கவிஞர் வாஜ்பாய்

Posted December 26, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: கவிதை

Tags: , , , , , , , , , , ,

வெற்றி என்ன தோல்வி என்ன

சிறிதும் அச்சம் எனக்கு இல்லை

கடமையின் வழியில் கடுகிச் செல்கையில்

இதுவோ அதுவோ எதுவும் சரிதான்

வரங்கள் எதுவும் நான் கேட்பதில்லை!

ஒரு போதும் தோல்வியை ஏற்பதில்லை

புதுப் பாதை வகுக்கத் தயக்கமில்லை

உச்சியில் எழுதிய எழுத்தினை மாற்றவே

தோல்வியை வீழ்த்தி நிமிர்ந்து நின்றிட

புதுக் கவிதை பாடி மகிழ்கின்றேன்!!

[1998 விடுதலைத் திருநாளன்று அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தேச மக்களுக்கு உரையாற்றுகையில் மேற்கோள் காட்டிய Geeth Naya Gaathaa Hoon என்ற கவிதையின் (நானறிந்த) தமிழாக்கம். ]

வாஜ்பாய் பிறநத நாளில் அவரது பெருமைக்கு மெருகு சேர்க்க ஏதாவது செய்ய எண்ணினேன். அதற்காகத்தான் இந்தக் கவிதை  மொழிபெயர்ப்பு முயற்சி.

அட வெங்காய வி்லையே! பெரியாரே!!

Posted December 25, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

Tags: , , , , , , , ,

நேற்றைய தினமணியில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 

மக்கள் அதிகம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கருணாநிதி…“வெங்காயம் விலை உயர்ந்தது குறித்து பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்” என்று பதில் அளித்தார். அதைக் கேட்டு சுற்றியிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பலமாகச் சிரித்தனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=350262&SectionID=164

இது குறித்த சில கேள்விகள்: (சில என்னுடையவை, சில திருவாளர். பொதுஜனத்தினுடையவை)

  • சரி பெரியாரிடமே கேட்டு சொல்லுங்கள் என்று நிருபர்கள் சொல்லியிருந்தால் இவர் என்ன செய்திருப்பார்?
  • ஓட்டுக் கேட்டு இவரும் திமுகவினரும் வரும்போது மக்கள் பெரியாரிடமே ஒட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றால் இவர் என்ன செய்வார்?
  • தாலிக்கு தங்கம் எங்கே, தாளிக்க வெங்காயம் எங்கே , கூத்தாடியே பதவி விலகு! இது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவரை எதிர்த்த தி.மு.க வின் தேர்தல் கோஷம்.  அதை இன்று இவரிடமே திருப்பினால் என்ன செய்வார்?
  • தினமணி பின்னூட்டத்தில் ஒருவர் “இதைப் பெரியாரிடம் சொன்னால் எதால் அடிப்பார்” என்று கேட்டிருந்தார்.
  • வெங்காய விலையை ஏதோ சமாதியில் படுத்துக் கொண்டே பெரியார் ஏற்றிவிட்டது போலச் சொல்லியிருக்கிறாரே, வீரமணி இதற்கு என்ன சொல்கிறார்?

ஜெயலலிதா இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பார். வழக்கம் போல சற்று்த் தாமதமாக. ஆனால் அவரது இளைஞர்-இளம்பெண்கள் பாசறை என்ன ஆனது? இந்த வெங்காயப் போராட்டத்திலாவது அதுமுக இளசுகள் களமிறங்குவார்களா? இல்லை பழசுகளே தானா தெரியவில்லை!

  • கம்யூனிஸ்டுகள் இவ்விஷயத்தில் மந்தமாக இருப்பதாகவே படுகிறது.
  • வைகோ தென்ற்லாகக் கூட வீசவில்லை. (பிறகு எதற்கு புயல் பட்டம்?)
  • விஜயகாந்துக்கு வசனகர்த்தா லீவில் போய்விட்டாரோ?
  • மருத்துவர் மாலடிமை கூட்டணி முடிவாகும் வரை மௌனம் மேலானது என்றிருக்கிறாரா தெரியவில்லை. (மக்களுடன் கூட்டணி அவ்வளவு தானா?)
  • தேஜ கூட்டணி ஆட்சியில் வெங்காய விலை உயர்வை வைத்து தம் கட்சித் தலைவரை வெங்காய நாயுடு என்று ஏசிய காங்கிரசை இன்னும் பாஜக 2G, JPC என்று பேசியே எதிர்ப்பது ஏன்?

ஒரு காலத்தில் கவிதை எழுதி மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொணர்ந்த  கவிஞர்கள் இப்போது பேசாதிருப்பது ஏன்?

ஒரு ரூபாயில் அரிசி ரேஷன் கடைகளில் எப்போதாவது கிடைக்கிறது. காய்கறிகள் கிலோ 80 ரூபாய், பருப்பு வகைகள் கிலோ 150 ரூபாய். கேஸ் சிலிண்டர் விலை 375 ரூபாய், அது மேலும் உயருமாம்!

வயிற்றில் போட ஈரத்துணி இலவசம் என்று அடுத்த தேர்தல் அறிக்கையில் திமுக வினர் சொல்வார்களோ?

இந்நிலையில், மக்களின் வயிற்றுப்பாடு பற்றிய கேள்விக்குக் கருணாநிதியின் நையாண்டி பதிலும்   அமைச்சர்களின் சிரிப்பும் ஒரு வாத்தியார் பாட்டை நினைவுக்குத் தருகிறது.

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி…

பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி…

மனிதன் என்ற போர்வையில்,

மிருகம் வாழும் நாட்டிலே

நீதிஎன்றும் நேர்மை என்றும்

எழுதி வைப்பார் ஏட்டிலே!

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அது ஆணவச் சிரிப்பு……. ஆணவச் சிரிப்பு!!

வரும் தேர்தலிலாவது தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் நல்வாழ்வு வெங்காயம் தான். தேடத் தேட அழுகாச்சி தான் மிஞ்சும்.

கருணாநிதி தாமதித்து விட்டார்!

Posted December 24, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

Tags: , , , , , , , ,

1972ல் எம்ஜிஆர் அவர்கள் திமுக தலைவர் உட்பட பொறுப்பில் இருப்போர் கணக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டார். அதனால்  அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தனிக் கட்சி கண்டார். 13 ஆண்டுகாலம் தமிழகத்தின் தனிப் பெருந்தலைவனாக ஆட்சி செய்தார். கட்டம் கட்டிய கருணாநிதி 1984 ல் எம்ஜிஆர் மருத்துவம் பார்க்க அமெரிக்கா சென்ற போது என்னிடம் ஆட்சியைத் தாருங்கள், எம்ஜிஆர் வந்ததும் அவரிடமே பத்திரமாக திருப்பித் தந்து விடுகிறேன் என்று மக்களிடம் கெஞ்சிப் பார்த்தார். பலிக்கவில்லை.

1989ல் அதிமுக பிளவுபட்டதால் வென்றார். 1991ல் ராஜீவ் மறைவு அனுதாபத்தில் தோற்றார். 1996ல் வாய்ப்பிருந்தும் வம்பெதற்கு என்று கருதி ஜாக்கிரதையாக எம்ஜிஆர் என் நண்பர் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். 2001ல் தன்னை முன்னிலைப்படுத்தித் தோற்றார். பின் வந்த 2004 பாராளுமன்றம் மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் கருணாநிதி எம்ஜிஆரி பெயரைச் சொல்லி வென்றார். 2009 பாராளுமன்றத் தேர்தலில் கருணாநிதி செய்த ஒரு அதிரடிப் பிரச்சாரம் இது:

எம்ஜிஆர் உயிருடன் இருந்த போது பிஜுபட்நாயக் திமுக-அதிமுக இணைப்பிற்கு என்னிடம் பேசினார். நான் பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டேன். எம்ஜிஆர் சரியென்றார். ஆனால் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர் மனதைக் கலைத்து விட்டார்.

பிஜு பட்நாயக், எம்ஜிஆர் இருவரும் இப்போது உயிருடனில்லை. அதனால் அவர்கள் இருவரையும் கேட்க முடியாது. பண்ருட்டி இராமச்சந்திரன் நிச்சயம் இதை மறுப்பார். இவர் மீது குற்றம் சுமத்துவார். இவர் சொல்வதன் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குறியாகிறது.

இப்போது 2010ல் 176000 கோடியில் மூழ்கிய பிறகு கணக்குக் காட்டுகிறேன், கண்ணிருப்போர் காண என்று ஒரு அறிக்கை விடுகிறார். அதில் உள்ள குளறுபடிகள் ஏராளம்.

என் கருத்து: 1972ல் எம்ஜிஆர் கேட்டபோதே கணக்கைக் காட்டியிருந்தால், கருணாநிதிக்கு 13 ஆண்டு அரசியல் வனவாசம் கிட்டியிருக்காது.

என் கேள்வி: ஒரு சொத்துக் கணக்குக் கேள்விக்கான (ஒப்புக்குச் சப்பாணி) பதிலைச் சொல்ல 38 வருடங்கள் எடுத்துக் கொள்ளும் கருணாநிதி காவிரி, முல்லைப் பெரியாறு, இராமேஸ்வரம் மீனவர், ஈழத் தமிழர் மறுவாழ்வு போன்ற பிரச்சினைகள் சம்பந்தமாக எழுப்பப்படும் கேள்விகளுக்குச் சரியானபடி பதிலளிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்?

_______________________________________________________

கீழ்க்காணும் கேலிச் சித்திரம் கேலி செய்வது திமுகவையா திருவாளர் பொது ஜனத்தையா? தக்க காரணங்களுடன் விளக்குவோர்க்கு 2G ஸ்பெக்ட்ரம் குறித்த என் பதிவுகளின் link இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

(இது தினமணியிலோ, துக்ளக்கிலோ வந்த கார்டூன். எதில் வந்ததோ courtesy அந்தப் பத்திரிகை. மதி வளர்க!)

தில்லுமுல்லு – A film by UPA-II

Posted December 19, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

176000 கோடி 2G அலைக்கற்றை ஊழல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுச் சற்றே மக்கள் கண்களுக்கு மறைவாக இருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் (ரூ.70000 கோடி) பற்றிய விசாரணையில் ஒரு தில்லாலங்கடித் தில்லுமுல்லு நடந்திருக்கிறது. அது இந்த அரசு துறைசார்ந்த மற்றும் அமைச்சரவை சார்ந்த என்று எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் என்று குற்றச்சாட்டு வந்ததும் வழக்கம் போல மறுத்து, இலண்டனில்  உள்ள இந்திய தூதரகத்து மக்கள் சொல்லித் தான் செய்தேன் என்று கல்மாதி சொல்ல, எங்களை வம்புக்கிழுத்தால் கல்மாதிக்குக் கருமாதிதான் என்று தூதரகம் மிரட்ட, ஒரு வழியாக விளையாட்டுப் போட்டிகள் முடிந்துவிட்டன. ஊழல் விசாரணைக்கு அதிகாரமில்லை என்று ஒரு ஆட்டம் ஆடி, வேறு வழியில்லை என்றதும் கட்சிப் பதவியைத் துறந்தார் கல்மாதி.

இந்திய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இன்னும் அவர் தான் தலைவர்! இவர் ஏதோ கட்சிப் பணத்தைச் சாப்பிட்ட மாதிரி கட்சிப் பதவியை விட்டு தூக்கி விட்டால் சரியா என்று கேட்கக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான். நீங்கள் ஆர் எஸ் எஸ், பாஜக ஆதரவாளராக, மதவெறியராக முத்திரை குத்தப்படுவீர்கள். தமிழகத்தில் ஆ.ராசாவை எதிர்ப்போர் தலித் எதிரிகள் என்று சொல்லவில்லையா? தமிழக அளவில் சாதிவெறி முத்திரை என்றால் என்றால், தேசிய அளவுக்கு ஒரு மதவெறி முத்திரை.

ஒரு கட்டத்தில் இனி முடியாது என்ற போது மாண்புமிகு பாரதப் பிரதமர் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்தார். V.K .ஷுங்க்லு (பெயர் ஆந்திராக் காரர் போல  இருக்கிறது. எந்த ஊர்க்காரர் தெரியவில்லை)என்பவர் தலைமையிலான அந்தக் குழு நிதி முறைகேடுகள் பற்றி விசாரிக்கும், அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்படி முடிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று சிங்கமாய்க் கர்ஜித்தார் இந்த அப்பழுக்கற்ற நேர்மைச் சிங்கனார்.

இந்த V.K .ஷுங்க்லு 8 ஆண்டுகளுக்கு முன்பு CAG ஆக இருந்து ரிடையர் ஆனவர். ஆ.ராசா வெவரத்தின் சிகரமாக வாரிக் கொடுத்தால் நாடு இழந்தது 176000 கோடி என்று கணக்குச் சொன்னதும்,  “இவர்கள் எப்படி எழுதுவார்கள் தெரியாதா என்று இலக்கிய விமர்சனம் போல ஆரம்பித்து, அவர்கள் எழுதுவது இறுதித் தீர்ப்பல்ல” என்று இறுதியில் சட்டபூர்வமாகத் தமிழக முதல்வர் விமர்சித்தாரே… அதே  CAG தான்.

இதில் ஆதாய முரண் இருப்பதாக ஒரு புதிய பூதம் கிளம்பியது. (conflict of interest என்பதற்குத் தமிழ்ச் சொல் தேடியபோது விக்சனரியில் கிடைத்தது இந்தச் சொல்.  அருஞ்சொற்பொருள்:பொதுப் பொறுப்பில் உள்ள ஒருவர், அப்பொறுப்பு தனக்களிக்கும் அதிகாரத்தால் தனிப்பட்ட லாபத்தை அடையக்கூடிய சூழ்நிலை ஆதாய முரண் எனப்படுகிறது.) ஷுங்க்லுவுக்கு என்ன ஆதாயம் இதில்?

அது புரிய சற்றே பின்னோக்கி வரலாற்றைப் பார்த்தல் அவசியம். சத்யம் கம்பியூட்டர் நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டு அதன் ஆடிட்டர்கள் கூட கூடச் சேர்ந்து ஆடிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது நினைவிருக்கலாம். அந்த சத்யம் நிறுவனத்துக்கு ஆடிட்டர் வேலை பார்த்த PwC (Price waterhous Coopers) என்ற நிறுவனம் தன் பறிபோன நற்பெயரைத் மீட்டெடுக்க சற்றே பெரிய மூளைக்கார மனிதர்களை தனக்கு ஆலோசகர், இயக்குநர் என்று நியமித்துக் கொண்டது.

அத்தகைய பெரிய மூளைக்கார மனிதர்களில் ஒருவர் தான் ஷுங்க்லு. நாடு முச்சூடுக்கும் கணக்கு வழக்குப் பார்த்தவர் என்பதால் அவரை கரம் கூப்பி அழைத்து உட்கார வைத்துக் கொண்டது  PwC. இந்த PwC டில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (DDA) காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கியது.  அந்த மாதிரி ஏதாவது ஆதாய முரண் இருந்தால் நான் PwC வேலையை விட்டுவிடுவேன் என்றால் ஷுங்க்லு.

ஷுங்க்லுவுக்கு தரப்பட்ட விசாரணை வேலை DDA செய்த முறைகேடுகளையும் சேர்த்தே இருக்கிறது. இது போக நிர்வாக சீர்கேடு, நிதி மோசடி, தேவையற்ற செலவு, தரமற்ற கட்டுமானம் இவையெல்லாம் அவர் விசாரணை வளையத்தில் வருகிறது. இது போக Queen’s Baton Relay ஓட்டத்துக்கு PwC ஆலோசகர் பணிக்கு விண்ணப்பித்திருந்தது, ஆனால் கிடைக்கவில்லை. இதையும் சேர்த்தே அவர் விசாரிப்பார். தான் சார்ந்த நிறுவனம் தோற்ற ஒரு விஷயத்தை அவர் விசாரிப்பது நியாயப்படி செல்லாது.

மேலும் அரசியல் சாசனத்தின் Article 148(4) இப்படிச் சொல்கிறது.  “The Comptroller and Auditor General of India shall not be eligible for further office either under the government of India or under the government of any state after he has ceased to hold office.” அதாகப்பட்டது, தலைமைக் கணக்குப்பிள்ளை ஓய்வு பெற்ற பிறகு மையஅரசும் அல்லது அது சார்ந்ததுமான பணிகளையோ பொறுப்புகளையோ, எந்த மாநில அரசும் அல்லது அவை சார்ந்ததுமான பணிகளையோ பொறுப்புகளையோ ஏற்கக் கூடாது. ஷுங்க்லுவோ தான் இந்த விசாரணை வேலைக்காகச் சம்பளம் என்று பைசா வாங்கவில்லை அதனால் இந்தப் பொறுப்பை ஏற்றது தவறல்ல என்கிறார்.

மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற (நீதி தவறாத) நீதிபதிகள் இது அரசியல் சாசனத்தின் எழுத்தைப் பிடித்துக் கொண்டு நோக்கத்தைக் கைவிடும் செயல் என்கின்றனர். மற்ற சில வழக்கறிஞர்கள் அதெல்லாம் தப்பில்லை, அதான் பைசா வாங்கலையே என்கின்றனர். இப்படி ஓய்வுக்குப் பின் பணிஏற்கக்கூடாது என்று சொன்னதே ஓய்வுக்குப் பின் பெரிய பொறுப்பு கிடைக்கும் என்று ஆசைகாட்டி CAG முதலிய பொறுப்பான பதவியில் இருப்போரை ஆளும் அரசு ஆட்டி வைக்கக்கூடாது என்பதற்காகத்தான்.  ஆக அரசியல் சாசனத்தின் நோக்கத்தை நோகாமல் காற்றில் விட்டிருக்கிறார்கள் இதில்.

பிரதமர் அலுவலகம் வழக்கம் போல “அப்படியா? ஆதாய முரணா? அமைச்சரவை செயலர் என்ன ஏது என்று பார்த்துச் சொல்வார். கொஞ்சம் பொறுங்கள்” என்றது. அக்டோபரில் இருந்து இன்னும் அமைச்சரவை செயலர் பார்த்துக் கொண்டேருக்கிறார். இன்றுவரை எதையும் சொல்லக் காணோம்.

CBI, CVC போன்ற விசாரணை நிறுவனங்கள் கல்மாதியும் அவர் சார்ந்தோரும் ஒத்துழைப்பு என்றால் என்ன பண்டம் என்று கேட்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்க, ஷுங்க்லு மட்டும் “யாரிடமும் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு முப்பது நாப்பது பேரை இதுவரை விசாரிச்சுட்டேன். நல்லாவே ஒத்துழைக்கிறாங்க” என்கிறார். CBI, CVC இவர்களுக்கெல்லாம் விசாரிக்கத் தெரியாதா, இல்லை ஷுங்க்லு ஏதாவது தனிச்சிறப்புமிக்க முறையில் விசாரித்தாரா? (அறிக்கையில் விசாரணை முறை பற்றியும் சொல்வார் என்று நம்புவோம்.)

இதைவிட அவர் செய்த இன்னொரு செயல் தான் அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. “இதுக்கும் மேல என்னத்த செஞ்சிருக்கப்போறாரு” என்று நினைப்போர் சற்றே நிற்க.

நம்ம சுரேஷ் கல்மாதி இன்னும் தலைவராக இருக்கும் இந்திய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு என்று கணக்கு வழக்கைப் பார்க்க ஒரு ஆடிட்டர் நிறுமம் இருக்கிறது. தினேஷ் மேத்தா & கோ என்று பெயர். நம்ம ஷுங்க்லு நேராக அந்த நிறுவனத்திடம் போய் “இந்தமாதிரி இந்தமாதிரி கையாடல் நடந்து போச்சாம். அதை தணிக்கை செய்ய பிரதமர் சொல்லிருக்காரு. அதுக்கு கணக்கு புத்தகங்களை தணிக்கை செய்ய நீங்க உதவி செய்யணும்” என்று கேட்டார். இது தப்பில்லையா என்று கேட்டால் “மொத்தமா ஒரு 50 பேர் வேலை செய்வாங்க என் விசாரணைக் கமிட்டில. அதுல தினேஷ் மேத்தா & கோ காரங்க ஒரு 5% இல்ல 6% தான் இருப்பாங்க. இதப் போயி பெருசா பிரச்சினைன்னு பேசிக்கிட்டு…. சோலி கீலி இருந்தா பாருங்கப்பா” என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

களவாடியது பற்றி விசாரிக்க கல்மாதியின் ஆடிட்டர், சுருட்டியது பற்றி கோர்ட்டில் பேச ஆ.ராசவின் வக்கீல்…. இன்னும் 2G பற்றித் தனியே கபில்சிபல் ஒரு நீதிபதியைக் கொண்டு விசாரிக்கிறார். அதில் என்ன கோக்குமாக்கு இருக்கிறதோ? தில்லுமுல்லுகளை மறைக்க மேலும் மேலும் தில்லுமுல்லுகளைச் செய்து இவர்கள் திருந்தாத ஜென்மங்கள் என்று நிரூபித்து வருகிறார்கள்.

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் திருந்தியாகணும்….. எழுதிய கவிஞர் வாலி சொல்வாரா எப்போது என்று!!!

ஏலேலோ ஐலசா! ஏலகிரி ஐலசா!!

Posted December 15, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

Tags: , , , , ,

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று ஒரு படம். விக்ரமன் இயக்கியது. கார்த்திக், ரோஜா மற்றும் பலர் நடித்தது.  அதில் ஒரு காமெடி காட்சி வரும். கார்த்திக்கும் ரமேஷ்கண்ணாவும் பணக்கார வீட்டில் நற்பெயர் பெற்று  கிட்டத்தட்ட முக்கிய விருந்தினர் போலத் தங்கியிருப்பர். இரவு 11 மணிக்கு ACஐ 20 டிகிரியில் வைத்துக் கொண்டு, வீட்டுச் சமையல்காரனிடம் ஐஸ்க்ரீம் கேட்பர். குளிர் தாங்காது கம்பளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும் இருவரும் ஐஸ்க்ரீம் கொண்டு வந்த சமையல்காரனிடம் ஏசியை இன்னும் 2 டிகிரி குறைக்கச் சொல்வர். சமையல்காரன் போனதும் “நாம ஓவரா போறோமோ?” என்று கேட்டுக் கொள்வர்.

இந்தக் காட்சியை நான் நினைத்துக் கொண்டத்ற்கும் தமிழக முதல்வர் மார்கழி பிறக்க மூன்று நாட்கள் இருக்கையிலே, பாதித் தமிழகம் வெள்ளத்தில் மிதக்கையிலே ஏலகிரிக்கு ஓய்வெடுக்கச் சென்றதற்குதத சம்பந்தம் இருப்பதாக யாரேனு்ம் எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. ஏலகிரிக்குப் போன முதல்வரே பொறுப்பு!

1956 ஆம் ஆண்டு திராவிட நாடு இதழில்  அறிஞர் அண்ணா எழுதிய கடிதங்கள் சில படித்தேன்.  அவற்றிலிருந்து சில வரிகளை இங்கே தருவேன். ஏலகிரிப் பயணத்தை இது இடித்துரைப்பதாக யாரேனு்ம் எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. ஏலகிரிக்குப் போன முதல்வரே பொறுப்பு!

வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, “ஊட்டி’ செல்வர். இங்கு மேடையில் “கோடை இடி’ யெனக் காங்கிரசார் முழக்கமிடுவர், “கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம் பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக் காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!! – என்று வெளுத்து வாங்கினார்கள்.

கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்; இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க ஏற்பாடாகி வருகிறது.

பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான் பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை! என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக் கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்கு வதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான் வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது.

குமரி மாவட்டம்  கடலோடு சங்கமித்துச் சற்றொப்ப ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் கீழ்வரும்  அண்ணாவின் வரிகளுக்கும்,  இளைஞன் படவிழாவில் அவர்தம் அருமைத் தம்பி கலந்து கொண்டு இன்புற்றதற்கும் சம்பந்தம் இருப்பதாக யாரேனு்ம் எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. இளைஞன் படவிழாவில் இன்புற்ற முதல்வரே பொறுப்பு!

ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று உறுதி அளிக்கக் காணோம் – அதற்கான திட்டம் தீட்டுவதாகவும் தெரியவில்லை – அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம்.

அதுமட்டுமல்லாமல் ’59ல் திமுக வினர் கோஷமிட்ட சில வசனங்கள் இதோ:

“குடல் எரியுது; கும்பி கருகுது; குளு குளு ஊட்டி ஒரு கேடா?”

“ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?”

ஆறுதலாக ஓரிரு சொற்கள்:

இடுக்கண் வருங்கால் நகவேண்டுமென்ற வள்ளுவன் வாக்கு காற்றோடு போகலாமா தமிழா?

தீதும்  நன்றும் பிறர்தர வாராயெனும் பொன்மொழியே நம் செம்மொழியாம்…. இந்தப் பாடலைக் கேள். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இன்ப வெள்ளம் தேனாகப் பாய்கிறதே!

மறுபடியும் வெள்ளமா!!!

(கடைசி இரு சொற்களை வடிவேலு ஸ்டைலில் யாரேனும் படித்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல, அப்படிப் பேசிப் பழக்கிவிட்ட வடிவேலுவே பொறுப்பு!)

வித்தை காட்டும் மோடி!

Posted December 9, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

குஜராத் முதல்வ்ர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தார். அரசு முறைப்படி வரவேற்கவில்லை. தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார் மோடி. அறை கூட்டத்தால் நிரம்பியது. மற்றோர் அறையில் அவர் பேச்சை டிவியில் ஒளிபரப்பினர். அந்த அறையும் நிரம்பியது. அத்தனை பேரும் தொழிலதிபர்கள், தொழிற்கூட்டமைப்பு அதிகாரிகள். பேச்சினூடே மன்மோகன் சிங் முதல ஓபாமா வரை அனைவரையும் மோடி கலாய்த்தார்.

2011ஆம் ஆண்டு குஜராத்தை பல துறைகளில் நாட்டில் முதலாவதாக ஆக்க Vibrant Gujarat 2011 என்ற திட்டத்தை முன்வைத்து தொழிலதிபர்களை குஜராத்தில் முதலீடு செய்ய அழைத்தார். கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டுக்கு 9.6% விவசாயத்துறை வளர்ச்சி, 12% தொழில் வளர்ச்சி,  24/7 தடையற்ற மின்சார வசதி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 16% பங்கு என்ற சாதனைகளை முன்வைத்து  குஜராத்துக்கு தெழில் தொடங்க வாரீர் என்று அழைத்தார்.

ஆர்வம் காட்டிய தொழிலதிபர்களிடம் திட்டம் சிறப்பாக இருந்தால் அன்று மாலை 4 மணிக்குள் நடவடிக்கை என்று உறுதியளித்தார். “farm to fibre to fabric to fashion to foreign” என்ற கோஷத்தை முன்வைத்து ஜவுளித் தொழிலதிபர்களை குஜராத்துக்கு அழைத்தார். தான் தமிழகத்திலிருந்து முதலீடுகளை கவர்ந்து போக வரவில்லை என்றும் அடுத்தடுத்த முதலீடுகளை குஜராத்தில் செய்யுமாறும் சொன்னார்.

நிற்க. இது நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறதே! இப்போது என்ன அதற்கு என்று கேட்பது நியாயம். தொழிற்துறை வட்டாரங்களில் அடிபடும் பேச்சு என்னவென்றால் ஹூண்டாய், ஃபோர்ட் மற்றும் சில கம்பெனிகள் கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்துக்குப் போகலாமா என்று யோசிக்கிறார்களாம். என்ன காரணங்கள் சொல்கிறார்கள் என்று பார்த்தால் மோசமான சாலைகள், சட்டம் ஒழுங்கு சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சினைகள், லஞ்சம், ஆமை வேகத்தில் நடக்கும் அரசு வேலை என்று அடுக்குகிறார்கள்.

மேற்சொன்ன காரணங்கள் குஜராத்தில் இல்லையா? சாலைகள் மட்டும்  மோசம். அதையும் இப்போது சீர் செய்கிறார்களாம். மற்ற பிரச்சினைகள் அறவே இல்லை. எப்படி நம்புவது. உதாரணம் டாடா நேனோ.

டாடா நிறுவனம் உலகின் விலை மிகக் குறைந்த மகிழுந்து தயாரித்த போது அதை மேற்கு வங்கத்தில் தொழிற்சாலை அமைத்துத் தயாரித்துத் தர முடிவு செய்தார்கள். புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ஞானம் பிறந்துவிட்டது, மே.வங்கம் தொழில் முன்னேற்றத்தின் ராஜபாட்டையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்றெல்லாம் எழுதப்பட்டது. மமதா பானர்ஜி காரியத்தைக் கெடுத்தார். டாடாவை கப்பர்சிங் (ஷோலே வில்லன்) போலச் சித்தரித்து போராட்டங்களை நடத்தினார். அந்த விவரத்துக்குள் இப்போது போக வேண்டாம்.

வங்கத்தைக் காலிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் டாடாவை கூவி அழைத்தது இரு மாநிலங்கள்.  மகாராஷ்டிரம் ஒன்று. குஜராத் மற்றொன்று. டாடா குஜராத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் குஜராத்தில் வேலைகள் வேகமாக நடைபெற்றன. மோடி தொழில்துறைக்கு பிரத்தியேக சலுகைகள் அளிப்பதை எதிர்ப்பவர் என்றபோதும், நேனோவுக்கு பிரத்தியேகச் சலுகைகளை அளித்தார். காரணம், வாகனத்துறையில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் மட்டுமே அதுவரை குஜராத்தில் பெருமளவில் செயல்பட்டன. பெருந்தொழில் ஒன்று வருவது அதுவே முதல் முறை. எப்படியாவது நேனோ குஜராத்துக்கு வரவேண்டும் என்ற முனைப்பு.

1000 ஏக்கர் நிலம் தயாராக வைத்துக் கொள்ளப்பட்டது. விழா முடிந்ததும் வேலை எப்போது துவக்குகிறீர்கள் என்றனர் குஜராத் அதிகாரிகள். விழா நடாத்தி கல்வெட்டு திறந்து வைத்து, ஆயிரக்கணக்கானோர் வேலை பெற்றதாகப் பேசிவிட்டு, அப்பறம்…நிலம் எங்கன பாக்குறீக என்று அடிப்படையைத் துவக்குவதும், யாருக்கு எம்புட்டு என்ற பேரத்தில் இறங்குவதும் நடக்கவில்லை.

அறிவிப்புக்கு வெகுநாட்கள் முன்பே குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தின் 2200 ஏக்கர் நிலத்தில் 1000 ஏக்கர் அரசுக்கு மாற்றப்பட்டது. திங்கட்கிழமை டாடா அதிகாரிகள் பார்த்து ஓகே செய்த நிலம் செவ்வாய்க்கிழமை டாடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. தொழில் துவக்க அனுமதி போன்ற நிர்வாக விவகாரங்கள்  இரண்டே நாட்களில் முடித்துத் தரப்பட்டது. ஆனால் எந்தப் பதிலுபகாரமும் இல்லாமல் வாரிக் கொடுத்துவிடவில்லை.

டாடா நிறுவனம் ஒரு வாகனப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தை குஜராத்தில் அமைக்கும். விவசாய ஆராய்ச்சி மையம் ஒன்றும் கடல் உயிரியல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் டாடா நிறுவனம் அமைக்கும். வேலை வாய்ப்பில் குஜராத்திகளுக்கு முன்னுரிமை தரப்படும்.  10000 கூடுதல் வேலைக்கான ஆட்கள் தேடும் பணி தொடங்கிவிட்டது. வாகன உதிரி பாகங்கள், இன்னபிற சிறு மற்றும் குறு தொழில்கள் டாடா நேனோவுக்குத் தேவையான மூலப் பொருட்கள், பாகங்களை சப்ளை செய்யும். நேனோ குஜராத்துக்கு வந்ததால் அது சார்ந்த சிறு மற்றும் குறு தொழில்கள் 16% அதிக லாபம் ஈட்ட முடியும்.

இப்படிப் பல சிறப்புகளை கையில் வைத்துக் கொண்டு குஜராத்துக்கு வாருங்கள் என்று மோடி அழைத்தது பற்றி 176000 கோடி புகழ் திமுக கண்டுகொள்ளவில்லை. காங்கிரசுக்காரர்களுக்கோ பொறுக்கவில்லை. காங்கிரசு எம்பி K.S.அழகிரி மத்திய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்துத் தொழில்களை மோடி குஜாராத்துக்குக் கவர்ந்து செல்வதாக அவர் குமுறியிருக்கிறார்.

என் கேள்வி இதுதான். மோடி கவர்கிறார் என்று எம்பி எம்பிக் குதிக்கும் அந்த  எம்பி மோடி குஜராத்தில் செய்த வசதிகளை, வாய்ப்புகளை, நிர்வாகச் சிறப்பைத் தமிழகத்தில் தரவில்லையே என்று கூட்டணிக் கட்சியான திமுக தலைமையிலான மாநில அரசை ஏன் கேட்கவில்லை? தமிழக முதல்வரோ அமைச்சர்களோ கடந்த 5 ஆண்டுகளில் பிற மாநிலங்களுக்குச் சென்று தமிழகத்தில் தொழில் தொடங்க வாரீர் என்று அழைத்ததுண்டா?

க்டந்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், மணல் அள்ளல் தவிர வேறு தொழில் தமிழகத்தில் வளர்ந்த வரலாறு இருக்கிறதா? சிறு மற்றும் குறு தொழில்கள் தமிழகத்தில் நசிந்தது தானே 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனை? இதைத் தட்டிக் கேட்காமல் மோடி இங்கே வந்து மஸ்தான் வித்தை காட்டுகிறார் என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மாளட்டும் முஜாகிதீன் மூடமனம்

Posted December 9, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: கவிதை

புண்ணியத் தலமாம் காசியம் பதியிலே

புனிதத் தாயாம் கங்கையின் மடியிலே

பக்தியோடு வழிபட்ட மாலைப் பொழுதிலே

பக்தரைக் காலன் கைக்கொண்டு போயினன்

குண்டுகள் வெடித்து குலமக்கள் மாண்டனர்

குற்றுயிர் தாங்கியோர் சிகிச்சைக்குப் போயினர்

கதறும் மக்களின் கண்ணீர் ஓடையில்

கங்கையும் சற்றே பெருகியே ஓடினாள்

உளவுக் கென்றொரு பிரிவினர் உண்டு

உள்ளம் எண்ணும் எண்ணம் அறியும்

தனியோர் திறமும் அவருக்கு  அதிகம்

தனிப்பெரும் அப்படை சொன்னது என்ன?

முஜாகிதீன் என்றொரு மூடக் குழுவினர்

முற்றிலும் மூளையைத் களைந்து நிற்பவர்

மாற்றான் பேச்சுக்கும் காசுக்கும் மயங்கினர்

மாநிலம் போற்றும் பாரதம் எரிக்கவே

சொன்னது கேட்டும் சும்மா யிருந்தால்

சொப்பன வாழ்வில் சுகமா யிருந்தால்

ஆவன செய்து நாட்டை நடாத்தும்

ஆள்வோர் ஆற்றும் கடமையும் என்ன?

கடுமையாய்க் கண்டித்தார் தலைவர் பெருமக்கள்

கடுஞ்சொல் பேசினார் அமைச்சர் திருமகனார்

கொடுமைக்கு நிறம்பூசும் சிதம்பரத் தமிழ்மகனார்

கொடுந்தொழிலர் வேறறுக்கப் பச்சைக்கொடி காட்டுவரோ!

கல்வி கேள்வியில் இடம் பெறவேண்டிய

கனவுகள் பலவும் கருகிய நிலையில்

இரண்டே வயதான குழந்தை ஒன்று

இறந்தவர் பட்டியலில் முதலிடம் கண்டது

காசியம் பதியிலே மாண்டால் புண்ணியமாம்

காணாமல் போகுமாம் கடுமையான பாவமும்

கபடத்தொழில் செய்யும் முஜாகிதீன் மூடத்தனம்

கங்கையொடு போகட்டும் மக்கள்நலம் வாழட்டும்!

புள்ளிவிவரப் புளுகு!

Posted December 2, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

பிகாரில் தே.ஜ.கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 243ல் 206 தொகுதிகளில் வென்றுள்ளது. சமோசாவில் ஆலூ (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பிகாரில் லாலு ஆட்சியில் இருப்பான் என்று மார்தட்டிய லாலுபிரசாத் யாதவும் அவருடன் கூட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் ராம்விலாஸ் பாஸ்வானும் இன்று படுதோல்வி கண்டிருக்கிறார்கள். ராகுல் மன்மத பாணம் தொடுத்து மகளிரணியைக் கவர்ந்துவிட்டார் என்று மார்தட்டிய காங்கிரஸ் தேர்தலில் கவ்விய மண்ணைக் கக்கவைத்தால் தார் பாலைவனத்தின் மாதிரியை பிகாரில் உருவாக்கலாம்.

இது பலரும் ஆவென்று வாய்பிளந்து  அண்ணாந்து நோக்கும் வெற்றி என்பது வருகிற விமரிசனங்களில் தெரிகிறது. ஆச்சரியம் சற்றே அடங்கியதும் காங்கிரசு சார்ந்து, இடதுபக்கம் சாய்ந்து வளர்ந்து கெட்ட அறிவுஜீவிகள் “எம் கடன் இந்த வெற்றியைச் சிறுமைப்படுத்திக் கதைப்பதே” என்ற நெ(வெ)றியோடு சிலபல அலசல்களைச் செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். பிகாரில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி வென்றது பெரிய சாதனையில்லை. பாரீர் புள்ளிவிவரத்தை என்று அடுக்குகிறார்கள். அந்த அடுக்கல் இறுதியாக இந்தத் தேர்தல் முறையே தவறு என்பதில் முடிகிறது.

Centre for the Study of Developing Societies என்ற அமைப்பு செய்த அலசல் ஆராய்ச்சிகளின்படி தே.ஜ.கூ. பெற்ற வாக்கு சதவிகிதமும் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் முரணான விகிதத்தில் உள்ளன. தே.ஜ.கூ. 39% வாக்குகள் பெற்று 206 இடங்களில் வென்றது. லாலு-பாஸ்வான் கூட்டணி 26% வாக்குகளைப் பெற்று 25 இடங்களில் வென்றது. காங்கிரசு 8% வாக்குகள் பெற்று 4 இடங்களில் வென்றது. வலது கம்யூனிஸ்ட் 1.69% வாக்குகள் பெற்று 1 இடத்தில் வென்றது. 0.71 % வாக்குகளை வென்ற இடது கம்யூனிஸ்ட் ஒரு இடம் கூடப் பெறவில்லை.

லாலு-பாஸ்வான்-காங்கிரஸ் ஓட்டுக்களை மொத்தமாகச் சேர்த்தால் 34% தான் வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டுகளையும் சேர்த்துக் கொண்டால் 37% வருகிறது. அப்படியும் தே.ஜ.கூட்டணிக்கு 2% குறைவுதான்.

சேர்ந்தால், பிரிந்தால், வென்றால் என்ற ஊகங்களை விட்டுவிட்டு நடந்ததைப் பார்ப்போம். தே.ஜ.கூட்டணி 39% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. லாலு-பாஸ்வான் கூட்டணி 26% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பிரதான எதிரியைவிட 50% வித்தியாசத்தில் தே.ஜ.கூட்டணி வென்றிருக்கிறது.

இதில் இன்னொரு வாதம் வைக்கப்படுகிறது. காங்கிரசு 243 தொகுதிகளிலும் போட்டி போட்டு 8% வாக்குகள் பெற்று 4 தொகுதிகளில் வென்றது. மற்ற கட்சிகள் தொகுதிகளைப் பி்ரித்துக் கொண்டு வலுவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டன. அதனால் தான் வாக்கு சதவிகிதம் அதிகம் பெற்றன. அப்படிப் பங்கு பிரித்துப் போட்டியிட்டும் லாலு-பாஸ்வான் கூட்டணியின் சாதிவாதம் எடுபடவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி.

இன்னொரு புத்திசாலி புதிதாகக் கண்டுபிடிக்கிறார் ஒரு கணக்கை. (http://arulgreen.blogspot.com/)பதிவான வாக்குகள் 53% தான், அந்தக் கணக்குப்படி பார்த்தால் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைத்த உண்மையான வாக்கு விகிதம் 20% தான். ஆகவே அவர்கள் வெற்றி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குகிறது என்கிறார். இந்த 39%, 26% எல்லாமே 53% வாக்குப் பதிவில் பிரிந்தது தானே? பிறகென்ன கணக்கில் 53% வாக்குப்பதிவு என்பதால் பெற்ற ஓட்டும் பாதியாகக் குறையும் என்கிறாராம்? இந்தக் கேள்விக்கு அவரிடம் பதிலே இல்லை.

புள்ளிவிவரங்களை அடுக்கி வைத்துத் திரித்துப் புளுகி நல்லாட்சி, செம்மையான நிர்வாகம் இவற்றைச் சிறுமைப்படுத்தப் பார்க்கும் சில்மிஷக்காரர்களுக்கு இதோ சில தெளிவான புள்ளிவிவரங்கள். வளர்ச்சியும் சீரான நிர்வாகமுமே வெற்றிக்குக் காரணம் என்பதற்கு இவை சான்றுரைக்கும்.

1980களில் விவசாயமல்லாத துறைகளில் பிகரின் வளர்ச்சி ஆண்டுக்கு 6.62%, இந்தக் காலகட்டத்தில் மொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு 6.61% தான்.  அதே காலத்தில் (1980கள்) பிகாரின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 2.45% உயர்ந்தது, மொத்த இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 3.32% உயர்ந்தது.

1990களில் சாதி அரசியல் (தற்போதய jargonல் சொன்னால் Mandal Politics) மூலமாக லாலு தலையெடுத்துக் கோலோச்சத் துவங்கியபின் விவசாயமல்லாத துறைகளில் பிகரின் வளர்ச்சி ஆண்டுக்கு 3.19%, அதே காலத்தில் மொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு 7.25%. 1990களில் பிகாரின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 0.12% உயர்ந்தது, மொத்த இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 4.08% உயர்ந்தது.

பிகார் விவசாயத்துறையின் வளர்ச்சி 1980களில் 2.21%, இந்தக் காலகட்டத்தில் மொத்த இந்திய தேசத்தின் விவசாயத்துறை வளர்ச்சி ஆண்டுக்கு 3.38%.  1990களில் பிகாரில் 2.35%,  மொத்த தேசத்திலும் 3.14%. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க WTOவை கடுமையாக எதிர்த்து வந்த லாலு ஆட்சியிலும் கூட பிகார் விவ்சாயத்துறை சொல்லிக் கொள்ளும் படியாக வளரவில்லை.

இதே தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் நடந்ததைப் புள்ளிவிவரத்தோடு  பார்க்கலாம்.

2004–05 முதல் 2008–09 வரிஅயிலான நிதியாண்டில் பிகாரின் மாநில ஒட்டுமொத்த‌ உற்பத்தி (GSDP) 11.03% வளர்ந்தது, இது பிகாரை நாட்டிலேயே இரண்டாவது விரைந்து வளரும் மாநிலமாக ஆக்கியுள்ளது. (முதலாவது குஜராத் 11.05%).

5,750 மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.23,350 கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சாலைகள் போடுவதற்காக பிகார் அரசு 2007-08ல் 2,222.08 கோடி ரூபாய் செலவு செய்து ஏறக்குறைய 7500 கிலோ மீட்டருக்கு ரோடு போட்டார்கள். 2003-04ல் 51.2 கோடி தான் செலவு செய்யப்பட்டது. ஆனாலும் 2005 வரை சாலைகள் நடந்து போகக்கூட லாயக்கற்றவைகளாக இருந்தன. நிறைமாத கர்ப்பிணியை வண்டியில் வைத்துக் கொண்டு போனால் பத்தடி  தூரத்தில் பிரசவமாகிவிடும் என்று குண்டும் குழியுமான சாலைகள் பற்றி ஊரு நாட்டில் சொல்வார்கள். அதை விட மோசமான சாலைகள் தான் லாலு ஆட்சியில் இருந்தன.

2004ல் 411 ஆள் கடத்தல்கள் நடந்தன. 2009ல் அது 66ஆகக் குறைந்தது. வழிப்பறி 2004ல் 3000, 2009ல் 1500. வங்கிக் கொள்ளைகள் 2004ல் 27, 2009ல் 7. ஓய்வு பெற்ற மத்திய காவல்படை அதிகாரிகள் கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்டனர். 5000 குற்றவழக்குகள் ஓராண்டில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். ஓராண்டில் அரசு அதிகாரிகள் மீது 75 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டு 35 பேர் சிறைத் தண்டனை பெற்றனர்.

2,36,000 ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை நியமிக்கத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தகுதியான ஆசிரியர்கள் இல்லையெனில் இருப்போரை வைத்துச் சமாளி என்று ஒப்பேற்றாமல்  தகுதியான ஆசிரியர்களை நாடு முழுவதுமிருந்தும் அழைக்கிறது பிகார் அரசு.

உலகப் பொருளாதார மந்த நிலையிலும் பிகாரில் வாகன விற்பனை 45% அதிகரித்துள்ளது. 2008ல் மட்டுமே 13,500 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. வரிவசூல் லாலு ஆட்சியை விட 265% அதிகம். 114,000 பேர்உக்கு வேலையளிப்பதற்காக 23 சர்க்கரை ஆலைகள் திறப்பது உட்பட 600 கோடி ரூபாய் செலவில் 2009ல் தொடங்கி பணிகள் நடை பெற்றுவருகின்றன.

இன்னும் விட்டுப்போன புள்ளிவிவரங்கள் ஏராளம். இவ்வளவு வளர்ச்சிப் பணிகள் இருந்தும் சாதி ஓட்டு, மத ஓட்டு, சதவிகிதம் குறைவு அதனால் ஜனநாயகம் கேலிக்கூத்து என்றால் அத்தகைய வாதங்களை சிந்தனைக்கு வந்த பக்கவாதம் எனலாம். சிந்தை  இடது புறமாய் இழுத்துக் கொண்டது எனலாம். தமிழக முதல்வர் பாணியில் சொல்வதானால் பிகாரிகள் ரொட்டியால் அடித்த பிண்டங்கள் எனலாம்.

நல்ல மனம் இருந்தால் வென்றவர்களை வாழ்த்தலாம். தெளிந்த சிந்தை இருந்தால் வாக்களிப்பதற்கு முன் பிகாரைப் போல தமிழகம் எப்போது, எப்படி முன்னேறும் என்று சிந்திக்கலாம்.

பிகார் வெற்றி யார் தந்தது?

Posted November 30, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

நான் இராகுல் காந்தியின் பிகார் பிரச்சாரம் பிசுபிசுத்ததை நக்கலடித்துப் போட்டிருந்த பதிவுக்கு திரு.அருள் தன் பதிவைப் பின்னூட்டமாகத் தந்திருந்தார். (நல்லாருக்கே! பதிவை இப்படியும் பிரபலப்படுத்தலாமோ!!).

அதில் அவர் எழுதியிருப்பதன் சாராம்சம்: பிகாரில் சாதி தான் வென்றது. புத்திசாலித்தனமாக அதை மறைக்க பத்திரிக்கைகள் வளர்ச்சி, நிர்வாகம் என்று சிறுகற்களை(ஜல்லிக்கு நானறிந்த தமிழ்) அடிக்கின்றன. நிதிஷ் தாழ்த்தப்பட்ட ஜாதியையும், சுஷில் உயர்ஜாதியையும் அண்டக்கட்டிக் கொண்டார்கள்.அதனால் தான் வென்றார்கள்.

இது (வாழப்பாடி ராமமூர்த்தி ஸ்டைலில் சொன்னால்) தார்பாயில் வடிகட்டிய புளுகு. இந்த அபத்தத்திற்கு சாடப்பட்ட பத்திரிகைகளையே துணைக்கு வைத்திருக்கிறார்.ஊகங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. இப்படி நடந்தால், இது இருந்தால், இவர்கள் சேர்ந்தால், இவர்கள் பிரிந்தல் இன்னது நடக்கும் என்பதுதான் ஊடகங்கள் தரும் அலசல்கள்.

இப்படியும் இருக்கலாம் என்று பத்திரிகையில்  வந்த  ஒரு கருத்தைக் கொண்டு இப்படித்தான் நடந்தது என்று முழங்குவது முழுமையான அலசல் ஆகாது. நிதீஷுக்கு பிகாரில் சாதிப் பின்னணி பெரிதாகக் கிடையாது. அவரது குர்மி சாதியினர் பிகாரில் 15%   உள்ளனர். ஆனால் 2005ல் முதல்வரான போது அவர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு நிதிஷுக்கு இல்லை. இப்போது சற்றே உயர்ந்திருக்கிறது என்றால், அது அவரது நல்லாட்சி காரணமாகத் தான்.

சுஷில் குமார் மோடி ஏதோ உயர்ஜாதி ஓட்டுக்களை ஐந்தாண்டுகளாகப் பாக்கெட்டில் வைத்திருந்து இந்தத் தேர்தலில் பெட்டிக்குள் போட்டுவிட்டார் என்பது போலப் பேசுவது விவரங்களின் விவரமான அலசல் அல்ல.

மோடியும் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்தான். தவிரவும் சுஷில் மோடியின் மனைவி ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதால் சாதிப்பற்று மிகுந்த பிகார்  உயர்சாதி மக்கள் லேசி்ல்  ஏற்க மாட்டார்கள். 2005ல் துணை முதல்வராக பாஜக அவரை அறிவித்த போது எதிர்ப்பு எழுந்தது. முதல்வர், துணை முதல்வர் இருவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தால் உயர் சாதியினர்  வாக்கு கிடைக்காது என்றும் சொன்னார்கள் இரு கட்சியினரும். நிலைமை அப்படி இருக்க ஏதோ இருவரும் சாதிகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வென்றது போலப் பேசுவது அபத்தம்.

ரோடுகளைப் பார்த்துப் பல்லாண்டுகளான பிகாரில் தேஜகூ ஆட்சியில் ரோடுகள் போடப்பட்டன. சட்டம் ஒழுங்கு சீராக்கப்பட்டது. கடத்தல்கள் குறைந்தன. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தனர். நிதிநிர்வாகம் சீரானது. நீதிநிர்வாகம் செம்மைப் படுத்தப்பட்டது. வாரந்தோறும் மாவட்ட நீதிபதிகளுடன் திறனாய்வு நடத்தப்பட்டு குற்றவியல் வழக்குகள் விரைந்து தீர்க்கப்பட்டன.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவசமாக மிதிவண்டி  தரப்பட்டது.  சீருடையும் பாடப்புத்தகங்களும் வாங்க ஆண்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தரப்பட்டது. பெற்றோர் மலிவு விலையில் துணிவாங்கித் தைத்துவிட்டு மீதிப் பணத்தை சொந்தச் செலவுக்கு வைத்துக் கொள்வர், பழைய புத்தகங்கள் வாங்கிவிட்டு புதியனவற்றின் விலைக்குக் கணக்குச் சொல்வர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால் 87% பெற்றோர் சரியான மு்றையிலேயே பணத்தைச் செலவு செய்தனர்.

நல்லாட்சி செய்யாவிடில் ஓட்டுக் கிடைக்காது என்ற நிலைதான் நிதிஷ்-சுஷில் கூட்டணியின் இந்த நல்லாட்சிக்குக் காரணம். நல்லது செய்தாலும் செய்யாவிடிலும் ஓட்டு உறுதி என்று இருந்திருந்தால் லாலு போல ஆலூ சமோசா சாப்பிட்டுக் கொண்டும், பான்பீடா துப்பிக்கொண்டும் காலத்தை ஓட்டியிருப்பார்கள்.

இந்த வெற்றி தரக்குறைவானது என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று துடிப்பது, சுய வளர்ச்சி தவிர வேறு வளர்ச்சிகளை  அறியாத தன்னலக் கும்பலும் அவற்றின் அடியொற்றல் தவிர வேறு அரசியல் நிலைப்பாடு அறியாத அப்பாவிகளுமே என்பது உண்மைகளைத் தெளிவாக அலசினால்  புலனாகிறது.

காளமேகத்தைத் துணைக்கழைத்து  இந்த அரைகுறை மேதாவிகளின் போக்கு பற்றி ஒரு கவிதை:

தேர்தல் செருப்புக்கு கட்சிகளின்

வாக்குக் கணக்குப் பார்க்கையிலே

தேஜகூ பெருவெற்றி சிறுத்துரைக்கத்

தாமேங்கும் காரணத்தை யாமறிய

எடுத்து ரைப்பீர் விளக்குமாறே!

ஐயனுக்கோர் ஐயம்!

Posted November 25, 2010 by முதுகுடுமிப் பெருவழுதி
Categories: அரசியல்

நாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=133004

இந்த எட்டடி, பதினாறடி உவமைக்கும் 176000 கோடி ரூபாய் கையாடலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?


%d bloggers like this: