தில்லுமுல்லு – A film by UPA-II

176000 கோடி 2G அலைக்கற்றை ஊழல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுச் சற்றே மக்கள் கண்களுக்கு மறைவாக இருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் (ரூ.70000 கோடி) பற்றிய விசாரணையில் ஒரு தில்லாலங்கடித் தில்லுமுல்லு நடந்திருக்கிறது. அது இந்த அரசு துறைசார்ந்த மற்றும் அமைச்சரவை சார்ந்த என்று எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் என்று குற்றச்சாட்டு வந்ததும் வழக்கம் போல மறுத்து, இலண்டனில்  உள்ள இந்திய தூதரகத்து மக்கள் சொல்லித் தான் செய்தேன் என்று கல்மாதி சொல்ல, எங்களை வம்புக்கிழுத்தால் கல்மாதிக்குக் கருமாதிதான் என்று தூதரகம் மிரட்ட, ஒரு வழியாக விளையாட்டுப் போட்டிகள் முடிந்துவிட்டன. ஊழல் விசாரணைக்கு அதிகாரமில்லை என்று ஒரு ஆட்டம் ஆடி, வேறு வழியில்லை என்றதும் கட்சிப் பதவியைத் துறந்தார் கல்மாதி.

இந்திய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இன்னும் அவர் தான் தலைவர்! இவர் ஏதோ கட்சிப் பணத்தைச் சாப்பிட்ட மாதிரி கட்சிப் பதவியை விட்டு தூக்கி விட்டால் சரியா என்று கேட்கக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான். நீங்கள் ஆர் எஸ் எஸ், பாஜக ஆதரவாளராக, மதவெறியராக முத்திரை குத்தப்படுவீர்கள். தமிழகத்தில் ஆ.ராசாவை எதிர்ப்போர் தலித் எதிரிகள் என்று சொல்லவில்லையா? தமிழக அளவில் சாதிவெறி முத்திரை என்றால் என்றால், தேசிய அளவுக்கு ஒரு மதவெறி முத்திரை.

ஒரு கட்டத்தில் இனி முடியாது என்ற போது மாண்புமிகு பாரதப் பிரதமர் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்தார். V.K .ஷுங்க்லு (பெயர் ஆந்திராக் காரர் போல  இருக்கிறது. எந்த ஊர்க்காரர் தெரியவில்லை)என்பவர் தலைமையிலான அந்தக் குழு நிதி முறைகேடுகள் பற்றி விசாரிக்கும், அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்படி முடிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று சிங்கமாய்க் கர்ஜித்தார் இந்த அப்பழுக்கற்ற நேர்மைச் சிங்கனார்.

இந்த V.K .ஷுங்க்லு 8 ஆண்டுகளுக்கு முன்பு CAG ஆக இருந்து ரிடையர் ஆனவர். ஆ.ராசா வெவரத்தின் சிகரமாக வாரிக் கொடுத்தால் நாடு இழந்தது 176000 கோடி என்று கணக்குச் சொன்னதும்,  “இவர்கள் எப்படி எழுதுவார்கள் தெரியாதா என்று இலக்கிய விமர்சனம் போல ஆரம்பித்து, அவர்கள் எழுதுவது இறுதித் தீர்ப்பல்ல” என்று இறுதியில் சட்டபூர்வமாகத் தமிழக முதல்வர் விமர்சித்தாரே… அதே  CAG தான்.

இதில் ஆதாய முரண் இருப்பதாக ஒரு புதிய பூதம் கிளம்பியது. (conflict of interest என்பதற்குத் தமிழ்ச் சொல் தேடியபோது விக்சனரியில் கிடைத்தது இந்தச் சொல்.  அருஞ்சொற்பொருள்:பொதுப் பொறுப்பில் உள்ள ஒருவர், அப்பொறுப்பு தனக்களிக்கும் அதிகாரத்தால் தனிப்பட்ட லாபத்தை அடையக்கூடிய சூழ்நிலை ஆதாய முரண் எனப்படுகிறது.) ஷுங்க்லுவுக்கு என்ன ஆதாயம் இதில்?

அது புரிய சற்றே பின்னோக்கி வரலாற்றைப் பார்த்தல் அவசியம். சத்யம் கம்பியூட்டர் நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டு அதன் ஆடிட்டர்கள் கூட கூடச் சேர்ந்து ஆடிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது நினைவிருக்கலாம். அந்த சத்யம் நிறுவனத்துக்கு ஆடிட்டர் வேலை பார்த்த PwC (Price waterhous Coopers) என்ற நிறுவனம் தன் பறிபோன நற்பெயரைத் மீட்டெடுக்க சற்றே பெரிய மூளைக்கார மனிதர்களை தனக்கு ஆலோசகர், இயக்குநர் என்று நியமித்துக் கொண்டது.

அத்தகைய பெரிய மூளைக்கார மனிதர்களில் ஒருவர் தான் ஷுங்க்லு. நாடு முச்சூடுக்கும் கணக்கு வழக்குப் பார்த்தவர் என்பதால் அவரை கரம் கூப்பி அழைத்து உட்கார வைத்துக் கொண்டது  PwC. இந்த PwC டில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (DDA) காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கியது.  அந்த மாதிரி ஏதாவது ஆதாய முரண் இருந்தால் நான் PwC வேலையை விட்டுவிடுவேன் என்றால் ஷுங்க்லு.

ஷுங்க்லுவுக்கு தரப்பட்ட விசாரணை வேலை DDA செய்த முறைகேடுகளையும் சேர்த்தே இருக்கிறது. இது போக நிர்வாக சீர்கேடு, நிதி மோசடி, தேவையற்ற செலவு, தரமற்ற கட்டுமானம் இவையெல்லாம் அவர் விசாரணை வளையத்தில் வருகிறது. இது போக Queen’s Baton Relay ஓட்டத்துக்கு PwC ஆலோசகர் பணிக்கு விண்ணப்பித்திருந்தது, ஆனால் கிடைக்கவில்லை. இதையும் சேர்த்தே அவர் விசாரிப்பார். தான் சார்ந்த நிறுவனம் தோற்ற ஒரு விஷயத்தை அவர் விசாரிப்பது நியாயப்படி செல்லாது.

மேலும் அரசியல் சாசனத்தின் Article 148(4) இப்படிச் சொல்கிறது.  “The Comptroller and Auditor General of India shall not be eligible for further office either under the government of India or under the government of any state after he has ceased to hold office.” அதாகப்பட்டது, தலைமைக் கணக்குப்பிள்ளை ஓய்வு பெற்ற பிறகு மையஅரசும் அல்லது அது சார்ந்ததுமான பணிகளையோ பொறுப்புகளையோ, எந்த மாநில அரசும் அல்லது அவை சார்ந்ததுமான பணிகளையோ பொறுப்புகளையோ ஏற்கக் கூடாது. ஷுங்க்லுவோ தான் இந்த விசாரணை வேலைக்காகச் சம்பளம் என்று பைசா வாங்கவில்லை அதனால் இந்தப் பொறுப்பை ஏற்றது தவறல்ல என்கிறார்.

மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற (நீதி தவறாத) நீதிபதிகள் இது அரசியல் சாசனத்தின் எழுத்தைப் பிடித்துக் கொண்டு நோக்கத்தைக் கைவிடும் செயல் என்கின்றனர். மற்ற சில வழக்கறிஞர்கள் அதெல்லாம் தப்பில்லை, அதான் பைசா வாங்கலையே என்கின்றனர். இப்படி ஓய்வுக்குப் பின் பணிஏற்கக்கூடாது என்று சொன்னதே ஓய்வுக்குப் பின் பெரிய பொறுப்பு கிடைக்கும் என்று ஆசைகாட்டி CAG முதலிய பொறுப்பான பதவியில் இருப்போரை ஆளும் அரசு ஆட்டி வைக்கக்கூடாது என்பதற்காகத்தான்.  ஆக அரசியல் சாசனத்தின் நோக்கத்தை நோகாமல் காற்றில் விட்டிருக்கிறார்கள் இதில்.

பிரதமர் அலுவலகம் வழக்கம் போல “அப்படியா? ஆதாய முரணா? அமைச்சரவை செயலர் என்ன ஏது என்று பார்த்துச் சொல்வார். கொஞ்சம் பொறுங்கள்” என்றது. அக்டோபரில் இருந்து இன்னும் அமைச்சரவை செயலர் பார்த்துக் கொண்டேருக்கிறார். இன்றுவரை எதையும் சொல்லக் காணோம்.

CBI, CVC போன்ற விசாரணை நிறுவனங்கள் கல்மாதியும் அவர் சார்ந்தோரும் ஒத்துழைப்பு என்றால் என்ன பண்டம் என்று கேட்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்க, ஷுங்க்லு மட்டும் “யாரிடமும் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு முப்பது நாப்பது பேரை இதுவரை விசாரிச்சுட்டேன். நல்லாவே ஒத்துழைக்கிறாங்க” என்கிறார். CBI, CVC இவர்களுக்கெல்லாம் விசாரிக்கத் தெரியாதா, இல்லை ஷுங்க்லு ஏதாவது தனிச்சிறப்புமிக்க முறையில் விசாரித்தாரா? (அறிக்கையில் விசாரணை முறை பற்றியும் சொல்வார் என்று நம்புவோம்.)

இதைவிட அவர் செய்த இன்னொரு செயல் தான் அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. “இதுக்கும் மேல என்னத்த செஞ்சிருக்கப்போறாரு” என்று நினைப்போர் சற்றே நிற்க.

நம்ம சுரேஷ் கல்மாதி இன்னும் தலைவராக இருக்கும் இந்திய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு என்று கணக்கு வழக்கைப் பார்க்க ஒரு ஆடிட்டர் நிறுமம் இருக்கிறது. தினேஷ் மேத்தா & கோ என்று பெயர். நம்ம ஷுங்க்லு நேராக அந்த நிறுவனத்திடம் போய் “இந்தமாதிரி இந்தமாதிரி கையாடல் நடந்து போச்சாம். அதை தணிக்கை செய்ய பிரதமர் சொல்லிருக்காரு. அதுக்கு கணக்கு புத்தகங்களை தணிக்கை செய்ய நீங்க உதவி செய்யணும்” என்று கேட்டார். இது தப்பில்லையா என்று கேட்டால் “மொத்தமா ஒரு 50 பேர் வேலை செய்வாங்க என் விசாரணைக் கமிட்டில. அதுல தினேஷ் மேத்தா & கோ காரங்க ஒரு 5% இல்ல 6% தான் இருப்பாங்க. இதப் போயி பெருசா பிரச்சினைன்னு பேசிக்கிட்டு…. சோலி கீலி இருந்தா பாருங்கப்பா” என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

களவாடியது பற்றி விசாரிக்க கல்மாதியின் ஆடிட்டர், சுருட்டியது பற்றி கோர்ட்டில் பேச ஆ.ராசவின் வக்கீல்…. இன்னும் 2G பற்றித் தனியே கபில்சிபல் ஒரு நீதிபதியைக் கொண்டு விசாரிக்கிறார். அதில் என்ன கோக்குமாக்கு இருக்கிறதோ? தில்லுமுல்லுகளை மறைக்க மேலும் மேலும் தில்லுமுல்லுகளைச் செய்து இவர்கள் திருந்தாத ஜென்மங்கள் என்று நிரூபித்து வருகிறார்கள்.

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் திருந்தியாகணும்….. எழுதிய கவிஞர் வாலி சொல்வாரா எப்போது என்று!!!

Explore posts in the same categories: அரசியல்

Leave a comment