர். புலிகள் சர்வதேச அளவில் ஆயுதம் மட்டுமல்லாது பழம்பொருட்கள் உள்பட பலதும் கடத்தி ஈழப் போராட்டத்துக்குப் பணம் சேர்தனர். ஆனால் சர்வதேச ஆதரவு என்பதைப் பற்றிக் அவர்கள் கவலையேபடாது செய்த பல செயல்கள், புலிகள் பயங்கரவாதிகள், மனித விரோத சக்திகள்  என்ற வாதத்துக்கு வலு சேர்த்தது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழமக்களின் எதிர்காலத்தை நாசமாக்கியது.

புலிகளுக்கு இராஜ தந்திர உதவிகள் செய்தோரைவிட, இராஜ தந்திரமாய் அவர்களைப் பயன்படுத்தியோரே அதிகம். பிரபாகரன் பெயரைச் சொல்லி தமிழகத்தில் பெரிய மனிதரானோர் அதிகம். ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு அவர்கள் செய்தது என்னவென்று இன்று பார்த்தால் போட்ட பணம் நிலைக்கட்டும் சச்சாமி என்று இராஜபக்சேவின் சேவடி பணிந்தது தான்.

சற்றே உட்கார்ந்து யோசித்தால் ஈழத்தமிழ் இனப் போராட்டத்தை சர்வதேச இராஜதந்திர அரங்கில் (International Diplomatic Platform) எடுத்துச் செல்ல புலிகள் தேர்வு செய்த களமும் நம்பிய மனிதர்களும் தவறோ என்று தோன்றுகிறது. பாரதத்தின் மைய அரசுக்கு இலங்கை அரசின் Ethnic cleansing வேலைகள் பற்றி சரியாக எடுத்துரைத்து திருத்தமான முறையில் அழுத்தம் கொடுக்கப்படவில்லை.சர்வதேச சமுதாயத்தை சந்திரிகா அணடக்கட்டிக் கொண்டது போல, தமிழர்கள் செய்யவில்லை.

ஈழத்தை வைத்து யார் பெயரெடுப்பது என்ற போட்டியில் ‘தமிழினத்தலைவர்கள்’ இருந்துவிட, செயல்படும்  தலைவர்கள் சரியான ஆலோசனையின்றி சொதப்பிவிட, இடையிலே சில தரகர்கள் சம்பாதிக்க என்று ஆளாளுக்கு அவரவர் வேலை நடந்துவிட, நாடு, வீடு , மக்கள், உறவு இவற்றை இழந்து, எதிர்காலம் எப்படியென்று தெரியாமல் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இழையோட வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருப்பது ஈழத்திலும் திருவாளர் பொதுஜனம் தான். யார் வீடு கட்டி அடித்தாலும் அடிவங்குவது என்னவோ எங்குமே பொதுஜனம்தானே. ஈழம் மட்டும் விதிவிலக்காகுமா என்ன?

ஈழத்துக்கு இருப்படியாக என்னென்ன செய்திருக்கலாம்? இப்போதும் என்ன செய்ய முடியும்?  என் எண்ணத்தை விரைவில் சொல்வேன்.

Advertisements
Explore posts in the same categories: அரசியல்

2 Comments on “ஈழத்தின் அவதியும் தமிழகத்தின் அசதியும் – I”

  1. YOGA.S Says:

    உங்களுக்கும் கூட சில அடிப்படை விஷயங்கள் புரியவில்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது!அரசியல் ஆழமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!பண்டைய காலத்தில் சிங்கள தமிழ் மக்கள் என்றுமே ஒன்று கூடி வாழ்ந்ததில்லை!இலங்கையில் மூன்று வெவ்வேறு இராச்சியங்களே இருந்தன.பொருள் தேடி அலைந்த போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் வசம் ஈழத் தீவு இருந்த போது இவ்வாறான ஒரு பிரச்சினை இருந்ததில்லை!பெரும் படை பலத்துடன் இறுதியாக இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் தான் பிரச்சினையே முளை விட்டது!பல்வேறு அபிவிருத்திகளிலும்,தங்கள் நலனுக்காகவேனும் சாலைகளையும்,புகையிரதப் பாதைகளையும் துறைமுகங்களையும் விஸ்தரித்த ஆங்கிலேயர்,பின்னாளில் தங்கள் நிர்வாக வசதிக்காக கொழும்பை மையமாக,தலை நகராக வைத்திருந்தார்கள்!இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த பின்னர் கடலால் சூழப்பட்ட இலங்கையின் பிராந்திய நலன் அந்நாளில் புரிந்து கொளாப்படாது ,ஒன்றிணைந்த இலங்கையில் தமிழர்கள் நலனை சிங்களவர் கையில் ஒப்படைத்ததே ஆங்கிலேயர் செய்த மாபெரும் தவறு!படிப்படியாக தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் உரிமைகள் மறுக்கப்பட்டன!அரசமைப்பில் மாற்றங்கள் செய்து இன்று இந்த நிலை!1948-முதலே பெரும்பான்மையினம் தமிழ் பேசும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தியதில்லை!அன்று தொடங்கிய அறப்போராட்டம்,சுமார் இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளியது!சும்மா ஒன்றும் எங்கள் இளைஞர்கள் ஆசைப்பட்டு ஆயுதம் ஏந்தவில்லை,நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்!கல்வி,வேலை வாய்ப்பு என்று ஆரம்பித்த பிரச்சினை நிலம் பிடிக்கும் அளவுக்கு வந்ததே முற்றுமுழுதான காரணம்!இந்தியாவில் நடந்தவைகள் சோகமானவையே!எனினும்,ஈழத்தில் இந்தியப் படைகள் ஆற்றிய”தொண்டு”ராஜீவின் மரணத்தில் முடிந்தது!இன்று சர்வதேசமும் எங்கள் போராட்டத்தின் உண்மை முகத்தைப் புரிந்து கொண்டுள்ளன!இந்தியாவைத் தவிர!!!!!!!!!!!!!!!!


    • புலிகள் இந்திய அமைதிப்படையை எதிர்த்து சிங்களரும் நாங்களும் சகோதரர், மூன்றாம் நாடு இந்தியா மூடிக் கொண்டு போகட்டும் என்றனரே! சகோதரனை எதிர்த்துச் சண்டை போட்டால் வீட்டோடு போட வேண்டியது தானே? உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள்? சிங்களரும் நாங்களும் சகோதரர் என்று சொன்ன பிறகும் இராஜீவைக் கொன்ற பிறகும் புலிகள் இந்தியாவில் மதிப்பிழந்தனர். புலிகள் சர்வதேச இராஜதந்திரத்தில் அக்கறை காட்டவில்லை. போரில் வென்று ஈழம் அமைப்போம் என்றனர். சற்றொப்ப அமைத்த ஈழத்துக்கும் உலக நாடுகளின் அங்கீகாரம் பெற விழையவில்லை. இலக்கினை நோக்கிய பயணத்தில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் செயல்பட்டு நம்பினோரையும் கைவிட்டனர் புலிகள். அமிர்தலிங்கம் முதலிய மூத்த தமிழ்த் தலைவர்கள் கொலையை நியாயப்படுத்த முடியாது. மாத்தையா போன்ற இயக்கத்தவர் கொலையும் போட்டியைச் சமாளிக்கச் செய்யப்பட்டது என்பதை ஆதாரத்துடன் மறுக்க முடியாது. புலிகள் சரியாக நெறிப்படுத்தப்படாத பிள்ளைகள் என்பது என் கருத்து. பிரபாகரன் சரியாக ஆரம்பித்து சொதப்பிய தலைவன் என்பது வரலாறு. இது பற்றி விரிவாக எழுதுவேன், விரைவில்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: