Posted tagged ‘தமிழகம்’

மொழிப் பிரச்சினை

January 11, 2011

சமீபத்தில் தெலுங்கு பையனிடம் பெயர் கேட்ட அமெரிக்கரின் கதையை மதுரை டமில் கையின் பதிவில் படித்தேன். திருமதி.சித்ராவின் கொஞ்சம் வெட்டிப்பேச்சு வலைப்பூவுக்கு சுட்டியிருந்தார். அதையும் படித்தேன். ஒரு எண்ணம் பளிச்சிட்டது. அடங்கொக்க மக்கா! அமெரிக்காகாரங்கிட்ட பீட்டருல மாட்டிக்கிட்டு முழிக்கிறது ஒரு பெரிய சமாச்சாரம் தான்.

ஆனால் தமிழ்நாட்டில், தலைநகர் சென்னையில் தமிழ்மொழி புரியாமல் முழித்த அனுபவம் எனக்கு உண்டு. கேளுங்கள் என் கதையை தமிழ் கூறும் நல்லுலகோரே!

நான் சென்னப்பட்டணத்துக்கு வந்த புதிது. முதல் மாதம் என் மாமா வீட்டில் ஓட்டியதால் பெரிதாக நகரம் புரிபடவில்லை.  பிறகு திருமயிலையில் மேன்ஷன் பார்த்து வந்து சேர்ந்த பிறகு வார விடுமுறையில் வெளியே கிளம்பினேன். அறைத்தோழர் ஒருவர் (ராமசாமி என்று பெயர்) உடன் வந்தார். என்னைப் போல தெற்கத்திக்காரர். அவர் சென்னையில் 10 ஆண்டுகளாக இருப்பவர். நகரத்தின் போக்குத் தெரிந்தவர். முக்கியமாக நகரத்தின் மொழி புரிந்தவர்!

“முதல் தடவையா போறோமே, மங்களகரமா கபாலி கோவில் போயிட்டு அப்புறம் சுத்தாலாமே” என்றார். சரி என்று போனோம். போகிற வழியில் பொன்னம்பல வாத்தியார் தெருவில் ந்டக்கும் போது என் அம்மா சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. (கூட இருக்கிற வரை சொல் பேச்சு கேட்டதில்லை என்பது உலகோடு ஒத்து வாழ்வதற்காகச் செய்தது!) “கோவிலுக்குப் போகும் போது பூ வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லியிருந்தார். நினைவு வந்ததும் அங்கே  ஊதுபத்தி விற்கும் ஒரு பெண்மணியிடம்

“அம்மா! பூக்கடை எங்கேங்க இருக்கு?’ என்று கேட்டேன்.

வேகமாக ஏதோ சொன்னார். புரியவில்லை.

மறுபடியும் “பூக்கடை எங்கேங்கம்மா இருக்கு?’ என்று கேட்டேன்.

“தோடா! செவுடா நீ? கோயிலாண்டகிதுன்னு எத்தினி வாட்டி சொல்லுவாங்கோ” என்றார்.

“ஐயோ இல்லீங்க. நீங்க சொன்னது புரியலீங்க. அதான் கேட்டேன்”, என்றேன். (கோவையில் 9 ஆண்டுகள் இருந்த பலன்களில் மரியாதையான தமிழும் ஒன்று.) இப்போதும் பூக்கடை எங்கே என்று அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.

நண்பரிடம் கேட்டேன்,”என்ன இந்தம்மா இப்படி கோபப்படுறாங்க?”

“நீங்க கேட்ட கேள்விக்கு அந்தம்மா பதில் சொல்லியாச்சு. இப்படி பேசறதுக்கு பதிலா நான் ஊருக்குப் புதுசுன்னு தமுக்கடிகலாம்” என்று வெறுப்பேற்றின்னார்.

“புரியலைன்னாலும் புரிஞ்ச மாதிரி பாவலா காட்டணுமோ மெட்ராசுல?” என்றேன்.

அவர் விளக்கினார்,”கோயிலாண்டகிதுன்னா…. கோவிலுக்குப் பக்கத்துல இருக்குன்னு அர்த்தம். அதாவது கோவில் அண்டையில் இருக்கிறது. இப்பப் புரிஞ்சுதா” என்று சாலமன் பாப்பையா ஆக முயன்றார்.

பூக்கடைக்குச் சென்றதும் “500 பூ எவ்வளவு?” என்றேன்.

கிண்டல் சிரிப்போடு பார்த்த அந்த அம்மாள் “வெளிஊராபா உனுக்கு?” என்றார். நான் தங்கியிருக்கும் மேன்ஷனுக்கு அருகில் நடக்கும் மெஸ்ஸில் சிற்றுண்டி வாங்க தினம் வருவார் அவர். பார்த்திருக்கிறாராம்.

“எந்தூருபா?”

“ராஜபாளையம்.”

“எங்ககிதது?”

——————-!!!!!????

‘மதுரைக்கு அந்நாண்ட இருக்கு! 2 மொழம் மல்லிப்பூ குடு” என்றார் ராமசாமி.

(ஓ! ஊர் எங்க இருக்குங்கிறது தான் கேள்வியா?)

கோவிலுக்குள்ளே மொழிப் பிரச்சினை ஏதுமில்லை. என் சிவனும் நானும் சங்கத் த்மிழ் முதல் ஈழத்தமிழ் வரை, சம்ஸ்க்ருதம் முதல் C++ வரை எந்த மொழியும் பேசுவோம். எவன் கேட்பது? (மெட்ராஸ் பாஷை எனக்குத் தெரியாது. கபாலியும் கற்பகமும் நிச்சயம் பேசுவார்கள். நூற்றாண்டுகளாய் இதே ஊரில் இருக்கிறார்களே!!)

வெளியே வந்ததும் “Paris போவோமா?” என்றார் நண்பர்.

“அதை பரீ என்று தான் உச்சரிக்க வேண்டும், தெரியுமா? அது சரி! வீசா ஒடனே குடுப்பானா?” என்று வெறுப்பேற்றினேன்.

பாரீஸ் கார்னர் போனோம். சுற்றினோம். ராமசாமிக்குத் தெரிந்த கடையில் 2 T-shirtகள் வாங்கினேன். மரியாதையாகப் பேசி சில இடங்களில் ஆட்டோக்காரர்களிடம் அதிகப் பணம் கொடுக்க இருந்தேன். நண்பர் தலையிட்டு “எத்தீனி வர்சமா ஆட்டோ ஓட்டினுகிறே! நான் 10 வர்சமா கொடோன் ஸ்ட்ரீட்ல தான் கீறேன்” என்ற வகையில் பேசிக் காப்பாற்றினார்.

மறுநாள் ஆபீசுக்கு புது T-shirt அணிந்து சென்றேன். உடன் பணிபுரியும் ஒருவர் “T-shirt புச்சா மாமா?” என்றார். யோசித்துப் புரிந்து கொண்டு,” ஆமாம். புதுசு தான்” என்றேன்.

“நாசமாக்கீது மாமு” என்று சொல்லிவிட்டுப் போனார்.

காசு குடுத்து நம்ம வாங்கிருக்கோம். புடிக்கலைன்னா பேசாம போவானா………. பரதேசிப்பய இந்த வார்த்தயச் சொல்லிட்டுப் போறான்! என்று நினைத்துக் கொண்டு, மோரைக் கடைந்தால் வரும் பண்டத்தின் பெயரைச் சொல்லி அவரைத் திட்டிவிட்டு வேலையைப் பார்த்தேன்.

சற்று நேரம் கழித்து வேறொரு நபர் வந்தார்.

“T-shirt புச்சா தல?” என்றார்.

“ஆமாங்க. புதுசுதான்.” என்றேன்.

“மெய்யாலுமே நாசமாக்கிது தல!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

டேய்! வர்றவன் போறவன்லாம் இழுத்து வெச்சு லந்து பண்றீங்களாடா என்று மனதில் கறுவிக் கொண்டே வேலையை முடித்தேன்.

நடுவில் ஒருவர் தன் புதிய செல்பேசியைக் காட்டினார். 24000 ரூபாய் சோனி எரிக்சன் செட்.

“புச்சா வாங்கிகுறேன். எப்டிகிது? நாஸ்ஸமாகிதா?” என்றார்.

அட நாசமாப் போறவய்ங்க்யளா! நாசம்னா ஒங்க பாஷைல என்னடா அர்த்தம்!!!!!

மேன்ஷன் திரும்பியதும் நாசத்தைப் பற்றி ராமசாமியைக் கேட்டுத் தெளியவேண்டும், தப்பான அர்த்தம் தான்னா நாளைக்கு நாம யாருன்னு காட்டிரணும் என்ற முடிவோடு வேலை முடித்து வந்தேன்.

ராமசாமி வந்தார்.

“நாசம்னா மெட்ராஸ் பாஷைல என்ன அர்த்தம்?”

“புது T-shirt நாசமா இருக்குன்னு எவனாவது சொன்னானா?”

“ஒருத்தன் இல்லை 2  நாதாரிங்க!”

“அப்பவே சொல்லணும்னு இருந்தேன். மறந்துட்டேன். மெட்ராஸ் பாஷைல நாசம்னா நல்லதுன்னு அர்த்தம். நாசமா இருக்குன்னு சொன்னா சூப்பரா இருக்குன்னு அர்த்தம்!”

அடப் பாவிகளா! தமிழ நாசம் பண்ணிட்டீங்களேடா என்று மனதில் திட்டிக் கொண்டே ராமசாமியிடம் கேட்டேன்:

“ஓஹோ! அப்போ கல்யாண வீட்ல எப்புடி வாழ்த்தணும், மெட்ராஸ்ல?”

“இந்த நக்கலுக்கே மெட்ராசுல ஸ்கெட்சு போட்ருவான்”, என்றார் அவர்.

பின் வந்த நாட்களில் சென்னையின் பிரபல “ங்கோ” வார்த்தையை 4 வயது குழந்தைக்கு ஒருவர் சொல்லிக் கொடுக்கக் கண்டு அதிர்ந்தேன். குழந்தை அந்த வார்த்தையைச் உச்சரிப்புச் சுத்தமாய்ச் சொன்னதும் அதை அப்படிக் கொஞ்சினார்!!!

இது போன்று தமிழோடு ஏகப்பட்ட அனுபவங்கள் சென்னையில். 450 கோடி இல்லை 176000 கோடியையும் செலவு செய்து செம்மொழி மாநாடு போட்டாலும் சென்னையில் தமிழ் செழிக்க வாய்ப்பு மிகக் குறைவு தான்.

குஷிமிகு குஜராத்!

December 30, 2010

Business India ஜனவரி 9, 2011 தேதியிட்ட இதழைப் படித்துக் கொண்டிருந்த் போது “குஜராத்: வணிகத்தின் கனவு இலக்கு” என்று ஒரு கருத்தாய்வு படித்தேன். (அது பற்றிப் பிறகு சொல்வேன்) நிஜமாகவே தமிழகம் அப்படி வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது.  நரேந்திர மோடி நல்லபடியாக ஆள்கிறார் என்று சொன்னாலே வடிவேலு மாதிரி “அவனா நீயி?” என்று கேட்கும் தமிழக அறிவுஜீவிகள் இதை செரிக்கத் திணறுவார்கள். ஜெயலலிதாவின் 2001-06 ஆட்சி நன்றாக இருந்தது என்று சொன்னாலே சொன்னவரையும் அவரையும் சாதி சொல்லித் திட்டும் பகுத்தறிவுப் பெட்டகங்கள், மோடியை எப்படி ஏற்பார்கள் .

கோடிகளில் கொள்ளை அடித்தவர்களையும் சாதி சொல்லிக் காப்பாற்றத் துணியும் பகுத்தறிவுப் புலிகளையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படி ஒரு முதல்வர் என்பது ஆச்சரியம்தான். இந்தியாவில் இப்படி ஒரு வளர்ச்சிப்பணி ஆற்றும் முதல்வர் என்பது குறித்துப் பெருமைப்பட்டாலும், தமிழகத்தில் இப்படி இல்லை என்பது பொறாமை தருகிறது. (ஜெ.  20011ல் மீண்டு(ம்) வந்து விட்டதைப் பிடிப்பார் என நம்பலாம்!)

24 மணிநேரம் மின்சாரம் இருக்கிறது. (அப்படின்னா?) விவசாயம் செழிக்கிறது. (ஓஹோ?) அது கிடக்கட்டும். கோத்ராவில் மோடி பலரைக் கொன்றார் தெரியுமா என்பர். தீஸ்தா செதல்வாட் போராடுகிறாரே தெரியுமா என்பர். அவர்கள் சில நாட்டு நடப்புகளை வசதியாக மறப்பர் அல்லது மறைப்பர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை கோத்ரா கலவரத்திற்கு நரேந்திர மோடி  காரணமில்லை என்று தெரிவித்திருக்கிறது.  அவர் தமது அரசியல் சாசனக் கடமைகளில் இருந்து வழுவி மக்களைக் காக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு  குற்றத்தில் சிக்கவைக்கும் பொருண்மைகள் போதுமான அளவில் இல்லை என்பது சிறப்பு புலனாய்வுக் குழு கண்டு சொல்கிற உண்மை.

இதை உண்மை என்று எப்படிச் சொல்வாய்? மோடி செய்யவில்லை என்பதை நீ நேரில் பார்த்தாயா என்று கேட்போர் நிற்க.  சிறப்பு புலனாய்வுக் குழு நரேந்திர மோடியை மணிக்கணக்கில்  விசாரித்த பிறகே அறிக்கை அளித்தது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு தீர விசாரித்துச் சொன்ன செய்தியில் பொய் இருக்க வாய்ப்பே இல்லை.

தவிரவும், குஜராத் கலவரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வு நீதிமன்றத்தில் பல கற்பனைப் புனைவுகள் கலவர நிகழ்வுகள்  என வாக்குமூலங்களாக வரிசைகட்டி வருகின்றன. இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் ஜாவேத் என்கிற சமூக சேவகி அம்மையார் மிகவும் தீவிரமாக இறங்கி வேலை செய்கிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனமும் நடத்துகிறார். நன்கொடைகள் தாராளமாக வரிவிலக்கெல்லாம் காட்டி வாங்கிக் கொள்ளவும் செய்கிறார்.

அவர் செய்யும் தொண்டு பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துவோர் பெயரில் இவரே இட்டுக்கட்டிய கொடூரக் கொலைக் கதைகளைக் (cooking up macabre tales of killings) கலவர நிகழ்வுகள் என்று பிரமாண வாக்குமூலமாக சமர்ப்பிப்பது. தொண்டு நிறுவனம் என்பதால் ஏதாவது உதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், “கடையை எரிச்சுப்புட்டங்க, வீட்டைக் கொளூத்திப்புட்டாங்க, உதவி செய்யுங்கம்மா!” என்று வருவோரிடம் பேர் ஊர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு,அவர்களிடம் வெற்றுத் தாட்களில் கையொப்பமும் பெற்று, “துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்” என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார்.
(http://www.dailypioneer.com/281457/%E2%80%98Teesta-drafted-affidavits-didnt-divulge-contents.html)

பலருக்குத் தங்கள் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதே தெரியவில்லை. அப்படிக்  ‘கலவரத்தில் பாதிக்கப்பட்டோரை’ விசாரித்த போது உளறிக் கொட்டி, கடைசியில் வாக்குமூலத்தைப் பற்றி தமக்கேதும் தெரியாது என்றும் ‘அந்தம்மா’ சொன்னதைத் தான் தாங்கள் சொல்வதாகவும் கூறியுள்ளனர். என் பெயரில் எப்படி இல்லாத கதைகளைக் கட்டுவாய் என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சமூக சேவகி அம்மையார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தீஸ்தா அம்மையாரிடம் உதவியாளராய் வேலை பார்த்த ரயிஸ்கான் பதான் என்பவர் தமக்குத் தெரியாமல் தம் பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும், தம் பெயரில் மேற்கூறிய மோசடிகளைச் செய்ததாக சிறப்புப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அறிவு ஜீவிகள் பலர் செதல்வாட் அம்மையாருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை வைத்து “கவலைகொண்ட மக்கள் தீர்ப்பாயம் (Concerned Citizens Tribunal)” ஒன்றை அமைத்து, “சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் சங்பரிவார் அமைப்பினர் குற்றமிழைத்தனர். நரேந்திர மோடி கலவரத்திற்குத் திட்டம் தீட்டி, குற்றவாளிகளுக்குத் தலைமை தாங்கினார்” என்று தீர்ப்பளித்தனர்.

இது அம்மையாரின் தொண்டு நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர்களின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காட்சிப்பிழை என்பதும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்கள் செதல்வாட் அம்மையார் சமைத்துத் தந்தவை என்பது இப்போது தெரிய வருகிறது.

ஆக ஊடகங்கள் பதிவு செய்தவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அறிவுஜீவிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதுவும் புலனாகிறது. Some vested interests are striving so hard to keep the people and truth in dark என்பது ஐயம். தீஸ்தா அம்மையார் கூறும் குற்றச்சாட்டுகள் திரிபற்றவை என்று தெளிவாகும் வரை இந்த ஐயம் தொடரும்.

தற்போது நீதிமன்றத்தில் தீஸ்தா அம்மையாரால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறி, அடிப்படையே அடுக்கப்பட்ட பொய் எனும் போது கிட்டவோ தட்டவோ அவற்றை ஏற்பது இகழ்ச்சி.

(இது குறித்து நான் தமிழ் பேப்பர், தமிழ் ஹிந்து ஆகிய தளங்களிலலிட்ட பின்னுட்டங்களில் தட்டெழுதிய சில வாசகங்கள் அப்படியே இங்கிருக்கும். )

என் கேள்வி:

நரேந்திர மோடி குஜராத்தை 9 ஆண்டுகள் ஆண்டு மாநிலத்தின் பொருளாதார, வாழ்க்கைத்தர வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கிறார். ச்.  மத்திய அரசு எதிர்க்கட்சி, ஊடகங்கள் அவரை நிரந்தரக் குற்றவாளி என்கின்றன. இருப்பினும் மாநில மக்கள் நலன் முன்வைக்கப்பட்டு மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் மோடி.

கருணாநிதிக்கு இந்தத் ‘தகுதி’ எதுவுமே இல்லை. மத்திய் அரசில் 12 ஆண்டுகளாகப் பங்கு வகிக்கிறார். குற்றச்சாட்டுகள் இருக்கின்றன, ஆனால் வழக்கு விசாரணை எல்லாம் மருந்துக்குக் கூடக் கிடையாது.  ஊடகங்கள் அவரை பாசம் நேசம் இவையெல்லாம் மிகுந்து போற்றுகின்றன. 50 ஆண்டுகால அரசியல் அனுப்பவம் வேறு. நிர்வாகத்தில் சூரப்புலி என்று பெயர் பெற்றிருக்கிறார்.

ஆனாலும் தமிழகம் எந்தக் கருத்தாய்விலும் முதலிடம் பெறவில்லையே ஏன்? நமக்கு நாமே திட்டம் தான் இதற்கு ஒத்துவருமோ?


%d bloggers like this: