Posted tagged ‘சென்னை’

மொழிப் பிரச்சினை

January 11, 2011

சமீபத்தில் தெலுங்கு பையனிடம் பெயர் கேட்ட அமெரிக்கரின் கதையை மதுரை டமில் கையின் பதிவில் படித்தேன். திருமதி.சித்ராவின் கொஞ்சம் வெட்டிப்பேச்சு வலைப்பூவுக்கு சுட்டியிருந்தார். அதையும் படித்தேன். ஒரு எண்ணம் பளிச்சிட்டது. அடங்கொக்க மக்கா! அமெரிக்காகாரங்கிட்ட பீட்டருல மாட்டிக்கிட்டு முழிக்கிறது ஒரு பெரிய சமாச்சாரம் தான்.

ஆனால் தமிழ்நாட்டில், தலைநகர் சென்னையில் தமிழ்மொழி புரியாமல் முழித்த அனுபவம் எனக்கு உண்டு. கேளுங்கள் என் கதையை தமிழ் கூறும் நல்லுலகோரே!

நான் சென்னப்பட்டணத்துக்கு வந்த புதிது. முதல் மாதம் என் மாமா வீட்டில் ஓட்டியதால் பெரிதாக நகரம் புரிபடவில்லை.  பிறகு திருமயிலையில் மேன்ஷன் பார்த்து வந்து சேர்ந்த பிறகு வார விடுமுறையில் வெளியே கிளம்பினேன். அறைத்தோழர் ஒருவர் (ராமசாமி என்று பெயர்) உடன் வந்தார். என்னைப் போல தெற்கத்திக்காரர். அவர் சென்னையில் 10 ஆண்டுகளாக இருப்பவர். நகரத்தின் போக்குத் தெரிந்தவர். முக்கியமாக நகரத்தின் மொழி புரிந்தவர்!

“முதல் தடவையா போறோமே, மங்களகரமா கபாலி கோவில் போயிட்டு அப்புறம் சுத்தாலாமே” என்றார். சரி என்று போனோம். போகிற வழியில் பொன்னம்பல வாத்தியார் தெருவில் ந்டக்கும் போது என் அம்மா சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. (கூட இருக்கிற வரை சொல் பேச்சு கேட்டதில்லை என்பது உலகோடு ஒத்து வாழ்வதற்காகச் செய்தது!) “கோவிலுக்குப் போகும் போது பூ வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லியிருந்தார். நினைவு வந்ததும் அங்கே  ஊதுபத்தி விற்கும் ஒரு பெண்மணியிடம்

“அம்மா! பூக்கடை எங்கேங்க இருக்கு?’ என்று கேட்டேன்.

வேகமாக ஏதோ சொன்னார். புரியவில்லை.

மறுபடியும் “பூக்கடை எங்கேங்கம்மா இருக்கு?’ என்று கேட்டேன்.

“தோடா! செவுடா நீ? கோயிலாண்டகிதுன்னு எத்தினி வாட்டி சொல்லுவாங்கோ” என்றார்.

“ஐயோ இல்லீங்க. நீங்க சொன்னது புரியலீங்க. அதான் கேட்டேன்”, என்றேன். (கோவையில் 9 ஆண்டுகள் இருந்த பலன்களில் மரியாதையான தமிழும் ஒன்று.) இப்போதும் பூக்கடை எங்கே என்று அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.

நண்பரிடம் கேட்டேன்,”என்ன இந்தம்மா இப்படி கோபப்படுறாங்க?”

“நீங்க கேட்ட கேள்விக்கு அந்தம்மா பதில் சொல்லியாச்சு. இப்படி பேசறதுக்கு பதிலா நான் ஊருக்குப் புதுசுன்னு தமுக்கடிகலாம்” என்று வெறுப்பேற்றின்னார்.

“புரியலைன்னாலும் புரிஞ்ச மாதிரி பாவலா காட்டணுமோ மெட்ராசுல?” என்றேன்.

அவர் விளக்கினார்,”கோயிலாண்டகிதுன்னா…. கோவிலுக்குப் பக்கத்துல இருக்குன்னு அர்த்தம். அதாவது கோவில் அண்டையில் இருக்கிறது. இப்பப் புரிஞ்சுதா” என்று சாலமன் பாப்பையா ஆக முயன்றார்.

பூக்கடைக்குச் சென்றதும் “500 பூ எவ்வளவு?” என்றேன்.

கிண்டல் சிரிப்போடு பார்த்த அந்த அம்மாள் “வெளிஊராபா உனுக்கு?” என்றார். நான் தங்கியிருக்கும் மேன்ஷனுக்கு அருகில் நடக்கும் மெஸ்ஸில் சிற்றுண்டி வாங்க தினம் வருவார் அவர். பார்த்திருக்கிறாராம்.

“எந்தூருபா?”

“ராஜபாளையம்.”

“எங்ககிதது?”

——————-!!!!!????

‘மதுரைக்கு அந்நாண்ட இருக்கு! 2 மொழம் மல்லிப்பூ குடு” என்றார் ராமசாமி.

(ஓ! ஊர் எங்க இருக்குங்கிறது தான் கேள்வியா?)

கோவிலுக்குள்ளே மொழிப் பிரச்சினை ஏதுமில்லை. என் சிவனும் நானும் சங்கத் த்மிழ் முதல் ஈழத்தமிழ் வரை, சம்ஸ்க்ருதம் முதல் C++ வரை எந்த மொழியும் பேசுவோம். எவன் கேட்பது? (மெட்ராஸ் பாஷை எனக்குத் தெரியாது. கபாலியும் கற்பகமும் நிச்சயம் பேசுவார்கள். நூற்றாண்டுகளாய் இதே ஊரில் இருக்கிறார்களே!!)

வெளியே வந்ததும் “Paris போவோமா?” என்றார் நண்பர்.

“அதை பரீ என்று தான் உச்சரிக்க வேண்டும், தெரியுமா? அது சரி! வீசா ஒடனே குடுப்பானா?” என்று வெறுப்பேற்றினேன்.

பாரீஸ் கார்னர் போனோம். சுற்றினோம். ராமசாமிக்குத் தெரிந்த கடையில் 2 T-shirtகள் வாங்கினேன். மரியாதையாகப் பேசி சில இடங்களில் ஆட்டோக்காரர்களிடம் அதிகப் பணம் கொடுக்க இருந்தேன். நண்பர் தலையிட்டு “எத்தீனி வர்சமா ஆட்டோ ஓட்டினுகிறே! நான் 10 வர்சமா கொடோன் ஸ்ட்ரீட்ல தான் கீறேன்” என்ற வகையில் பேசிக் காப்பாற்றினார்.

மறுநாள் ஆபீசுக்கு புது T-shirt அணிந்து சென்றேன். உடன் பணிபுரியும் ஒருவர் “T-shirt புச்சா மாமா?” என்றார். யோசித்துப் புரிந்து கொண்டு,” ஆமாம். புதுசு தான்” என்றேன்.

“நாசமாக்கீது மாமு” என்று சொல்லிவிட்டுப் போனார்.

காசு குடுத்து நம்ம வாங்கிருக்கோம். புடிக்கலைன்னா பேசாம போவானா………. பரதேசிப்பய இந்த வார்த்தயச் சொல்லிட்டுப் போறான்! என்று நினைத்துக் கொண்டு, மோரைக் கடைந்தால் வரும் பண்டத்தின் பெயரைச் சொல்லி அவரைத் திட்டிவிட்டு வேலையைப் பார்த்தேன்.

சற்று நேரம் கழித்து வேறொரு நபர் வந்தார்.

“T-shirt புச்சா தல?” என்றார்.

“ஆமாங்க. புதுசுதான்.” என்றேன்.

“மெய்யாலுமே நாசமாக்கிது தல!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

டேய்! வர்றவன் போறவன்லாம் இழுத்து வெச்சு லந்து பண்றீங்களாடா என்று மனதில் கறுவிக் கொண்டே வேலையை முடித்தேன்.

நடுவில் ஒருவர் தன் புதிய செல்பேசியைக் காட்டினார். 24000 ரூபாய் சோனி எரிக்சன் செட்.

“புச்சா வாங்கிகுறேன். எப்டிகிது? நாஸ்ஸமாகிதா?” என்றார்.

அட நாசமாப் போறவய்ங்க்யளா! நாசம்னா ஒங்க பாஷைல என்னடா அர்த்தம்!!!!!

மேன்ஷன் திரும்பியதும் நாசத்தைப் பற்றி ராமசாமியைக் கேட்டுத் தெளியவேண்டும், தப்பான அர்த்தம் தான்னா நாளைக்கு நாம யாருன்னு காட்டிரணும் என்ற முடிவோடு வேலை முடித்து வந்தேன்.

ராமசாமி வந்தார்.

“நாசம்னா மெட்ராஸ் பாஷைல என்ன அர்த்தம்?”

“புது T-shirt நாசமா இருக்குன்னு எவனாவது சொன்னானா?”

“ஒருத்தன் இல்லை 2  நாதாரிங்க!”

“அப்பவே சொல்லணும்னு இருந்தேன். மறந்துட்டேன். மெட்ராஸ் பாஷைல நாசம்னா நல்லதுன்னு அர்த்தம். நாசமா இருக்குன்னு சொன்னா சூப்பரா இருக்குன்னு அர்த்தம்!”

அடப் பாவிகளா! தமிழ நாசம் பண்ணிட்டீங்களேடா என்று மனதில் திட்டிக் கொண்டே ராமசாமியிடம் கேட்டேன்:

“ஓஹோ! அப்போ கல்யாண வீட்ல எப்புடி வாழ்த்தணும், மெட்ராஸ்ல?”

“இந்த நக்கலுக்கே மெட்ராசுல ஸ்கெட்சு போட்ருவான்”, என்றார் அவர்.

பின் வந்த நாட்களில் சென்னையின் பிரபல “ங்கோ” வார்த்தையை 4 வயது குழந்தைக்கு ஒருவர் சொல்லிக் கொடுக்கக் கண்டு அதிர்ந்தேன். குழந்தை அந்த வார்த்தையைச் உச்சரிப்புச் சுத்தமாய்ச் சொன்னதும் அதை அப்படிக் கொஞ்சினார்!!!

இது போன்று தமிழோடு ஏகப்பட்ட அனுபவங்கள் சென்னையில். 450 கோடி இல்லை 176000 கோடியையும் செலவு செய்து செம்மொழி மாநாடு போட்டாலும் சென்னையில் தமிழ் செழிக்க வாய்ப்பு மிகக் குறைவு தான்.


%d bloggers like this: