Archive for the ‘எம் எண்ணம்’ category

தைப் பெயர்ச்சி!

January 14, 2011

தைத்திங்கள் முதல் நாளில் இருந்து ஐயன் wordpress தளத்தை விட்டு blogger தளத்துக்குப் பெயர்கிறார்.

ஐந்தாம் இடத்தில் திரட்டிகளின் வசதியும், பதினோராம் இடத்தில் HTML editing சௌகர்யமும் சேர்வதால் இந்தப் பெயர்ச்சி நடக்கிறது.

செவ்வாய் நீசத்தில் இருந்ததால் இதுநாள் வரை சரியாகப் பதிவுலகில் சஞ்சரிக்க இயலாதிருந்த ஐயன் தற்போது சூரியன், புதன், சனி ஆல்கியோரின் துணையுடன் குருசுக்ர சுபாசீர்வாதத்தோடு புது இடத்துக்குப் பெயர்கிறார்.

தமிழ் கூறும் நல்லுலகோர் இனி இங்கே வருகை தந்து அளவளாவும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்க்லென நன்மைகள் பொங்கி அனைவரும் சிறப்புற்று வாழ மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்!

 

ஆம்வே – வெள்ளையும் சொள்ளையுமா ஒரு கொள்ளை

December 27, 2010

இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆம்வே ஜாக்கிரதை!!
http://thoppithoppi.blogspot.com/2010/12/amway.html

சூர சம்ஹாரம்!

November 12, 2010

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. – திருமுருகாற்றுப்படை.

நேற்று சூர சம்ஹாரம். முருகன் சூரபதுமனை வென்ற பொன்னாள். அசுரரை வென்று தேவரைக் காத்த நன்னாள். எம்பெருமான் வேலவனின் அவதார நோக்கம் நிறைவேறிய திருநாள்.

சரி! இதனால் அறியப்படும் தத்துவம் யாதோ? வாகாய் வசமிருக்கும் வலையிலே தேடினேன். தகவல்கள் கந்தனருள் போல அள்ள அள்ளக் குறையாதிருந்தன. இட்டு வைத்த அன்பர் பெருமக்கட்க்கு எம்மாலியன்ற பதிலுதவி எமது மனமார்ந்த நன்றியும், கந்தனருளுக்கான பிரார்த்தனைகளும். உணர்ந்து தெளிந்து எழுதுவது ஆன்றோர் செயல். நான் படித்ததில் புரிந்ததைப் பகிர்வேன்.

சூர் என்றால் துன்பம். துன்பத்தின் உருவம் சூரன். அவன் ஆணவம், பேய்க்காமம் முதலிய துன்பியல் குணங்களைத் தன்னகத்தே கொண்டு அது குறித்துப் பெருமையும் கொண்டவன். தீயன குறித்துப் பெருமை கொள்வது மூடத்தனம். மொத்ததில் அறியாமையின் உருவமாய் இருந்தவன். ஆனால் அறிந்தது போல் காட்டிக்கொண்டு அறிந்து தெளிந்த அறவோரைத் துன்புறுத்தி துக்கம் தந்த துஷ்டன்.கூத்து மிகவாடிய குறைகுடம் அவன். கூற்றுக்கு இறையாக்கத்தக்க குணங்களின் குவியல் அவன். நிற்க.

துன்பத்தைத் தீர்க்க வல்லது அறிவு. அறிவு வேல் வடிவில் கூர்மையாகவும், அகன்றும், ஆழ்ந்தும் இருந்தால் அது ஞானம் என்றறியப்படுகிறது. உள்ளொளி தரும் அறிவு ஞானம். ஞானம் அறியாமை இருளினின்றும் ஞானியை மட்டுமல்லாது அண்டினோரையும் அறிஞராக்கும் வல்லமை கொண்டது. ஞானியரின் அண்மை மூடனையும் மதியூகியாக்கும். அப்படியிருக்க ஞானத்திருவுருவாம் கந்தனின் அருள் எத்தகைய ஒளி தரும்? அவன் ஞானம் படைப்பின் மூத்தோன் பிரம்மனையே முற்றுகையிட்டுச் சிறை செய்த மேன்மை கொண்டது.அதன் பெருமை பேசற்கரியது.

“ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி “என்கிறார் நக்கீரனார். அதாவது எல்லை என்று ஏதுமற்று நீக்கமற எங்கும் நிறைந்து ஒளிர்கின்ற  கதிரவனை விஞ்சிய ஒளி. காலத்தின் ஓட்டமோ ஞாலத்தின் தூரமோ கட்டுப்படுத்த இயலாத நெடுந்தொலைவுக்கு வீசிவரும் ஞானப் பேரொளி. அத்தகு பெருமை கொண்ட முருகனின் திருக்கைவேல் கடுந்துன்பங்களை எல்லாம் எளிதில் தீர்க்கும்.

ஆக அந்த ஞானத்திருவொளி மூட இருளை முற்றிலும் அழித்து அறிவுச்சுடர் பிரகாசிக்க வழிசெய்த அருந்தகமையைக் கொண்டாடுவது சூர சம்ஹார விழா.

அகம் புறம் முதற்கொண்டு அனைத்தும் போற்றும் தமிழ்த் தெய்வம் கந்தன் ஞானியர் பெருமக்களின் வாட்டம் போக்கிய நிகழ்வுகளில் ஒன்று மனதுக்குத் தெம்புதரும்.

இறையனாரின் அம்சமாய்ப் போற்றப்படும் ஆதிசங்கர பகவத் பாதர் ஷண்மதங்களை நிறுவிச் சநாதன தர்மம் ஓங்கச்செய்தது கண்டு அவர் மீது கோபமும்,  அவருக்கு ஏற்பட்ட நற்புகழின் பரவல் கண்டு பொறாமையும் கொண்டான் அவருடன் வாதுபுரிந்து தோற்ற அபிநவகுப்தன் எனும் சமணன். வாதினால் இயலாததை  சூதினால் செய்யத் துணிந்து அவருக்குக் காசம், குட்டம், காக்கைவலி, கடுங்காய்ச்சல் முதலியவற்றோடு அவர்தம் அறிவு நலியப் பிசாசங்களையும் ஏவித் தாக்கினான். சங்கரர் துன்புற்றிருக்கையில் “சீரலைவாய் சென்று சிவக்குமரனை வழிபட்டால் சீக்கிரம் தீரும் சீக்கு” என்று அசரீரி ஒலித்தது.

அங்கே விரைந்த சங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றிக் கந்தனை வேண்டினார். ஆதிமதம் தழைக்க அயராது உழைக்கும் தமக்கு வந்த அல்லல்களை நீக்கி அருள்புரியப் பிரார்த்தித்தார். 33 சுலோகங்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கத்தைப் பாடிவர 25ஆவது சுலோகத்தினைப் பாடியதும் பிடித்த பிணிகளும் பீடித்த பிசாசப் பீடைகளும் நீங்கி நலம் பெற்றார்.

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே

இந்தச் சுலோகத்தைப்ப் படிக்கும் யாருக்கும் இது போன்ற பிணிகளோ பீடைளோ அண்டாது என்பது பகவத் பாதர் வாக்கு. அறியாமை மிகுந்த மனத்தின் தீச்செயல்களால் விளையும் அல்லல்களை அகற்றுவான் கந்தன் என்பதற்கு இந்நிகழ்வு சாட்சி.

இதே போலப் பிணி பீடைகள் அண்டாது சிறக்க அழகு தமிழில் தேவராயக் கவி பாடிவைத்த கந்த சஷ்டி கவசம் தனிப்பெயர் பெற்று பெரும் பேறு தருவது.

பேசாத குருபரரைப் பேச வைத்துப் பைந்தமிழ்ப் புலவராக்கிப், பின் அவரைப் பன்மொழி வித்தகராக்கி அழகு பார்த்தவன் சீரலைவாய்க் கந்தபிரான். அறியாமையின் ஒரு பிரிவாம் கோபம் கொண்டு அவர் தந்தை ஒரு சான்றோரை அவமதிக்க, அதுவொற்றி மகர்க்கு வந்த பேசாப்பிணியை நீக்கியதோடு நில்லாமல் காசி நகர்ப்புலவரால் இயலாத பெருஞ்செயல்கள் புரிய வைத்தான். குருவுக்கெல்லாம் குருவான சிவனுக்கே உரைத்த நல்லாசான் உயர்வன்றி வேறென்ன தருவான்?

எனவே, தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் live show  பார்த்தோமா, நடுநடுவே 20 விநாடிகளில் பாத்திரப் பிசுக்கு போவதை தேவயானி சொல்லக் கேட்டோமா, பாப்கார்ன் அடைந்த வாயாலே “முழுகா” என்று ஒற்றைக் கையால் கன்னத்தில் போட்டுக் கொண்டோமா என்றில்லாது, உள்ளம் ஒன்றிக் கந்தனை வேண்டி ஒருசில நிமிடங்கள் பிரார்த்திப்போம்.அறியாமை நீங்கி அகம் தெளிந்தோர் ஆவோம்.

சான்றோன்!

November 10, 2010

சான்றோன் என்பவன் யார்? எந்த விஷயத்திலும் சிந்தித்து, நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சிறப்பின் பாற்பட்டுச் செயல்படுபவனே சான்றோன்.  சான்றோன் பெருமை பெரும் பேச்சு பேசப்பட்டது. அவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும் உறுதிகூறுவர் பெரியோர்.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

பெற்ற பொழுதினைக் காட்டிலும் தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்வதைக் கேட்கின்ற தருணத்தில் தாய் பெரிதும் மகிழ்வார்.

சான்றோன் எப்படி உருவாகிறான்? யார் அவனை உருவாக்குவது?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

ஆக, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடமை. அப்படியானால் ஈன்று புறந்தருதலோடு தாயின் பணி முடிவுற்றதா?  இல்லை. ஈன்று புறந்தருதல் என்பதை நம் மக்கள் கருவினின்றும் வெளித் தருவது என்று பொருள் கொள்கின்றனர். அது தவறு. 5 வயது வரை குழந்தை தாயிடம் அதிக ஒட்டுதலோடு இருக்கும். அந்த 5 வயதுக்குள் அதன் மனதில் என்ன விதைக்கப்படுகிறதோ அதுவே அதன் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் ஆதாரம்.

அடிப்படையை உறுதியாகப் போட்டு  அதன் மீது கட்டப்பட்டு பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் கோவில் போல,  அடிப்படை அறிவை அறத்தோடு ஊட்டி சான்றாண்மைக்கு வித்திடுவது தாய்க்குக் கடன். பொதுவாக அந்தக் காலத்தில் 5 வயதுக்கு மேல் தான் பள்ளிக்கு அனுப்புவர் குழந்தைகளை. (இப்போது உள்ளது போல் “சமாளிக்கவே முடியலை,  PreKG சேர்த்துவிட்டேன்” என்ற சால்ஜாப்புகள் அப்போது கிடையாது)

5 வயது வரை வீட்டில் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி, மற்றேனைய உறவுகளுடன் வளரும் குழந்தை, நீதிக் கதைகள், இதிகாச புராணங்கள், எண்-எழுத்து, ஆகியன கற்று வளரும். வீட்டுக்கு வெளியே கல்விச்சாலைக்குப் படிக்கச் செல்கையில் மேலே படிக்க ஏதுவாக அடிப்படை தப்பாது கற்றுத் தருவதும், பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், அன்பு பரிமாற்றங்கள், உறவுகள், நட்பு இதெல்லாம் கற்றுத் தருவதும் தாயின் கடமை.

5 வயதில் கல்விச் சாலையில் சேரும் குழந்தைக்கு பால பாடங்களாக சுலோகங்கள், சமய இலக்கியப் பதிகங்கள், ஆகியன கற்றுத் தரப்படும். இந்த அடிப்படைகள் 12 வயதில் முடிந்தபின் தர்க்கம்,  நீதி, நிர்வாகம் முதலியவற்றின் அடிப்படை கற்பிக்கப் படும். இங்கேதான் தந்தைக்கு வேலை வருகிறது. தெளிவாகச் சிந்திக்கக் கற்றுத்தருவது இந்த வயதில் தான் தேவை. பல விஷயங்களை அறிந்து தவறுகளின் பால் ஈர்க்கப்படுவதும் அந்த வயதில் தான்.

எனக்கு 5 வயதில் இராமயணமும் மகாபாரதமும் மனப்பாடம். பாடல்கள் தெரியாது, கீதை தெரியாது. ஆனால், கதையும் அதனால் அறியப்படும் நீதியும் மனப்பாடமானது. 10 வயதில் சக்ரவர்த்தித் திருமகனும் வியாசர் விருந்தும் படித்தேன்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் 10ஆம் வகுப்பு படிக்கிறபோது, நம் நாட்டுத் தங்கத்தை அடகு வைத்து நாம் கிட்டத்தட்ட போண்டி என்று பிரதமர் சந்திரசேகர் அறிவித்தார். பிறகு மன்மோகன் சிங் நிதியமைச்சராகி நம் ரூபாயின் மதிப்பை பாதாளத்துக்குக் குறைத்தார். அப்போது மிக புத்திசாலியாக யோசித்து என் தந்தையிடம் கேட்டேன். “இப்போ அமெரிக்காகிட்ட கடன் வாங்கினா நமக்கு நிறையப் பணம் கிடைக்கும். அதை வெச்சு நிறைய செலவு பண்ணலாம். இல்லையாப்பா”?

“மடத்தனமா யோசிக்காதே” என்றார். “ஏன்?” என்றேன். “இப்போ கடன் வாங்கினா நிறையப் பணம் கிடைக்கும் சரி, திருப்பிக் கட்டும் போதும் அதிகமாக் கட்டணுமே அப்போ என்ன செய்வே? வட்டி வேற சேருமே?” என்று கேட்டார். பதில் தெரியவில்லை. “கடன் வாங்கினா ஒண்ணுக்கு நாலு ரூபாயா கிடைக்கும் தெரியுமா!” என்று நண்பர்களிடம் சொல்ல, “அட ஆமாண்டா!” என்று அவர்கள் ஆச்சரியப்பட்ட போது தலைக்குப் பின்னே தோன்றிய ஒளிவட்டம் இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

“அப்படின்னா ரூபாய் மதிப்பு குறைச்சது தப்பா?” என்று கேட்டேன். “இல்லை, இந்த நேரத்தில் ஏற்றுமதி அதிகமானா நமக்கான வருமானமே அதிகமா வரும். அதைச் செலவழிச்சா ஒரு பய கேக்க முடியாது”, என்றார். ஏற்றுமதி, இறக்குமதி, கடன் ஆகியவை குறித்து சுருக்கமாகச் சொன்னார்.

வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்தால் பெருந்தொல்லை என்று கடனாளிகள் பலரை உதாரணம் காட்டிச் சொன்னார். கடன் வாங்கிச் செலவழித்தல் தவறு என்ற அடிப்படை புரிந்தது. நாம் சம்பாதிப்பதையே நாம் செலவு செய்ய வேண்டும், பிறரிடம் வாங்கிச் செலவழிக்கக் கூடாது என்பதும் புரிந்தது. +1ல் வணிகப் பாடமும் பொருளாதாரமும் படித்த போது “இது அதுல்ல!” என்று தோன்றியது.

ஆக, மனிதனைச் சான்றோனாக்கும் அடிப்படை வித்தை சரியான முறையில் சிந்திக்கக் கற்றுத் தருவதுதான் என்பது இப்போது யோசித்ததில் புரிகிறது.

எம் வலைப் பதிவம்

November 9, 2010

உலகோர்க்கு வணக்கம். வாழிய நலம். இஃதெமது வலைப்பதிவம். எமது அரசியல் கருத்துக்கள், சமூகப் பார்வைகள், எமது பொருளாதாரச் சிந்தனைகள், (வணிக, பொது) நிர்வாகம் குறித்த எமது  எண்ணங்கள், யாம் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் ஆகியன இங்கே காணக் கிடைக்கும். கைதட்டினாலோ, கல்லெறிந்தாலோ பரிசீலித்து ஏற்பது/விடுப்பது எமது கொள்கை.  வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழரும், பாரத மணித்திருநாடும். தாய் மண்ணே வணக்கம்!


%d bloggers like this: