Archive for January 2011

தைப் பெயர்ச்சி!

January 14, 2011

தைத்திங்கள் முதல் நாளில் இருந்து ஐயன் wordpress தளத்தை விட்டு blogger தளத்துக்குப் பெயர்கிறார்.

ஐந்தாம் இடத்தில் திரட்டிகளின் வசதியும், பதினோராம் இடத்தில் HTML editing சௌகர்யமும் சேர்வதால் இந்தப் பெயர்ச்சி நடக்கிறது.

செவ்வாய் நீசத்தில் இருந்ததால் இதுநாள் வரை சரியாகப் பதிவுலகில் சஞ்சரிக்க இயலாதிருந்த ஐயன் தற்போது சூரியன், புதன், சனி ஆல்கியோரின் துணையுடன் குருசுக்ர சுபாசீர்வாதத்தோடு புது இடத்துக்குப் பெயர்கிறார்.

தமிழ் கூறும் நல்லுலகோர் இனி இங்கே வருகை தந்து அளவளாவும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்க்லென நன்மைகள் பொங்கி அனைவரும் சிறப்புற்று வாழ மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்!

 

மொழிப் பிரச்சினை

January 11, 2011

சமீபத்தில் தெலுங்கு பையனிடம் பெயர் கேட்ட அமெரிக்கரின் கதையை மதுரை டமில் கையின் பதிவில் படித்தேன். திருமதி.சித்ராவின் கொஞ்சம் வெட்டிப்பேச்சு வலைப்பூவுக்கு சுட்டியிருந்தார். அதையும் படித்தேன். ஒரு எண்ணம் பளிச்சிட்டது. அடங்கொக்க மக்கா! அமெரிக்காகாரங்கிட்ட பீட்டருல மாட்டிக்கிட்டு முழிக்கிறது ஒரு பெரிய சமாச்சாரம் தான்.

ஆனால் தமிழ்நாட்டில், தலைநகர் சென்னையில் தமிழ்மொழி புரியாமல் முழித்த அனுபவம் எனக்கு உண்டு. கேளுங்கள் என் கதையை தமிழ் கூறும் நல்லுலகோரே!

நான் சென்னப்பட்டணத்துக்கு வந்த புதிது. முதல் மாதம் என் மாமா வீட்டில் ஓட்டியதால் பெரிதாக நகரம் புரிபடவில்லை.  பிறகு திருமயிலையில் மேன்ஷன் பார்த்து வந்து சேர்ந்த பிறகு வார விடுமுறையில் வெளியே கிளம்பினேன். அறைத்தோழர் ஒருவர் (ராமசாமி என்று பெயர்) உடன் வந்தார். என்னைப் போல தெற்கத்திக்காரர். அவர் சென்னையில் 10 ஆண்டுகளாக இருப்பவர். நகரத்தின் போக்குத் தெரிந்தவர். முக்கியமாக நகரத்தின் மொழி புரிந்தவர்!

“முதல் தடவையா போறோமே, மங்களகரமா கபாலி கோவில் போயிட்டு அப்புறம் சுத்தாலாமே” என்றார். சரி என்று போனோம். போகிற வழியில் பொன்னம்பல வாத்தியார் தெருவில் ந்டக்கும் போது என் அம்மா சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. (கூட இருக்கிற வரை சொல் பேச்சு கேட்டதில்லை என்பது உலகோடு ஒத்து வாழ்வதற்காகச் செய்தது!) “கோவிலுக்குப் போகும் போது பூ வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லியிருந்தார். நினைவு வந்ததும் அங்கே  ஊதுபத்தி விற்கும் ஒரு பெண்மணியிடம்

“அம்மா! பூக்கடை எங்கேங்க இருக்கு?’ என்று கேட்டேன்.

வேகமாக ஏதோ சொன்னார். புரியவில்லை.

மறுபடியும் “பூக்கடை எங்கேங்கம்மா இருக்கு?’ என்று கேட்டேன்.

“தோடா! செவுடா நீ? கோயிலாண்டகிதுன்னு எத்தினி வாட்டி சொல்லுவாங்கோ” என்றார்.

“ஐயோ இல்லீங்க. நீங்க சொன்னது புரியலீங்க. அதான் கேட்டேன்”, என்றேன். (கோவையில் 9 ஆண்டுகள் இருந்த பலன்களில் மரியாதையான தமிழும் ஒன்று.) இப்போதும் பூக்கடை எங்கே என்று அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.

நண்பரிடம் கேட்டேன்,”என்ன இந்தம்மா இப்படி கோபப்படுறாங்க?”

“நீங்க கேட்ட கேள்விக்கு அந்தம்மா பதில் சொல்லியாச்சு. இப்படி பேசறதுக்கு பதிலா நான் ஊருக்குப் புதுசுன்னு தமுக்கடிகலாம்” என்று வெறுப்பேற்றின்னார்.

“புரியலைன்னாலும் புரிஞ்ச மாதிரி பாவலா காட்டணுமோ மெட்ராசுல?” என்றேன்.

அவர் விளக்கினார்,”கோயிலாண்டகிதுன்னா…. கோவிலுக்குப் பக்கத்துல இருக்குன்னு அர்த்தம். அதாவது கோவில் அண்டையில் இருக்கிறது. இப்பப் புரிஞ்சுதா” என்று சாலமன் பாப்பையா ஆக முயன்றார்.

பூக்கடைக்குச் சென்றதும் “500 பூ எவ்வளவு?” என்றேன்.

கிண்டல் சிரிப்போடு பார்த்த அந்த அம்மாள் “வெளிஊராபா உனுக்கு?” என்றார். நான் தங்கியிருக்கும் மேன்ஷனுக்கு அருகில் நடக்கும் மெஸ்ஸில் சிற்றுண்டி வாங்க தினம் வருவார் அவர். பார்த்திருக்கிறாராம்.

“எந்தூருபா?”

“ராஜபாளையம்.”

“எங்ககிதது?”

——————-!!!!!????

‘மதுரைக்கு அந்நாண்ட இருக்கு! 2 மொழம் மல்லிப்பூ குடு” என்றார் ராமசாமி.

(ஓ! ஊர் எங்க இருக்குங்கிறது தான் கேள்வியா?)

கோவிலுக்குள்ளே மொழிப் பிரச்சினை ஏதுமில்லை. என் சிவனும் நானும் சங்கத் த்மிழ் முதல் ஈழத்தமிழ் வரை, சம்ஸ்க்ருதம் முதல் C++ வரை எந்த மொழியும் பேசுவோம். எவன் கேட்பது? (மெட்ராஸ் பாஷை எனக்குத் தெரியாது. கபாலியும் கற்பகமும் நிச்சயம் பேசுவார்கள். நூற்றாண்டுகளாய் இதே ஊரில் இருக்கிறார்களே!!)

வெளியே வந்ததும் “Paris போவோமா?” என்றார் நண்பர்.

“அதை பரீ என்று தான் உச்சரிக்க வேண்டும், தெரியுமா? அது சரி! வீசா ஒடனே குடுப்பானா?” என்று வெறுப்பேற்றினேன்.

பாரீஸ் கார்னர் போனோம். சுற்றினோம். ராமசாமிக்குத் தெரிந்த கடையில் 2 T-shirtகள் வாங்கினேன். மரியாதையாகப் பேசி சில இடங்களில் ஆட்டோக்காரர்களிடம் அதிகப் பணம் கொடுக்க இருந்தேன். நண்பர் தலையிட்டு “எத்தீனி வர்சமா ஆட்டோ ஓட்டினுகிறே! நான் 10 வர்சமா கொடோன் ஸ்ட்ரீட்ல தான் கீறேன்” என்ற வகையில் பேசிக் காப்பாற்றினார்.

மறுநாள் ஆபீசுக்கு புது T-shirt அணிந்து சென்றேன். உடன் பணிபுரியும் ஒருவர் “T-shirt புச்சா மாமா?” என்றார். யோசித்துப் புரிந்து கொண்டு,” ஆமாம். புதுசு தான்” என்றேன்.

“நாசமாக்கீது மாமு” என்று சொல்லிவிட்டுப் போனார்.

காசு குடுத்து நம்ம வாங்கிருக்கோம். புடிக்கலைன்னா பேசாம போவானா………. பரதேசிப்பய இந்த வார்த்தயச் சொல்லிட்டுப் போறான்! என்று நினைத்துக் கொண்டு, மோரைக் கடைந்தால் வரும் பண்டத்தின் பெயரைச் சொல்லி அவரைத் திட்டிவிட்டு வேலையைப் பார்த்தேன்.

சற்று நேரம் கழித்து வேறொரு நபர் வந்தார்.

“T-shirt புச்சா தல?” என்றார்.

“ஆமாங்க. புதுசுதான்.” என்றேன்.

“மெய்யாலுமே நாசமாக்கிது தல!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

டேய்! வர்றவன் போறவன்லாம் இழுத்து வெச்சு லந்து பண்றீங்களாடா என்று மனதில் கறுவிக் கொண்டே வேலையை முடித்தேன்.

நடுவில் ஒருவர் தன் புதிய செல்பேசியைக் காட்டினார். 24000 ரூபாய் சோனி எரிக்சன் செட்.

“புச்சா வாங்கிகுறேன். எப்டிகிது? நாஸ்ஸமாகிதா?” என்றார்.

அட நாசமாப் போறவய்ங்க்யளா! நாசம்னா ஒங்க பாஷைல என்னடா அர்த்தம்!!!!!

மேன்ஷன் திரும்பியதும் நாசத்தைப் பற்றி ராமசாமியைக் கேட்டுத் தெளியவேண்டும், தப்பான அர்த்தம் தான்னா நாளைக்கு நாம யாருன்னு காட்டிரணும் என்ற முடிவோடு வேலை முடித்து வந்தேன்.

ராமசாமி வந்தார்.

“நாசம்னா மெட்ராஸ் பாஷைல என்ன அர்த்தம்?”

“புது T-shirt நாசமா இருக்குன்னு எவனாவது சொன்னானா?”

“ஒருத்தன் இல்லை 2  நாதாரிங்க!”

“அப்பவே சொல்லணும்னு இருந்தேன். மறந்துட்டேன். மெட்ராஸ் பாஷைல நாசம்னா நல்லதுன்னு அர்த்தம். நாசமா இருக்குன்னு சொன்னா சூப்பரா இருக்குன்னு அர்த்தம்!”

அடப் பாவிகளா! தமிழ நாசம் பண்ணிட்டீங்களேடா என்று மனதில் திட்டிக் கொண்டே ராமசாமியிடம் கேட்டேன்:

“ஓஹோ! அப்போ கல்யாண வீட்ல எப்புடி வாழ்த்தணும், மெட்ராஸ்ல?”

“இந்த நக்கலுக்கே மெட்ராசுல ஸ்கெட்சு போட்ருவான்”, என்றார் அவர்.

பின் வந்த நாட்களில் சென்னையின் பிரபல “ங்கோ” வார்த்தையை 4 வயது குழந்தைக்கு ஒருவர் சொல்லிக் கொடுக்கக் கண்டு அதிர்ந்தேன். குழந்தை அந்த வார்த்தையைச் உச்சரிப்புச் சுத்தமாய்ச் சொன்னதும் அதை அப்படிக் கொஞ்சினார்!!!

இது போன்று தமிழோடு ஏகப்பட்ட அனுபவங்கள் சென்னையில். 450 கோடி இல்லை 176000 கோடியையும் செலவு செய்து செம்மொழி மாநாடு போட்டாலும் சென்னையில் தமிழ் செழிக்க வாய்ப்பு மிகக் குறைவு தான்.

சுஜாதாவின் 10 commandments

January 5, 2011

சற்றே பழசு என்றாலும் relevant. படித்தேன். பிடித்தது. போட்டுவிட்டேன்.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும்,அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

(நான் எட்டாவது கட்டலையை உடனடியாகச் சிரமேற்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.)

நான் fridge வாங்கிய கதை

January 5, 2011

என் வீட்டில் குளிர்பதனப் பெட்டி (refrigerator) பழுதடைந்து விட்டது. மராமத்துப் பார்ப்பவர் வந்து பார்த்துவிட்டு “ஒரு ரெண்டுலேர்ந்து மூவாயிரம் ஆகும் சரிபண்ண” என்றார். இதென்னடா வம்பு வருஷக் கடைசியில் என்று எண்ணிக்கொண்டு பழம்பொருள் பாதுகாப்பு வித்தகரான என் தந்தைக்குச் சொல்லிவிட்டு புதுசு வாங்கலாம் என்று அவருக்குத் தொலை பேசினேன். உரையாடல் இதோ:

என்னப்பா சொல்றே, fridge ஓடலியா?

குளிரலை. அப்பப்போ குளிரும், அப்பப்போ குளிராது.

என்ன செஞ்சே அதை?

தேவைப்படும் போது  திறந்து மூடினேன், பொருளை உள்ளே வெச்சு எடுத்தேன்.

ஏலேய்! திடீர்னு ஓடாம போச்சுன்னா என்ன ஆச்சுன்னு கேட்டேன். திறந்தானாம், மூடினானாம். இந்தா உங்கம்மாட்டயே பேசு!

“என்னப்பா, fridge ஓடலியா?”

“ஓடும். ஆனா அப்பப்போ குளிராது. ரிப்பேர் பாக்க 2000 ஆகுமாம். பேசாம போட்டுட்டு புதுசு வாங்கிடலாம்.”

“ஹரிஹரய்யர் என்ன சொன்னார்?”

“உங்கிட்ட பேசச் சொன்னார்”

“என்னமோ என் பேச்சக் கேட்டுத்தான் எல்லாம் நடக்கற மாதிரி!”

“I dunno, Mom!”

“அவர்கிட்டயே சொல்லு”

ஆங்.. வாங்கி ஒரு 4 வருஷம் இருக்குமாப்பா?

ம்..

இதப் போட்டா எம்புட்டுக்கு எடுப்பான்?

500 ரூபாய்!

டேய்! 8500க்கு வாங்கினது. சரி… Electronic item, கழுத அம்புட்டுத்தான்.. போட்டுட்டு வாங்கிடலாம்ங்கறியா?

போடாமலும் வாங்கலம்பா! ஆனா பழசு வீட்ல எடத்த அடைக்கும்!

சரீ! நம்ம ராஜா எதோ Electronic கம்பெனில தானே இருக்கான்?

ஆமாம்.

அவனக்கேளு! பழசுக்கு புதுசு மாத்தி மீதி பணம் கொஞ்சம் கட்டுப்படியாகற மாதிரி ஏதாவது பண்ண முடியுமான்னு பார்! 25000க்கு வாங்கி 2 நாள்ல திருப்பித் தந்தாலும் நாலணாக்கும் எட்டணாக்கும் தான் எடுக்கறான் இந்தக் காலத்துல. போறது போ. புதுசு வாங்கிடு.

ஹ்ம்ம்ம்….. சரிப்பா… நான் ஏற்கனவே பேசிட்டேன். 9000 கிட்ட ஆகும்.

நாலு எடத்துல கேளு மொதல்ல. சும்மா ஒருத்தனக் கேட்டுட்டு ஒடனே வாங்கிடப்படாது.

Advise noted with due respect, Sir.

கடவுளே! நீர்காத்த ஐயனாரே!! சரணம் ஐயப்பா!!! போனை வெச்சுடறேன். பாத்துச் செய்!

நானா அவரா?

பாத்துச் செய்ன்னு ஒன்னத் தாம்பா சொன்னேன்!

Okay, Dad!

இந்த ராஜா என்கிற ராமசாமிக்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த show roomல் கணக்குப் பிள்ளையாக இருக்கிறார். எங்க கடையில வாங்கலாம். நாங்க எப்படி service கொடுப்போம் தெரியுமா என்றார். Finance வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்றேன். இருக்கிற ஆவணங்களை எல்லாம் கொண்டா பார்த்துக் கொள்வோம் என்றார்.

Nope. Gimme proper details என்றேன்.

யாரிடமோ கேட்டுச் சொன்னார். (அப்புறம் இது சொட்டை அது நொட்டைன்னு சொல்லமாட்டியே என்று உறுதிப்படுத்திக் கொண்டு தகவல் தந்தார்.) மீண்டும் கடைப்புராணம் பாடினார். என்னிடம் மீட்டருக்குச் சூடு வைக்கமாட்டார் என்பதால் போனேன். மாலை 6.30 மணி. குளிர்பதனப் பெட்டியைப் பார்த்துவிட்டு விலை கேட்டேன். விலை சொன்னதும் கிண்டி ரேசில் ஓடுமா இந்தப் பெட்டி என்ற கேள்வியை அடக்கிவிட்டு ராமசாமியிடம் சொன்னேன்.

விலை குறித்திருந்த சிட்டையை வாங்கிக் கொண்டு முதலாளியம்மாவிடம் போனார். ரகசியமாக ஏதோ பேசினார். கணிசமாக விலை குறைத்தார் அந்த முதலாளியம்மா. இலவச இணைப்புகள் வேறு இருக்கிறது என்றார். (அரசாங்கமா நடத்துகிறார் இந்தப் பெண்மணி என்ற கேள்வியை மிகுந்த சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்! கிடையாது போ என்று சொல்லிவிட்டால்?)

இந்த ராமசாமியும் நானும் அவரவர் பணியிடத்தில்  நடப்பவை பற்றி ஓரளவுக்குப் பரிமாறிக் கொள்வோம். இந்தக் கடையில் சேர்ந்ததில் இருந்தே ஒரே முதலாளியம்மா புராணம். நடக்கும் சில தவறுகள் அதற்கு விழும் திட்டுகள் பற்றியும் சொல்வார். முதலாளியம்மா மிகுந்த கண்டிப்பானவர், நல்ல புத்திசாலி என்று புகழ்வார். (அம்பாள் உபாசகர் என்பதால் அவருக்கு அந்தப் புகழ்ச்சி நன்றாகவே வந்தது.) ஆகவே பார்த்திரா விட்டாலும் அந்த மனிதர்கள் பற்றிய பரிச்சயம் மனதுக்கு இருந்தது.

Finance Option வேண்டும் என்றேன். ஒரு இளைஞனைக் காட்டினார்கள். அவர் பேசுவார் என்றார்கள். பேசினார். பேசினார். மேலும் பேசினார். சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டேன். அது அப்படித்தான் சார். Finance எடுத்தால் அப்படித்தான் வரும் என்றார்.

கோனார் தமிழ் உரை இதோ:

இது என்ன 194 ரூபாய் கணக்கு?

சார்!  இது எல்லாத்துக்குமே சரியான கணக்கு இருக்கு சார்! 2.25% வட்டி சார்.

அப்போ 0%ங்கிறது என்ன?

அது உண்டு சார், ஆனால் 2.25% வரும் சார்!

Boss! 0% வட்டின்னா 2.25% என்ன? 2.25 % வட்டின்னா 0% என்ன?

சார் அது கணக்கு சார். Finance கொடுக்கும் போது 194 ரூபாய் வாங்குவோம் சார். எல்லார் கிட்டயும் வாங்குவோம்.

0%னு சொல்றீங்க. அப்புறம் 2.25% வட்டி ஏன் போடறீங்க?

சார். 0% தான் சார். நான் உங்களை ஏமாத்தலை சார். இது எல்லாமே சரியான கணக்கு தான் சார்! 2.25% சார்ஜு சார்!

(வாழைப்பழ காமெடியில் கவுண்டமணி ஏன் கோபமானார் என்பதை உணர்ந்த தருணம் இது.)

அது வந்து DB சார்!

DBன்னா?

சார்ஜ் சார்! இது எல்லாத்துக்கும் கணக்கு இருக்கு சார்!

DBக்கு அர்த்தம் சொல்லுங்களேன்!

டாக்குமெண்ட்டுக்காக வாங்குறது சார்!

சற்றே நிதித்துறை வழக்கங்கள் அறிந்ததனால் புரிந்தது. DB அல்ல அது DP (Document Processing) சார்ஜ் என்பது என் அனுமானம்.  என் அலுவலகத்தில் அனுமானங்களை வைத்து யாராவது முடிவுகள் சொன்னால் எனக்கு முதலில் வருவது கோபம். “Assumption is the mother of all goof ups. Would you mind getting the facts? Only then we can get the real picture,  then decide accordingly.” என்பதே என் எதிர்வினை. இங்கே நான் அனுமானத்தின் அடிப்படையில் ஒரு முடிவை ஏற்றேன். (விதி யாரை விட்டது!)

Bக்கும் Pக்கும் வேறுபாட்டை விளக்க நான் என்ன வீட்டாவில் வாத்தியார் வேலையா பார்க்கிறேன்! ஆனால் BP சற்றே எகிறியது என்னவோ உண்மை.  Approval  வர வேண்டும், 10 நிமிடங்கள் ஆகும் என்றனர். சற்றே ரிலாக்ஸ் ஆக கிரிக்கெட் பார்த்தேன். கால்லிஸ் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். 20 நிமிடங்கள் கழித்து மும்பையில் இருந்து ஒரு பெண் தொலை பேசினார்.

நிதி கேட்டிருந்தீர்களா?

ஆமாம்.

என்ன வாங்குகிறீர்கள்?

fridge.

எங்கே வேலை செய்கிறீர்கள்?

சொன்னேன்.

சம்பளம் எவ்வளவு?  (ஆண் மகனிடம் கேட்கக்கூடாத கேள்வி)

எந்த வங்கியில் கணக்கு இருக்கிறது? (ரத்த வங்கி தவிர 3)

போன் பில் மாதம் எவ்வளவு வரும்? (அதற்கும் நீங்கள் பணம் தருவீர்களோ?)

மணமானவரா? (இல்லை. Your voice sounds nice, Babe!)

(விட்டால் காலையில் பல் துலக்குவீர்களா? என்ன பற்பசை என்றெல்லாம் கேட்பார்களோ?)

ஒரு வழியாக Approval வந்தது!

(இப்போது நம்ம finance guy மறுபடியும்.)

நீங்க பேச்சுலரா சார்?

ஆமாம்.

அப்ப இந்த address proof செல்லாது சார்! Latest Bank statement வேணும்.

Do what now? எல்லா மாசமும் இதே Bank தானே statement தரும்?

இல்ல சார். மேரீட் ஆளுங்கன்னா பிரச்சினை இல்ல சார். பேச்சிலர்னா லேட்டஸ்ட் அட்ரஸ் ப்ரூஃப் வேணும் சார்.

(டைவர்ஸ் ஆனவனுக்கு வேற தனியா சட்டதிட்டம் வெச்சிருக்கீங்களோ?)

மெயில்ல இருக்க்கா பார்க்கணும்.

இங்கயே மெயில் செக் பண்ணுங்க சார்!

உள்ளே போனேன். ராமசாமி சொந்தக்காரன் என்பதால் இந்தச் சலுகையும் கிடைத்ததா தெரியவில்லை. (அவரிடம் கேட்டால் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார் என்பதால் கேட்கவில்லை.) மின்னஞ்சல் பார்க்கையில் அங்கு நடக்கும் செயல்பாடுகளை சற்றே அவதானித்தேன். (Occupational Hazard). தவறுகள், அவற்றின் காரணிகள் ஒவ்வொன்றாய் மனதில் பதிந்தன. இதை இப்படிச் செய்யலாமே அதை அப்படிச் செய்யலாமே என்று Lean, Process Improvement பணிகள் செய்யும் பழக்க தோஷத்தில் மனம் suggestionகளை அள்ளித் தந்தது.

அடங்குடா! இது நீ வேலை செய்யும் இடமில்லை, என்று மனதை அடக்கிக் கொண்டு, மின்னஞ்சலில் Bank statement இல்லை என்று ஏமாந்து, நாளை தரட்டுமா என்று கேட்டேன். சரி என்றார்கள்.

வேறு என்னென்ன வேண்டும்?

PAN card ஜெராக்ஸ்.

வேற?

வேறு எதுவும் தேவையில்லை சார்!

Sure?

இது மட்டும் தாங்க போதும்.

Ogay! thanks much, buddy!

முன் பணம் கட்டச் சொன்னார்கள். பில் போட்டு வந்தது. Debit card கொடுத்தேன். அதை அந்த முதலாளியம்மா தேய்க்கப் போன போது ஒருவர் ஓடிவந்தார். மேடம் பில்லுல ஏதோ மாறிப் போச்சாம், கொஞ்சம் இருங்க, வேற பில்லு வருது என்றார். மறுபடியும் பிரச்சினையா என்று மனதில் வடிவேலு கூவ  கெக்கெக்கே என்று சிரித்து விட்டேன். ராமசாமியின் முதலாளியம்மா கோபமானார். சாரி சார் என்று என்னிடம் வருந்திவிட்டு வேகமாய் உள்ளே போனவர் அவர்களைச் சத்தமாய்த் திட்டினார்.

பிறகு வந்தார். பில் வந்தது. பணம் தேய்த்துவிட்டு அன்பளிப்பு கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டேன். நன்றி நவின்றுவிட்டு வெளியே வந்தேன். மணி 9.15 pm. ராமசாமி கூடவே கிளம்பினார். நான் சிரித்தது சொல்லி அது கோபத் தூண்டலானதையும் சொன்னேன். “ரொம்ப சந்தோஷம்! நம்மாளு பில்லுல தகராறு. சும்மா இருக்க மாட்டானேன்னு பாத்தேன். நக்கலா ஏதாவது சொல்லி வைக்கப் போயி, அதுல எங்க மேடம் டென்ஷன் ஆயிட்டாங்களோன்னு கொஞ்சம் பயந்தேன்” என்றார். சாப்பிட்டுவிட்டு வீடு  வந்து சேர்ந்தேன்.

உறங்கும் முன் அன்றைய நிகழ்வுகளை அசை போடுவது வழக்கம். அப்போது அந்தக் கடையில் பில்லில் தகராறு என்றதும் சிரித்தது தேவையற்ற செயல் என்று தோன்றியது. அந்தப் பெண்மணியை ஏளனப்படுத்துவது போன்ற சிரிப்பு. அதனால் தான் கோபமானார். சரி, ராமசாமியிடம் பேசிவிட்டு சரியான சந்தர்ப்பம் பார்த்து வருத்தம் தெரிவித்து விடலாம் என்று முடிவு செய்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலையில் latest bank statement ப்ரிண்ட் எடுத்தேன். ராமசாமியிடம் கொடுத்துவிடலாம் என்று அவர் வீட்டுக்குப் போனால் மனிதர் முகத்திலிருந்து கைக்குட்டையை எடுக்கவேயில்லை. (பள்ளிக்காலம் என்றால் மூக்கொழுகி ராமசாமி என்று பட்டப் பெயர் வைத்துச் சிரிக்கலாம். இப்போது சிறுபிள்ளைத் தனமாக இருக்குமே!) நானே கொண்டு போய்க் கடையில் கொடுத்தேன்.  மாலைக்குள் fridge  வந்து சேரும் என்றனர். வேறு ஏதாவது தேவையா என்றேன். இல்லை என்றார் நம்ம finance guy.

ATM கார்டு காப்பி வேணுமா? பொதுவா கேப்பீங்களே!

இல்ல சார். அது வேண்டாம்  சார்.

Okay! fridge எப்ப வரும்.

இன்னிக்கி ஈவ்னிங்குள்ள வந்துரும் சார்!

Thank you!

மயிலையில் உறவினர் ஒரு மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பார்ப்பதற்கு போனேன். அடையாறு தாண்டும் போது செல்பேசி பாடியது. எடுத்துப் பேசினேன்.

சார், LGலேர்ந்து பேசறோம். இப்ப வந்து document கொடுத்தீங்களே!

ஆமாம்.

ஏரியா பக்கத்துல தான் இருக்கீங்களா சார், இல்ல தூரமா போயிட்டீங்களா?

ஏன்? (என்ன பஞ்சாயத்து இப்ப?)

ATM கார்டு ஜெராக்ஸ் வேணும் சார்.

கேட்டப்ப வேண்டாம்னு சொன்னீங்களே!

உங்ககிட்ட பேசுனவரு ஃப்ரஷர் சார். அவருக்கு சரியா தெரியாது! சாரி சார்.

சரி! டெலிவரி தரும் போது அதை வாங்கிக்கங்களேன்?

முடியாது சார்! அது இருந்தா தான் லெட்டர் தருவாங்க. லெட்டர் வந்தா தான் fridge தரமுடியும்.

(The deal is off. Pay my money back என்று கோபத்தில் வந்ததை அடக்கினேன்.)

மாலை தருவதாகச் சொன்னேன். முடியவில்லை. மறுநாள் கொடுத்தேன். அன்று தான் (மூன்றாவது நாள்) புது fridge வந்தது. பழைய பெட்டியை எடுத்துப் போக வேண்டுமே என்ற போது அவர்கள் பில்லில் அது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றனர்.

(பில்லிங்கில் அது வேறு தகராறா?)

பின்னர் கடையைக் கூப்பிட்டுப் பேசினேன். Exchange இருக்கா சார்! (ஓஹோ), சொன்னீங்களா சார்! (சூப்பர்), சரி அவங்க எடுத்துப்பாங்க சார் என்றனர்.

(ஆக, நான் சிரித்தது சரிதான் போலிருக்கே!! வருத்தமெல்லாம் தெரிவிக்க வேண்டாம், போ!)

ஒரு வழியாக பழையது கழிந்து புதியது புகுந்தது. ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவனே! போற்றி போற்றி!!


%d bloggers like this: